சுமிதா!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 அக்
2021
00:00

''அம்மா... அ...ம்...மா,'' என அழுதபடி, ஓடி வந்து சந்திராவை கட்டிக்கொண்டாள், சுமிதா.
''என்னடா கண்ணு, ஏன் அழுவற... விளையாடுறப்ப யாராச்சும் அடிச்சுட்டாங்களா,'' என, தாயன்போடு கேட்டாள்.
தலையாட்டி மறுத்தாள், சுமிதா.
'சுமி... எங்கடி போயிட்ட... விளையாட வா...' தெருவிலிருந்த தோழியரின் குரல் ஒலித்தது.
''சரி... நான் விளையாடப் போறேன்,'' என, கண்ணை துடைத்தபடி வந்த வேகத்தில் ஓடிப்போனாள்.
அழுதுகொண்டே வந்த மகள், உற்சாகமாய் போவதை பார்த்த சந்திரா, 'சரியான விளையாட்டு பிள்ளை...' என, சிரித்துக் கொண்டாள்.
சுமிதாவுக்கு, எட்டு வயது என்றால், யாரும் நம்ப மாட்டார்கள். 10 - 12 வயது வளர்ச்சி போல் காணப்பட்டாள்.
'மூன்றாம் வகுப்பு படிக்கும், சுமி, 4 - 5வது படிக்கும்போதே சீக்கிரமாக பெரிய பெண்ணாகி விடுவாள்...' என, போன முறை வந்திருந்த மாமியார் குறையாக சொல்லியது, இன்னமும் சந்திராவின் மனதில் அழுத்தமாய் பதிந்திருந்தது. இதற்காக பெருமைப்படுவதா அல்லது பயப்படுவதா என, தெரியாமல் தவித்தாள்.
வெளியே விளையாட போன சுமிதா குரல், வெகு நேரம் வரையும் கேட்காததால் எழுந்து அவசரமாய் தெருவை எட்டிப் பார்த்தாள்.
''சுமி... சுமி...'' தொண்டை அதிர குரல் கொடுத்தாள்.
சுமியை தவிர அவள் வயதை ஒத்த மற்ற பிள்ளைகள் ஆரவாரமாய் விளையாடிக் கொண்டிருந்தனர்.
''தேவி குட்டி... சுமி எங்க?'' என்றாள், சந்திரா.
''இங்க தான் ஆன்ட்டி விளையாடிகிட்டு இருந்தாள்... நான் தேடிப் பார்க்கிறேன்,'' என, அவள் பக்கத்து தெரு நோக்கி ஓடினாள்.
தன் மகள் பெயரை கூவிக்கொண்டே தெருவில் இறங்கி நடந்தாள், சந்திரா.
''சுமிதா சுமி...'' என அழைத்தபடியே ''அக்கா, எம் பொண்ணு சுமியை பார்த்தீங்களா?'' என எதிர்பட்டவர்களிடம் கேட்டு, ஏமாற்றமாய் மேலும் தேடுதலை தொடர்ந்தாள்.
தெரு முனைக்கு வந்த சந்திராவை, ஓடோடி வந்து கை பிடித்து நிறுத்தினாள், தேவி குட்டி.
''ஆன்ட்டி... சுமி, உங்க வீட்டு வாசல்ல நின்னு அழுதுகிட்டிருக்கா.''
''என்னவாம்... என்னாச்சு?''
''தெரியல, சொல்ல மாட்டேங்கிறா,'' என, மூச்சு வாங்கிய தேவி குட்டி, விளையாட போய் விட்டாள்.
'ஒருவேளை, என்னை காணாமல் அழுது கொண்டிருப்பாளோ...' என எண்ணியபடி, ஓட்டமும், நடையுமாய் வீட்டை அடைந்தாள், சந்திரா.
அம்மாவை பார்த்ததும், ஓடோடி வந்து கட்டிக்கொண்டாள், சுமிதா.
''ஏன்டா கண்ணு, என்னாச்சு... அம்மா எங்கெல்லாம் உன்னை தேடினேன் தெரியுமா?''
அம்மாவின் ஆறுதல் வார்த்தையை செவி கொடுத்து கேட்காத சுமிதா, ''அம்மா, அந்த அங்கிள் என்னை, 'பேட் டச்' பண்ணினார்,'' என, மேலும் சத்தமாய் அழுது, குண்டை துாக்கி போட்டாள்.
''ஐயோ, என்னடா சொல்றே?'' என, மகளை கட்டிக்கொண்டு அழுதாள், சந்திரா.
'இதை யாரிடம் சொல்வது... அப்படி சொல்லும்படியான விஷயமா நடந்திருக்கிறது...' என நினைத்துக் கொண்டாள்.
''அடிக்கடி அந்த அங்கிள் இப்படித்தாம்மா... பயமா இருக்கு... இப்ப கூட தப்பிச்சு ஓடி வந்துட்டேன்.''
''சரி... இதை யார்கிட்டேயும் சொல்லாதே.''
''அப்படித்தாம்மா அந்த அங்கிளும் சொன்னாங்க,'' என்றாள், சுமி.

சுமிதா, அங்கிள் என்று அழைத்த அந்த காமுகன், எதிரே நான்கு வீடு தள்ளியிருக்கும், 40 வயது ஆசாமி. அவன் பெயர், நாகராஜ். அவன் மனைவி பாமா கூட, சந்திராவுக்கு நன்கு தெரிந்தவள் தான்.
போன வாரம் அவளுடன் சேர்ந்து கடைக்கு சென்று, மளிகை சாமான் வாங்கி வந்திருக்கிறாள். தன் கணவனை அப்பழுக்கற்ற ஒழுக்க சிகாமணி என, பெருமை பேசியவள்.
கண்ணாடி ஜன்னலை விலக்கி எட்டிப்பார்க்கும் நாகராஜின் நாக கண்ணை நேருக்கு நேர் சந்தித்தாள், சந்திரா. கொஞ்சம் தடுமாறிப்போன அந்த நாகம், தலையை இழுத்துக் கொண்டது.
தப்புக்கான முயற்சி நடந்திருக்குமோ என நினைத்து, மகளின் உடலில் ஏதேனும் காயங்கள் இருக்கிறதா என, அவசரமாய் குளிக்க வைத்து, ஆய்வு செய்தாள். நல்லவேளை, அப்படி எந்த ஒரு அசம்பாவிதமும் தென்படவில்லை.
சற்று நிம்மதி பெருமூச்சு விட்டு, கணவனிடம் சொல்லலாமா என நினைத்த வேகத்தில், வேண்டாம் என முடிவெடுத்தாள்.
ஆண்கள் அவசர புத்தி கொண்டவர்கள். என்ன செய்கிறோம் என தெரியாமல் ஏதாவது ஏடாகூடமாக செய்து, மானத்தை கப்பலில் ஏற்றிவிடுவர். நிதானமான பின், 'யோசிக்காமல் தப்பு செய்து விட்டேன்...' என, வருந்துவர்.
நாகராஜ் வீட்டு வாசலில் நின்று, சண்டை போடலாம்... தெரு கூடி வேடிக்கை பார்க்கும். கணவன் மனைவிக்குள் பிரச்னை பூதாகரமாக வெடிக்கும். அவர்களுக்கு, 12 வயதில் மகள் இருக்கிறாள். அவள், தன் தந்தையை மரியாதைக்குரியவராக நினைத்திருப்பாள். அந்த நினைப்பில் மண் விழும்.
நாகராஜின் மனைவி பாமாவிடம், தாலி கட்டியவனின் யோக்கியதையை பற்றி சொன்னால், அவள் மனம் என்ன பாடுபடும்... இந்த விஷயத்தை சும்மா விடவும் முடியாது; காமுக ஆண் மனது எந்நேரமும் தன் கோரக் கரத்தை நீட்டுமே... அது, சுமிதாவின் உயிருக்கு கூட ஆபத்து விளைவிக்கும்.
நாளிதழ், 'டிவி' செய்திகளில், தினம் எத்தனை விதமான பாலியல் வன்கொடுமை நிகழ்வுகளை பார்க்கிறோம்... பார்க்க மனம் கூசும் செய்திகள் கூட தற்போது சர்வ சாதாரணமாக சமூகத்தில் உலவி வருகிறதே...
பலவித சிந்தனைகளுடன் கண் அசந்த சந்திரா, திடுக்கென கண் விழித்தாள். அருகே, ஒழுங்கற்ற நிலையில், மகள் சுமியும், ஆழ்ந்த துாக்கத்தில் இருந்தாள். கதவு தட்டும் ஒலி கேட்டது.
''என்ன சந்திரா... அதுக்குள்ள துாங்கிட்டே... கதவு தட்டுனதுல, அடுத்த வீட்டுக்காரங்களே எழுந்துட்டாங்க,'' என்றான், அவளது கணவன்.
அவனுக்கு தெரியாமல், இந்தப் பிரச்னையை எப்படி தீர்ப்பது என்பதே தலையாய யோசனையாக இருந்தது. அவனுக்கு சாப்பாடு போட்டு, தானும் சாப்பிட்டாள்.
''சுமி சாப்பிட்டாளா?''
''ஆச்சு,'' என்றாள்.
உண்மையில் சுமிதா சாப்பிடவில்லை. எழுப்பி சாப்பிட வைக்க, சந்திரா விரும்பவில்லை. சுமிதா விட்ட அழுகையை துவங்கி, விஷயம் முழுவதையும் கணவனுக்கு தெரிய வைத்து விட்டால்... நினைத்துப் பார்க்க முடியாத சங்கடம் எல்லாம் இந்த இரவிலேயே நடந்து விடும். கண்ட கனவை நிஜமாக்கி விட்டு தான் ஓய்வான்.

மறுநாள் பொழுது விடிந்தபோது, சந்திராவுக்கு அனைத்துப் பிரச்னையும் எளிதில் தீர்ந்து விடும் என்ற நம்பிக்கை வந்திருந்தது.
'சரியான சம்மட்டி அடி கொடுத்து விட்டால், எந்த வீராதி வீரனும் சர்வ சரீரமும் அடங்கி அடிபணிந்து போய் விடுவான். இந்த அற்ப நாகராஜ் எம்மாத்திரம், அவனுக்கே தெரியாமல் அவனை வீழ்த்த வேண்டும். அதே சமயம், இந்த விஷயம் யாருக்கும் தெரிந்தும் விடக் கூடாது...' என நினைத்து கொண்டாள்.
சுமிதா துாக்கம் கலைந்து எழுந்ததும், வழக்கம் போல அவளை குளிப்பாட்டி சாப்பாடு கொடுத்தாள். நேற்று நடந்த சம்பவத்தை அடியோடு மறந்திருந்தாள், சுமிதா. சந்திராவிற்கு நிம்மதியாக இருந்தது. அப்பாவை பார்த்ததும், ஆசையாய் கட்டிக் கொண்டு விளையாடி, பள்ளிக்கு செல்லும் முனைப்பில் எந்த அசம்பாவித சுவடும் சுமிதாவிடம் தெரியவில்லை.
ஒரு வழியாக கணவனும் உணவுக் கூடையை மாட்டி, வாகனத்தை உதைத்து, கிளம்பிப் போனான். அவசர அவசரமாக பாமா வீட்டிற்கு, புயல் போல சென்று நின்றாள், சந்திரா.
இவள் வருவதை பார்த்ததும் வேலைக்கு கிளம்பிக் கொண்டிருந்த நாகப்பாம்பு நாகராஜ், அதிரடியாய் அதிர்ந்து போனான். சந்திராவின் பார்வையை சமாளிக்க முடியாமல் அந்த இடத்தை காலி செய்வதில் முனைப்பு காட்டினான்.
''வாங்க சந்திரா... வாங்க வாங்க,'' என்று தொலைவில் துாரமாய் மறையும் கணவனை பார்த்து நிதானமானாள், பாமா.
''ஏதோ பிரச்னையா இருக்கும் போல ஆபிஸ்ல... அதான் என் வீட்டுக்காரர் இப்படி அரக்க பரக்க ஓடுறார். குடும்பத்துக்காக அவரு மட்டும் உழைக்கல, பொம்பளைங்க நாமும் தான் உழைக்கிறோம். காலையில கண் விழிச்சதுல இருந்து இதோ இந்த நேரம் வரைக்கும் ஓடா தேயிற மாதிரி எவ்வளவு வேலை,'' என்றதும், சிரித்து வைத்தாள், சந்திரா.
''பிரியங்கா எங்க ஸ்கூலுக்கு போயிட்டாளா?''
''ஏதோ ஸ்பெஷல் கிளாசாம் சீக்கிரமா போயிட்டா.''
''ஆமா, பாமா அக்கா... நேத்து எங்க போயிட்டீங்க சாய்ந்திரம்?''
''எங்க பழைய வீட்டு ஓனர் பாத்ரூம்ல வழுக்கி விழுந்து, எலும்பு முறிஞ்சி, கட்டு போட்டு நடக்க முடியாம இருக்கிறதா சொன்னாங்க. ஒரு எட்டு போயி பார்த்துட்டு வந்தேன். நைட்டு திரும்ப லேட் ஆயிடுச்சு.''
எதற்காக இந்த விசாரணை என யோசித்தாள், பாமா.
''வீடு பூட்டி இருந்தது, அதான் கேட்டேன். சரி பாமாக்கா, உங்க பொண்ணு பிரியங்கா போட்ட பழைய டிரஸ் ஏதாவது இருந்தா கொடுங்களேன்.''
''எதுக்கு?''
''நம்ம சுமிதாவுக்கு தான்... என்ன தான் புது டிரஸ் வாங்கிக் கொடுத்தாலும், 'பிட்டிங் கரெக்டா' இருக்க மாட்டேங்குது; அப்படியே இருந்தாலும், ரொம்ப நாள் வர மாட்டேங்குது; சாயம் போகுது; வீட்டுல, 'ரப் யூஸ்' போட்டுக்க துணிங்க இல்லை.
''திடீர்னு அன்னைக்கு ஒரு நாள் பேச்சு வாக்குல, 'உங்க மகள் போட்ட துணி எல்லாம் மூட்டை கட்டி பத்திரமா வச்சிருக்கே'ன்னு நீங்க சொன்னது, ஞாபகம் வந்துச்சி, அதான் கேட்டேன்.''
''எங்களுக்கு ஒரே பொண்ணா... நானும், என் வீட்டுக்காரரும் போட்டிப் போட்டு ஆசை ஆசையா வாங்கி குவிச்சிருக்கோம்... அப்படியே புதுசு மாறாம இருக்கும்,'' என பெருமை பீற்றிக் கொண்ட பாமா, ஒரு சூட்கேசை எடுத்து வந்தாள். அவள் சொன்னது போல அனைத்து உடைகளும் புதிதாகத் தான் இருந்தது.
''சந்திரா, எது வேணாலும் எடுத்துக்க... இதெல்லாம் அவ மூணாங் கிளாஸ், நாலாங் கிளாஸ் படிக்கிறப்ப வாங்கினது... உம் பொண்ணுக்கு சரியா இருக்கும்,'' என ஒவ்வொன்றாக எடுத்து பிரித்தாள்.
ரோஸ் கலரில், கையில் பிரீல் வைத்து ரோஜாப்பூ சிதறலாய் இருந்த சிவப்பு கலர் மிடி, பார்க்க பிரமாதமாய் இருந்தது. அதை விட அந்த டிரசுக்கு, பாமா கொடுத்த விளக்கம் சந்திராவை தீர்மானமாய் ஈர்த்தது.
''இந்த டிரஸ் நல்லா இருக்கே பாமாக்கா.''
''பிரியங்காவோட ஏழாவது பிறந்த நாளுக்கு அவங்க அப்பா ஆசையா வாங்கிட்டு வந்தது. இந்தக் கலரும், இந்த டிசைனும் அவர் மனசுலேயே இன்னைக்கும்
நிற்கும். இந்த
டிரஸ்ல எண்ணிப் பார்த்தா, 15 ரோஜாப்பூ இருக்கும்.
''என் வீட்டுக்காரர் என்னை எண்ணிப் பார்க்க சொன்னார். நான், 15 பூன்னு சொன்னேன். அதுக்கு, 'இல்ல, இத நம்ம பிரியங்கா போட்டா, 16 ரோஜாப் பூவாச்சே'ன்னு சொல்லி, ரசிச்சி சிரிச்சார்,'' என நெகிழ்வாய் சொன்னாள், பாமா.
மேலும் நான்கைந்து டிரஸ் எடுத்துக் கொண்டு, நன்றி சொல்லி கிளம்பினாள், சந்திரா.

மாலை -
தயக்கமும், தடுமாற்றத்துடனும் வீடு திரும்பிய நாகப்பாம்பு நாகராஜ், வீதியில் ரோஜாப்பூ சிதறலாய் இருந்த சிவப்பு கலர் மிடியில் சுமிதா, வண்ணத்துப்பூச்சி தேவதையாய் விளையாடிக் கொண்டிருந்ததை பார்த்ததும், பேச்சு மூச்சற்றவனாய் முடமாகிப் போனான்.
அவனது மகள் பிரியங்காவே நான்கைந்து வயது குறைந்து சுமிதா உருவில் வீதியில் விளையாடுவது போல உணர்ந்தான். மனம் குருதியான நாகராஜ், வழியில் மனைவி நிற்பதை பொருட்படுத்தாமல் வீட்டிற்குள் புகுந்தான். கண்ணாடியில் தன்னைப் பார்த்து வெறுத்துப் போனவன், பலத்துடன் ஓங்கி ஒரு குத்து குத்தினான்.
அவனது பிம்பம் உடைந்தது. கைகளில் ரத்தம் பீறிட்டது.
''ஐயய்யோ, என்னங்க... என்னாச்சுங்க?'' என, பாமாவின் அலறல் கேட்டு ஓடி வந்த கூட்டத்தில் சந்திராவும் இருந்தாள்.
குழந்தைகளை ரோஜாப்பூவாக நினைக்க எப்படி மறந்தேன். அதுவும் இந்த குழந்தையை, 17 ரோஜாப்பூவாக நினைக்க மறந்தது எவ்வளவு பெரிய குற்றம். தன் தவறுக்கு தண்டனை விதித்துக் கொள்ளும் விதமாக மேலும் குத்திக் கொண்டே அழுது நடுங்கிய நாகராஜை, சிலர் தடுக்க போராடினர்.
''பிரச்னை தீர்ந்துப் போச்சு... கவலைப்படாதீங்க பாமாக்கா... கவலைப்படாதீங்க,'' என சற்று சத்தமாக கூறினாள், சந்திரா.
ரத்தம் வழியும் கைகள் குவித்து, 'மன்னித்து விடுங்கள்...' என்பது போல, சந்திராவை பார்த்தான், நாகராஜ்.
அந்த கணத்தில் விஷம் முறிந்து, ஓர் அற்புத மாற்றம் கொண்ட மனிதனாக சந்திராவின் கண்ணுக்கும் தெரிந்தான், நாகராஜ்.


வ. மகராசி
இவரது கணவர், இள.அழகிரி, எழுத்தாளர்.
பணி: அரசுபள்ளி, ஓவிய ஆசிரியை
ஆர்வம்: உரைநடை, கவிதை மற்றும் வாக்கிய உபதேச ஆய்வு கவிதையில் ஈடுபட்டிருக்கும் இவரது நோக்கம், தனித்திறன் மாணவர்களை உருவாக்குவது. ஆன்மிக ஞானத்தில் பயணித்து, மனிதம் மலர செய்ய வேண்டும் என்பதும் இவரது லட்சியம்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
AarKay - Madurai,இந்தியா
20-அக்-202117:23:42 IST Report Abuse
AarKay தன் மகள் போடும் உடையில் பிற குழந்தையை பார்த்தால் காமுகன் திருந்தி விடுவானா? செருப்பை கழட்டி நாலு அடி குடுத்து போலீசில் சொல்வதை விட்டு.
Rate this:
Cancel
Girija - Chennai,இந்தியா
17-அக்-202111:25:10 IST Report Abuse
Girija கிளைமாக்ஸ் பக்கா விசு தனம் அதற்கு முன்பே கதையை முடித்திருக்கலாம். ஸ்மிதா வடமொழி அதனால் சுமிதா வா ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X