சுற்றுச்சூழல், சுகாதாரம், கழிவு நிர்வாகம் மற்றும் கல்வி சார்ந்த சேவைகளில், 'சுலப் இன்டர்நேஷனல்' என்ற அமைப்பு ஈடுபட்டு வருகிறது. இது, கழிப்பறை அருங்காட்சியகம் ஒன்றை நிறுவியுள்ளது. புதுடில்லி, பாலம் மகாவீர் என்கிளேவ் பகுதியில் இது அமைந்துள்ளது.
கி.மு., 3 ஆயிரம் ஆண்டில் பயன்படுத்திய கழிப்பறை துவங்கி, பல்வேறு கழிப்பறை மாதிரிகளும் இங்கு வைக்கப்பட்டுள்ளன. இவை, 50 நாடுகளில், சேகரிக்கப்பட்டவை. மரம், பீங்கான், இரும்பு என பல உலோகங்களால் ஆனவை.
ஐரோப்பிய நாடான பிரான்ஸ் மன்னர், 16ம் லுாயி பயன்படுத்திய கழிப்பறையும் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளது.
அந்த மன்னருக்கு ஒரு நிமிடத்தை கூட வீணாக்க பிடிக்காது. இதனால், அரியணையுடன், கழிப்பறையையும் இணைத்து பயன்படுத்தியது தெரியவந்துள்ளது.
நீர் மூழ்கிக்கப்பலில் உள்ள கழிப்பறை வித்தியாசமானது; பட்டனை அழுத்தினால் போதும்; கழிவு எரிந்து சாம்பாலாகி விடும்.
இந்த சர்வதேச அருங்காட்சியகத்தில் கழிப்பறை சார்ந்த மக்களின் நடைமுறை, பழக்க வழக்கங்கள், பயன்பாட்டு பொருட்கள் மற்றும் உபகரணங்கள் பற்றிய விபரங்களை அறிந்து கொள்ளலாம்.
இந்த அருங்காட்சியகத்திற்கு...
* உலக அளவில், பல பரிசுகள், கவுரவங்கள் கிடைத்துள்ளன
* கொரோனா பரவல் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது
* சுற்றிப்பார்க்க அனுமதி இலவசம்
* கழிப்பறை பற்றி எழுதப்பட்ட கவிதைகளும் காட்சியாக வைக்கப்பட்டு உள்ளன.
- ராஜி ராதா