* எ. முகமது ஹுமாயூன், நாகர்கோவில்: 'விவசாயத்தை காப்பாற்ற வேண்டும் என்றால், 100 நாள் வேலைத் திட்டத்தை ஒழிக்க வேண்டும்' என்று, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசி இருப்பது சரியா?
இவ்வளவு ஆண்டு பேச்சுகளிலும், அறிக்கைகளிலும், இது ஒன்றைத் தான் உருப்படியாகச் சொல்லி இருக்கிறார்!
ஆர். ஆனந்தன், சென்னை: அந்துமணியாரே... முதன் முதலில் வாசகர் கேள்விக்கு பதில் அளிக்கும்போது, என்ன மனநிலை இருந்தது... இன்று என் கேள்விக்கு பதில் அளிக்கும்போது, உங்கள் மன நிலை எப்படி உள்ளது?
தென்காசி வாசகர், கு.அருணாச்சலம் கேள்விக்குத் தான் முதன் முதலில் பதில் எழுதினேன். மிகவும் அச்சமாகவும், படபடப்பாகவும் இருந்தது... இன்று, இவ்வளவு அனுபவத்திற்கு பின், உங்கள் கேள்விக்கு, ஒரு நிமிடத்தில் எந்த திகைப்பும் இல்லாமல் பதில் எழுதி விட்டேன்!
ஜி. செல்லத்துரை, மதுரை: 'வரும் 2026ல் பா.ம.க., ஆட்சி அமைக்கும்' என்கிறாரே அன்புமணி ராமதாஸ்...
வயது, 83 ஆகிவிட்டது ராமதாசுக்கு... அதனால், இரவில் சரியாக துாக்கம் வராமல், முதல்வர் கனவு காண்கிறார்... அதை மகன் அன்புமணியுடன் பகிர்ந்து கொள்கிறார் போலும். அதனால் தான் இந்த ஆளும் கட்சி பேச்சு!
* ஆர். காவ்யா, திருவிடைமருதுார்: தி.மு.க., அனுதாபியான கவிஞர் வைரமுத்துவுக்கு, தி.மு.க., அரசு, ஏதாவது பதவி - பொறுப்பு வழங்கியுள்ளதா?
தி.மு.க.,வுக்கு ஆதரவாக அவ்வளவு பேச்சு, அறிக்கை எல்லாம் விட்டிருக்கிறார் வைரமுத்து! ஆனால், இதுவரை அரசு ஏதும் செய்யவில்லை... அவரும் அதை எதிர்பார்த்து இருப்பவர் போல இல்லை!
காளீஸ்வரி, பங்கேத்தாங்குடி, புதுக்கோட்டை: அரசு ஊழியர், லஞ்சம் வாங்குவோர் பற்றி அடிக்கடி செய்தி படிக்கிறோம்... அவர்களை நிரந்தரமாக பணி நீக்கம் செய்வரா?
செய்தே ஆக வேண்டும்; அத்துடன் அவர்களுக்கு வழங்கும், 'பென்ஷனை'யும் நிறுத்த வேண்டும்! பணி இடை நீக்கம், பணி மாறுதல் எல்லாம் வெறும் கண் துடைப்பு!
எம்.சுப்பையா, சென்னை: எண் கணித முறையில் பெயர் மாற்றம் செய்தால் அதிர்ஷ்டம் கிடைக்குமாமே...
ஓ... கிடைக்குமே... பெயரை மாற்றித்தரும், 'அன்பருக்கே' உங்கள் கட்டணம் அதிர்ஷ்டம் தரும்!
எஸ். குமரன், குஞ்சன்விளை, கன்னியாகுமரி மாவட்டம்: என் நண்பன், பிறருடன் பேசும்போது, தலை தாழ்த்திப் பேசுகிறானே...
அடுத்தவருடன் பேசும்போது, அவருடைய கண்களைப் பார்த்து பேச வேண்டும். கண்களைப் பார்க்காமல், வேறு பக்கம் பார்த்து பேசுபவர்கள் தாழ்வு மனப்பான்மை கொண்டவர்கள்!