கோவை மாவட்டம், காரமடை, போர்டு எலிமென்டரி பள்ளியில், 1959ல், 5ம் வகுப்பு படித்தேன்.
வகுப்பாசிரியர் சுப்ரமணியத்தை, தேக்கம்பட்டி வாத்தியார் என்று அழைப்போம். தலைமை ஆசிரியரும் அவர் தான்.
பள்ளி வளாகத்தில் பெரிய காலியிடம் இருந்தது; அதை சுத்தம் செய்து, சிறுசிறு பாத்திகளாக பிரிக்கச் சொல்லிக் கொடுத்தார் ஆசிரியர். அதில் காய்கறி, கீரை விதைகளை ஊன்றி பராமரிக்கும் முறைகளை கற்பித்தார்.
காய்கறி, கீரைகள் சாப்பிடுவதன் அவசியத்தை எடுத்துக் கூறினார்; வீட்டில் சிறிய இடத்தில் தொட்டியில் கூட செடி வளர்க்கலாம் என விளக்கினார். மாணவ, மாணவியரை குழுவாக்கி, செயலாற்ற வழி காட்டினார். ஓய்வு நேரத்தில் ஆர்வமுடன் தோட்ட வேலையில் ஈடுபட்டோம். செடிகளின் வளர்ச்சி கண்டு மகிழ்ந்தோம்.
அன்று ஏற்பட்ட ஆர்வத்தால் வீட்டைச் சுற்றிலும், செடிகளை வளர்த்து, இயற்கை உரமிட்டு கிடைக்கும், காய்கறி, கீரை வகைகளை பயன்படுத்துவதை வழக்கமாக கொண்டுள்ளேன். இதையே என் மகன்களும், பேரன், பேத்திகளும் செய்கின்றனர்.
என் வயது, 71; அரசு பள்ளியில் தமிழாசிரியையாக பணியாற்றி ஓய்வு பெற்றேன். வீட்டுத்தோட்டம் அமைப்பதில் ஆர்வம் ஏற்படுத்திய அந்த ஆசிரியரை வணங்குகிறேன்.
- வி.கற்பகவல்லி, கோவை.
தொடர்புக்கு: 99420 89902