அனைத்தையும் ஆட்டிப்படைத்து இயக்கிக் கொண்டிருக்கும் தெய்வத்தினுடைய செயலை, நம்மால் அறிய முடியாது. இருந்தாலும், 'அந்த சாமி, ஏன் தான் இப்பிடி சோதிக்கிறதோ...' என்று ஆதங்கத்தால் புலம்புவது வழக்கம். தெய்வச் செயலின் காரணத்தை விளக்கும் கதை இது.
கடலில் போய்க் கொண்டிருந்த ஒரு கப்பல், திடீரென்று எழுந்த பெரும் அலைகளில் சிக்கி, உடைந்து போனது. அதில் பயணம் செய்தவர்களில் ஒருவர் மட்டும் உயிர் தப்பி, கைகளில் கிடைத்தவற்றை எடுத்து, கரை ஒதுங்கினார்.
அவர் ஒதுங்கிய இடம், ஆளரவமற்ற தீவு; ஒரு மனிதன் கூட இல்லாத இடம். வேறு வழியற்ற நிலையில், சிறு குடிசை கட்டி, அங்கேயே வாழத் துவங்கினார்.
தினமும் காலையில் எழுந்ததும், 'சாமி... எப்பிடியாவது என்னை காப்பாத்தி, எங்க ஊர்ல கொண்டு போய்ச் சேரு...' என்று வேண்டுவதும், சுற்றித்திரிந்து, கிடைத்த காய், கனிகளை உண்பதுமாக, நாட்கள் போய்க் கொண்டிருந்தன.
ஒருநாள், அவர் தன் வழக்கப்படி எழுந்து, 'சாமி... காப்பாத்து! ஏதாவது வழி செய்...' என்று வேண்டி, உணவு தேடப் போனார். கிடைத்ததை உண்டு, கைகளிலும் கொஞ்சம் எடுத்து திரும்பினார்.
அப்போது, அவருடைய குடிசை முழுதும் எரிந்து சாம்பலாகி இருந்தது. இருந்த சிறு குடிசையும் போனதைக் கண்டு வருந்தினார்.
'தெய்வமே... என்னைக் காப்பாத்துன்னு வேண்டியதற்கு, இருந்த ஒரு குடிசையக்கூட இப்பிடி எரிச்சு சாம்பலாக்கிட்டியே... இதுவா உன் கருணை...' என்று, தெய்வத்தை நொந்து பலவாறு புலம்பினார்.
அந்த நேரத்தில், யாரோ அழைக்கும் ஓசை கேட்டுத் திரும்பினார். அங்கே ஒருவர் நிற்பதும், கடற்கரை ஓரமாக ஒரு படகும், கடலில் சற்று தள்ளி ஒரு கப்பல் நிற்பதும் தெரிந்தது.
உடனே, குரல் கொடுத்தவரை நெருங்கினார்.
'ஐயா... இது ஆளரவமற்ற தீவு. இங்கு யாருமில்லை என்பதை பலமுறை, இந்த வழியாக வரும்போது நானே பார்த்திருக்கிறேன்.
'ஆனால், இன்று இந்தப் பக்கமாக வரும்போது, இங்கிருந்து புகை வருவது தெரிந்தது. அப்படி புகை தெரிந்தால், அங்கு யாரோ நம் உதவியைக் கேட்கின்றனர் என்று அர்த்தம். புகையைப் பார்த்த நான், உடனே இங்கு உதவி செய்ய வந்தேன்...' என்றார்.
குடிசையைப் பறி கொடுத்தவர், நடந்ததை கூறினார்.
'தெய்வமே... இருந்த குடிசைய எரிச்சிட்டியேன்னு உன்னக் கண்டபடித் திட்டிட்டேன். ஆனா, குடிசை எரியலேன்னா இவங்களுக்குத் தெரிஞ்சிருக்குமா... நான் பிழைத்திருக்க முடியுமா? விபரம் தெரியாம கத்திட்டேன். என்னை மன்னிச்சிடு...' என்று, மனமுருக தெய்வத்திடம் வேண்டினார்.
பிறகென்ன, படகில் ஏறி கப்பலை அடைந்து, தன் ஊர் போய்ச் சேர்ந்தார்.
தெய்வச் செயலை அறிய முடியாது. தெய்வம் நல்லதுதான் செய்யும்.
பி. என். பரசுராமன்
ஆன்மிக தகவல்கள்!
கோவில் பிரகாரத்தை சுற்றும்போது, முக்கிய மூர்த்தியின் திருநாமம் உதட்டில் இழைய வேண்டும். கைகளை வீசாமல் உடலுடன் சேர்ந்தவாறு வைக்கவும்; கால்கள் இரண்டையும் நன்றாக ஊன்றியபடி மெதுவாக நடந்து செல்ல வேண்டும்.