கலைவாணி என்றிருந்த பெயர், திருமணத்திற்கு பின், வாணி ஜெயராம் என்று மாறியது. மும்பையில், வீட்டிலிருந்து நடந்து போகும் துாரத்தில் தான், அவர் வேலை செய்த வங்கியின் கிளை இருந்தது. அதனால், குடும்பத்தையும் கவனித்து, வேலைக்கு செல்வது அவ்வளவு கடினமாக இருக்கவில்லை.
அதிகாலை எழுந்து, சமையல் வேலைகளை முடித்து, கணவரை ஆபீசுக்கு அனுப்பி, தானும் கிளம்பி வங்கிக்கு போவார். திரும்ப மதியம், உணவு வேளையில் வீட்டுக்கு வந்து, அம்மா - அப்பாவுக்கும் (மாமியார் - மாமனாரை அப்படித்தான் அழைப்பார்) அவரது கணவருக்கும் (கணவர் அலுவலகமும் வீட்டிலிருந்து நடந்து போகும் துாரம் என்பதால், அவரும் மதிய சாப்பாட்டுக்கு வீட்டுக்கு வந்துவிடுவார்) சாப்பாடு பரிமாறி, தானும் சாப்பிட்டு, மறுபடி வேலைக்கு கிளம்பி விடுவார்.
மாலை வீட்டுக்கு வந்து, இரவு சமையலை செய்வார். இவ்வாறு, தினசரி வாழ்க்கை போய் கொண்டிருந்தது.
ஒருநாள், அவரது கணவர், 'எனக்காகவும், அப்பா - அம்மாவுக்காகவும் நீ இவ்வளவு துாரம் எல்லாமே செய்யிறே. எவ்வளவு அழகா பாடக் கூடியவ நீ. அத, 'வேஸ்ட்' பண்ணக் கூடாது. நீ ஏன் ஹிந்துஸ்தானி இசை கத்துக்கக் கூடாது...' எனக் கேட்டார்.
அதுமட்டுமின்றி, அவரும், அவருடைய சித்தார் மாஸ்டரும், ஹிந்துஸ்தானி லைட் கிளாசிகல் கற்றுக் கொள்ள, உஸ்தாத் அப்துல் ரஹ்மான் சாஹேப்பிடம் வாணி ஜெயராமை அழைத்து போயினர். அடுத்த நாளிலிருந்து வாணிக்கு, ஹிந்துஸ்தானி பயிற்சி ஆரம்பமானது.
வாணி, வேலைக்கு சென்றதால், விடுமுறை நாட்களான சனி, ஞாயிறில் மட்டுமே ஹிந்துஸ்தானி சங்கீத பயிற்சி நடந்தது. ஆனால், வாணியின் சங்கீத ஈடுபாடும், சொல்லிக் கொடுக்கும்போதே சட்டென்று கற்றுக்கொள்ளும் வேகமும், அவருக்கு பெரிய எதிர்காலம் இருப்பதை உணர்ந்தார், குரு.
'வாரத்துக்கு இரண்டு நாள் பயிற்சி போதவே போதாது. நீ ஒழுங்கா முழுமூச்சா ஹிந்துஸ்தானி கத்துக்கிட்டாதான் நல்லது. அதனால, நீ வேலையை விட்டுட்டு மியூசிக்கில் முழுசா இறங்கணும்...' என்று, சொல்லி விட்டார்.
குரு சொல்வது போல், சங்கீதத்தில் தன்னை அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம், வாணியில் உள்ளம் முழுவதிலும் நிறைந்திருந்தது.
வங்கி வேலையை விட்டுவிட்டு, சங்கீதத்தில் முழுமூச்சாக இறங்கட்டுமா என, கணவரிடம் கேட்டார்.
'கலைன்றது எல்லாருக்குமே வராது... அது, இறைவன் கொடுத்த வரம். உனக்கு என்ன தோணுதோ அதையே செய்...' என்று, அவரின் எண்ணத்துக்கு பக்கபலமாக இருந்து, பச்சைக்கொடி காட்டி விட்டார், ஜெயராம்.
அதன் பின், வாணியின், ஹிந்துஸ்தானி இசை பயிற்சி, தினமும் காலை, 10:00 மணியிலிருந்து மாலை, 6:00 மணி வரை நடந்தது.
ஆறு மாத தீவிர பயிற்சிக்குப் பின், 'உனக்கு நான் கொடுத்த பயிற்சி போதுமானது. நீ, சினிமாவில் பின்னணி பாட போனா பிரமாதமா வருவே'ன்னு சொல்லி, ஆசிர்வாதம் செய்தார், குரு.
பின் அவரே, புகழ்பெற்ற மியூசிக் டைரக்டர், வசந்த் தேசாயிடம் வாணியை பற்றி கூறினார். உடனே, வாணியின் பாட்டை கேட்க, அவரை அழைத்தார், வசந்த் தேசாய்.
இதுகுறித்து வாணி கூறுகையில், 'நானும், கணவரும் அவரை சந்தித்தோம். அடுத்த நாளே, அவர் இசையமைத்த ஒரு மராட்டிய நாடகத்துக்காக, ஒரு பாட்டு பாடினேன். அந்த பாட்டை ஸ்டுடியோவில், 'ரெக்கார்ட்' செய்தனர். அப்போதுதான் ரிஷிகேஷ் முகர்ஜி சாரும், குல்சார் அவர்களும், குட்டி ஹிந்தி படம் எடுக்க, 'பிளான்' செய்திருந்தனர்.
'அவர்கள் இருவரும் வசந்த் தேசாய் சார் வீட்டுக்கே வந்து, என்னை பாடச்சொல்லி கேட்டுட்டு, 'இந்தப் படத்தில் வரும் மூன்று பாடலையும் வாணியே பாடட்டும்'ன்னு சொல்லிட்டாங்க. இப்படித்தான், டிச., 22, 1970ல், சினிமாவுக்காக நான் பாடின முதல் ஹிந்தி பாடல் பதிவு செய்தனர்...' என்றார்.
கடந்த, 1971ல் வெளியான, குட்டி ஹிந்தி திரைப்படத்தில், வாணியின் குரலில் வந்த அத்தனை பாடல்களுமே, 'சூப்பர் ஹிட்!' இன்றும் கூட அந்த படத்தில் அவர் பாடிய, 'ஹம் கோ மன்கி...' என்ற பாடல், வட மாநிலங்களில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் இறை வணக்க பாடலாக உள்ளது.
மற்றொரு பாடலான, 'போலு ரே பாப்பி ஹரா' பாடல், வரலாறு காணாத சரித்திரத்தையே படைத்தது.
'போலு ரே பாப்பி ஹரா...' பாட்டின் மூலம் வாணியின் சிறு வயது கனவு பலித்தது. ஆம்... அக்காலத்தில் உலகம் முழுவதும் புகழ்பெற்ற, 'பினாகா கீத் மாலா' நிகழ்ச்சியில் முதலிடத்தை பிடித்தது, அப்பாடல். அதுவும் தொடர்ந்து அதே முதலிடத்தில், 16 வாரங்கள் இருந்தது.
— தொடரும்.
'கடந்த, 2014ல் வெளியான, 1983 என்ற மலையாள படத்தில், நான் பாடிய, 'ஓலன்ஞாலி குருவி' என்ற பாட்டு, இப்போது வரைக்கும் சூப்பர் டூப்பர் ஹிட். அதே மாதிரி, ஆக் ஷன் ஹீரோ பிஜு என்ற மலையாள படத்தில், 'பூக்கள் பனிநீர் 'ன்னு ஒரு பாட்டு பாடினேன். அந்த பாட்டுக்கு, நியூயார்க்கில், 'நார்த் அமெரிக்கன் பிலிம் அவார்ட்ஸ் ' நிகழ்ச்சியில், சிறந்த பெண் பாடகி விருது கிடைத்தது. அதற்காக, அமெரிக்கா போய் விருதை வாங்கிட்டு வந்தேன். புலி முருகன் படத்தில், டைட்டில் பாடல் பாடி இருக்கேன். இந்த மாதிரி மலையாளத்துல சமீபத்துல நான் பாடின பல பாடல்கள், சூப்பர் ஹிட்...' என்கிறார், வாணி.
* திரை இசை மட்டுமல்லாமல், பக்தி சங்கீதத்திலும் பல்லாயிரக்கணக்கான கச்சேரிகள்
செய்திருக்கிறார், வாணி ஜெயராம். ஒரு கட்டத்தில், கர்நாடக சங்கீதம், திரை இசை, ஹிந்துஸ்தானி சங்கீதம் என்று, மூன்று தளங்களிலும் பயணித்த ஒரே பாடகி, இந்தியாவிலேயே வாணி ஜெயராம் மட்டும் தான். இந்த பெருமை, இந்தியாவிலேயே வேறு எந்த பின்னணி பாடகிக்கும் கிடையாது.
ஸ்ரீவித்யா தேசிகன்