அந்துமணி பா.கே.ப.,
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 அக்
2021
00:00

பா - கே

வியாழக்கிழமை மாலை-
லென்ஸ் மாமா, 'திண்ணை' நாராயணன், குப்பண்ணா, எழுத்தாளர் நண்பர் அனைவரும், அலுவலக மொட்டை மாடியில் கூடியிருந்தனர். இஞ்சி டீ கேட்டதால், பிளாஸ்கில் வாங்கி, மொட்டை மாடிக்கு சென்றேன்.
அலுவலகத்தின் கீழ் பகுதியில் இயங்கும், மற்றொரு நிறுவனத்தின் கேன்டீனில், கீரை வடை போடுவது வழக்கம். வாசனை மூக்கை துளைக்கவே, லென்ஸ் மாமா, வடை வாங்கி வர சொன்னார். சுடச்சுட கீரை வடையும், இஞ்சி டீயும் சாப்பிட்டபடியே, நடந்து முடிந்த ஒலிம்பிக் போட்டி பற்றி பேசிக் கொண்டிருந்தனர்.
இதில் கலந்து கொள்ளாமல், நாராயணன் சார், தன்னுடைய ஜோல்னா பையில் எதையோ துழாவிக் கொண்டிருந்தார்.
'ஓய் நாணா... எப்ப பாரு என்ன, ஜோல்னா பைய துழாவிக்கிட்டு... பொக்கிஷம் ஏதாவது வைத்துள்ளீரா?' என, சீண்டினார், மாமா.
'இல்லப்பா... இன்று காலை, கன்னிமரா நுாலகத்திற்கு சென்றிருந்தேன். அங்கு, 'உலக மொழிகளில் தமிழின் தாக்கம்' என்ற, ஆய்வு நுால் ஒன்று கண்ணில் பட்டது. அதை, மணிக்கு படிச்சு காட்டலாம்ன்னு எடுத்து வந்தேன்...' என்று இழுத்தார்.
'ஏதோ மேட்டர் கிடைக்கப் போகிறது...' என்று, அவரையே பார்த்தேன்.
படிக்க ஆரம்பித்தார், நாராயணன்:
கொரியாவுக்கும் (வட - தென் கொரியா இரண்டுமே), தமிழுக்கும் தொடர்பு உண்டு என்கிறார், கொரிய மொழி ஒப்பீட்டாளரான, காங் கில். இதே கருத்தை பலரும், உறுதிபடுத்தி உள்ளனர்.
இவர்களின் கூற்றுப்படி, 1,300 கொரிய மொழி வார்த்தைகள், தமிழுடன் ஒத்துப்போகின்றனவாம். இதில், 500 வார்த்தைகள் தமிழிலும், கொரிய மொழியிலும் ஒரே அர்த்தம்.
உதாரணமாக,
தமிழ் - கொரியா
அப்பா - அப்பா
அம்மா - ஒம்மா
புல் - புல்
அண்ணி - அண்ணி
நாள் - நாள்
சண்டை - சண்டா
நான் - நான்
உள்ளே வா - இலிவா
இதுபோன்று பல வார்த்தைகள் உள்ளன. இதற்கு என்ன காரணம் என்று ஆராய்ந்த போது, கிடைத்த தகவல் ஆச்சரியம் அளிக்கிறது. கொரியாவின், 'சம்குக் யுசா' என்ற மிகப்பழமையான நுால் ஒன்று, தற்போது கிடைத்துள்ளது.
அதில், அயுதா என்ற இடத்திலிருந்த, இந்திய இளவரசியை, கொரியாவை ஆண்டு வந்த, கிம்சுரோ என்ற மன்னனுக்கு திருமணம் செய்து வைத்தனர். அவரே பட்டத்து ராணியாக திகழ்ந்தார்.
திருமணத்திற்கு பின், அவள் பெயர், சுரி ரத்னா என்றும், ஹியோ குவாங் ஏக் என்றும் மாற்றப்பட்டது.
இந்த ஜோடிக்கு, மொத்தம், 12 குழந்தைகள் பிறந்தன.
கொரியாவில் மொத்த ஜனத்தொகையில், 60 லட்சம் பேர், தங்களை இந்த மன்னன் - ராணியின் வழிவந்தவர்கள் என்று கூறிக் கொள்கின்றனர்.
இளவரசி இருந்த அயுதா என்ற பகுதி, அயோத்தியா என எடுத்துக் கொள்ளப்பட்டு, 2001ல், உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள அயோத்தியில், ராணி சுரி ரத்னாவிற்கு நினைவு மண்டபம் கட்டப்பட்டது. இன்றும், இந்தியா வரும், கொரிய நாட்டு சுற்றுலா பயணியர் பலர், சுரி ரத்னாவின் நினைவு மண்டபத்துக்கு சென்று, வழிபட்டு செல்கின்றனர்.
இந்திய தபால் துறை, 2019ல், ராணி சுரி ரத்னாவின் படம் பொறித்த தபால் தலையை வெளியிட்டு சிறப்பித்தது.
உண்மையில், அயுதா என்பது, கன்னியாகுமரியை குறிக்கும் என்று கூறுகின்றனர், ஆய்வாளர்கள். எனவே, ராணி சுரி ரத்னாவும், தமிழகத்தை சேர்ந்தவர் என்கின்றனர். ஆனாலும், இதை நிரூபிப்பதற்கு கொரியாவிலும், இந்தியாவிலும் போதிய ஆதாரங்கள் இல்லை.
- நாராயணன் சார், படித்து முடித்ததும், அயோத்தியாவுக்கு லாபம்; தமிழுக்கும், கன்னியாகுமரிக்கும் நஷ்டம் என்று வருத்தப்பட்டார், குப்பண்ணா.
'நாராயணன் சார்... பூமி உருவான ஆரம்ப காலத்தில், கடல் பரப்பு தவிர, நிலப்பகுதி முழுக்க, ஒன்றோடொன்று இணைந்திருந்தது. அதன் பின்னரே, வெவ்வேறு கண்டங்களாக பிரிந்தது என படித்துள்ளேன். இணைந்திருந்த காலத்தில் வாழ்ந்த மக்கள், வெவ்வேறு நிலப்பகுதியில் குடிப்பெயர வாய்ப்பிருந்திருக்கும்.
'அந்த வகையில், ஒரு இடத்தில் வாழ்ந்த மக்கள், வெவ்வேறு பகுதிக்கு சென்ற போது, தங்களது மொழி, கலாசாரம், பழக்கவழக்கங்களை அடுத்த பகுதிக்கும் கொண்டு சென்றிருப்பர் அல்லவா... அப்படியானால், எல்லா நாட்டு மக்களும் ஒரே மூதாதையரின் வழி வந்தவர்களாக தானே இருப்பர்.
'இது சம்பந்தமாக ஏதாவது ஆய்வு நுால் இருந்தால் எடுத்து வாருங்கள், படித்து பார்க்கலாம்...' என்றேன்.
'சரி...' என்று கூறி கிளம்பினார், நாராயணன் சார்.



ஒருநாள், தன் அறையில் எதையோ தேடிக் கொண்டிருந்தார், காமராஜர். அவரை பார்க்க வந்த தொண்டர் ஒருவர், 'அய்யா... என்ன தேடுகிறீர்கள்...' என்று கேட்டார்.
'செய்தி கேட்பதற்காக வைத்திருந்த சின்ன டிரான்சிஸ்டர் ரேடியோ பழுதாகி விட்டது. பழைய பெரிய ரேடியோ ஒன்று என்னிடம் உண்டு. அதை என் உதவியாளர் எங்கே வைத்திருக்கிறார் என்று தெரியவில்லை. நானும் ரொம்ப நாட்களாக அதை பார்க்கவும் இல்லை. அது எங்கே என்றுதான் தேடுகிறேன்...' என்றார்.
கடைசியில் ஒரு மூலையில் பீரோவுக்கு பின்னால் அந்த ரேடியோ இருந்ததை கண்டுபிடித்தார், காமராஜர்.
ஆனால், ரேடியோவின் பின்பகுதி திறந்து கிடந்தது. ஒரு குருவி, அதில் கூடுகட்டி இருந்தது. கூடவே அதன் குஞ்சுகளும் இருந்தன.
'கவலைப்படாதீர்கள் அய்யா... குருவிக்கூட்டை அப்புறப்படுத்தி, ரேடியோவை சரி செய்து தருகிறேன்...' என்றார், வந்தவர்.
வங்கதேச விடுதலைப் போர் உச்சகட்டத்தை அடைந்திருந்த நேரம் அது. இந்திய ராணுவம், வங்கதேசத்துக்கு உதவியாக போரில் குதித்து விட்டது. அதுபற்றிய பரபரப்பான செய்திகள் வந்துகொண்டே இருந்தன. உடனுக்குடன் அதுபற்றிய செய்திகளை கேட்க விரும்பினார், காமராஜர்.
ஆனாலும், அந்த குருவிக் கூட்டை கலைக்க அவருக்கு மனம் வரவில்லை.
'அதை ஒன்றும் செய்ய வேண்டாம்னேன்...' என்று, வந்தவரிடம் சொன்னார்.
அப்போது, உள்ளே நுழைந்த உதவியாளரிடம், 'குஞ்சுகள் பெரிதாகி கூட்டை காலி செய்கிறவரை, ரேடியோ அங்கேயே இருக்கும்படி பார்த்துக் கொள்ளணும். அதற்கு எந்த தொந்தரவும் இருக்கக் கூடாது. டிரான்சிஸ்டரை சீக்கிரம் பழுது பார்த்து கொண்டு வாருங்கள்...' என்று கட்டளையிட்டார்.
குருவியிடம் கூட கருணை காட்டிய காமராஜரின் செயலை கண்டு, அவர்கள் சிலிர்த்து நின்றனர்.
இப்போதோ, மனிதர்களை கூட மனிதர்கள் மதிக்காத நிலை இருப்பதை நினைத்து, வருந்தினேன்.

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X