சென்னை, அசோக்நகர் ஆரம்ப பள்ளியில், 1969ல், 1ம் வகுப்பு படித்தான் என் மகன். அப்போது நடந்த சம்பவம்!
ஒரு நாள் ஆசிரியை என்னை அழைத்து, 'உங்கள் மகன் நன்றாக தான் படிக்கிறான்; ஆனால், சக மாணவர்களின் மதிய உணவை திருடி சாப்பிட்டு விடுகிறான்... அவனுக்கு நேர்மை போன்ற நல்லொழுக்கங்களை கற்றுக் கொடுங்கள்...' என்றார்; அவமானத்தால் கூனி குறுகி திரும்பினேன்.
வீட்டுக்கு வந்ததும் கணவரிடம் விஷயத்தை கூறினேன்; மகனை பிரம்பால் பின்னி எடுத்து விட்டார். சிறிது நேரத்திற்குப் பின் மகனிடம், 'நீ செய்தது தப்பு தானே... இன்னொருவர் உணவை திருடி சாப்பிடலாமா... நான் தான் மதிய சாப்பாடு தந்து விடுகிறேனே...' என அன்புடன் கேட்டேன்.
தயங்கியபடி, 'அம்மா... நான் திருடி சாப்பிடவில்லை; எனக்கு ரொம்ப பசித்தது; அப்போது ஆசிரியர், 'திருடி சாப்பிட்டவர் தப்பை ஒப்புக் கொள்ளும் வரை, வகுப்பில் யாரும் சாப்பிடக் கூடாது...' என்று தடை போட்டார். எனக்கு கடுமையாக பசித்ததால் செய்யாத தப்பை செய்ததாக ஏற்றேன்...' என்றான்; செய்வதறியாது திகைத்தேன்.
என் வயது 82; தனியார் வங்கியில் வேலை செய்கிறான் மகன்; மேல் அதிகாரியிடம் நல்ல பெயரும் வாங்கியிருக்கிறான். ஆண்டுகள் பல ஆகியும், அந்த சம்பவத்தை மறக்க முடியவில்லை!
- சாவித்திரி, சென்னை.