அன்புள்ள சகோதரிக்கு -
என் வயது: 65. மத்திய அரசு பணியிலிருந்து ஓய்வு பெற்றவன். எனக்கு நான்கு மகன்கள். அவர்களை படிக்க வைத்து, வேலையும் வாங்கி கொடுத்து, திருமணம் நடத்தி வைத்தேன். எனக்கு மொத்தம் எட்டு பேரக் குழந்தைகள்.
நான் பணி ஓய்வு பெற்ற அன்றே மகன்களுக்கு, சொத்தை பிரித்து கொடுத்து விட்டேன்.
பணி ஓய்வு பணத்தையும், நான்கு பங்குகளாய் பிரித்து கொடுக்க கூறினர்; மறுத்தேன். மனைவி ஐந்து ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார்.
கோபக்காரர், ரோஷக்காரர், வாய்க்கு வக்கணையாக சாப்பிடுபவர். பேரன் - பேத்தி குறும்புகளை சகித்து கொள்ள தெரியாதவர் எனக் கூறி, என்னை நால்வர் வீட்டிலும் பராமரிக்க மறுத்தனர்.
பணி ஓய்வில் கிடைத்த பணம் முழுவதையும் வங்கியில் நிரந்தர வைப்புத் தொகையாக போட்டேன். மாதம் பணம் கொடுத்து தங்கும் முதியோர் காப்பகத்தில் சேர்ந்தேன். ஐந்து ஆண்டுகளில் ஒருமுறை கூட மகன்கள் வந்து பார்க்கவில்லை.
முதியோர் இல்லத்தில் ஒரு பெண்மணியை சந்தித்தேன். அவளுக்கு, 62 வயதிருக்கும். லட்சுமிகரமான முகம். அவள் கணவர், சாலை விபத்தில் இறந்து விட்டார். அவளது மூன்று மகள்களையும் படிக்க வைத்து, திருமணம் செய்து விட்டாள்.
மகள்களின் திருமணங்களின் போதே சொத்துகளை பிரித்து கொடுத்து விட்டாள். சொத்துகள் இல்லாத கிழவியை வைத்துக்கொள்ள எந்த மகளும் முன் வரவில்லை. ஒரு நள்ளிரவில் அம்மாவை அடித்து துரத்தி விட்டனர்.
ஏறக்குறைய மூன்று மாதங்கள் பிச்சை எடுத்து சாப்பிட்டிருக்கிறாள். சமூக ஆர்வலர்கள், இவளை கண்டெடுத்து, குளிக்க வைத்து புத்தாடை உடுத்தி முதியோர் காப்பகத்தில் விட்டுச் சென்றிருக்கின்றனர்.
வந்த சில மாதங்கள் அழுது கொண்டே இருந்தாள். நான் தான் ஆறுதல் கூறி சமாதானப் படுத்தினேன். வங்கியிலிருந்து பணம் எடுத்து, புடவைகள் எடுத்து கொடுத்தேன்; அவளுக்காக, முதியோர் இல்ல கட்டணத்தையும் கட்டினேன்.
ஒரு கட்டத்தில் நான் அவள் மேல் காதலாகி கசிந்துருகினேன். தயங்கி தயங்கி, என் காதலை கூறினேன். 'நாம் திருமணம் செய்து கொள்வோமா...' என, கேட்டேன்.
முதலில் பயந்தாள். மகள்களுக்கு தெரிந்தால் அடித்தே கொன்று விடுவர் என்றாள். எனக்கும் உள்ளூர பயம் தான். மகன்கள் என்னை உண்டு இல்லை என பண்ணி விடுவர்.
சகோதரியே... முதியோர் இல்லத்தில் இருக்கும் மனைவியை இழந்த கிழவனும், கணவனை இழந்த கிழவியும், திருமணம் செய்து கொள்வதில் ஏதாவது சட்ட சிக்கல் இருக்கிறதா... நான் இந்து மதத்தை சேர்ந்தவன்; அவளோ கிறிஸ்துவ மதத்தை சேர்ந்தவள்.
நாங்கள் திருமணம் செய்து கொள்வதை சட்டம் அனுமதிக்கிறதா... எங்களது திருமணத்திற்கு மகள் - மகன்கள் ஆட்சேபம் தெரிவித்தால், அது, சட்ட ரீதியாக ஏற்றுக்கொள்ளபடுமா... முதியோர் காப்பகத்தில் இருக்கும் இருவர் திருமணம் செய்து கொள்வது, சட்ட திட்டங்களுக்கு உட்பட்டதா?
நீங்கள் தான் எங்கள் சந்தேகங்களை தீர்த்து, திருமணம் நடக்க உதவ வேண்டும்.
இப்படிக்கு,
அன்பு சகோதரர்.
அன்பு சகோதரருக்கு -
முதலில் உங்கள் காதல் வெற்றி பெற வாழ்த்துகிறேன்.
இப்போது உங்கள் கேள்விகளுக்கு பதிலளிக்கிறேன்...
* உங்களது திருமணத்தை தடுக்க மகன்களும், நீங்கள் காதலிக்கும் பெண்ணின் மகள்களும் முயற்சி செய்வர் என, சந்தேகப்பட்டு இருந்தீர்கள். வருமானம் இல்லாத முதியவர்களுக்கு, அவரது குழந்தைகளோ, நெருங்கிய உறவினர்களோ, மாதா மாதம் பராமரிப்பு தொகை வழங்க வேண்டும் என, சட்டம் கூறுகிறது.
நீங்கள் ஓய்வூதியம் பெறுகிறீர்கள். நீங்கள் காதலிக்கும் பெண்ணுக்கு, எந்த வருமானமும் இல்லை. அவர், அவரது மகள்கள் மீது வழக்கு போட்டு, பராமரிப்பு தொகை பெறலாம். மூத்த குடிமக்கள் சட்டம், 2007ன் படியும், மூத்த குடிமக்கள் திருத்த சட்டம், 2019ன் படியும் வழக்கு போட்டு, எழுதிக் கொடுத்த சொத்துகளை திரும்ப பெறலாம்.
மகன் - மகள் மீது இரக்கப்பட்டு தான் சட்ட நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறோம் என்பதை அவர்களுக்கு எச்சரிக்கையாய் தெரியப்படுத்துங்கள். மிரண்டு அரண்டு போகும் அவர்கள், உங்கள் வழியில் குறுக்கிட மாட்டார்கள்
* முதியோர் இல்லத்தில் இருக்கும் ஆணும், பெண்ணும் திருமணம் செய்து கொள்ளக் கூடாது என, எந்த சட்ட திட்டங்களும் கூறவில்லை. இருந்தாலும், நீங்களிருவரும் திருமணம் செய்து கொள்ள விழைவதை முதியோர் இல்ல நிர்வாகியிடம் தெரிவியுங்கள். அவரே இதை ஒரு சாதனையாக, மங்கல நிகழ்வாக கருதி, திருமணத்தை சிறப்பாக நடத்தி வைக்கக்கூடும்
* நீங்களோ, அப்பெண்ணோ யாராவது ஒருவரது மதத்துக்கு மாறி திருமணம் செய்து கொள்ளலாம் அல்லது நீங்கள் இருவரும் அவரவர் மதத்தில் இருந்து கொண்டே திருமணம் செய்து கொள்ள சிறப்பு திருமண சட்டம், 1954 அனுமதிக்கிறது.
நீங்கள் இருவரும் கோவிலில் திருமணம் செய்து கொள்ளுங்கள். திருமண தகவலை பிரமாண பத்திரமாக திருமண பதிவு அலுவலகத்தில் சமர்ப்பியுங்கள். உங்களது திருமணத்தில் யாருக்கும் ஆட்சேபணை உண்டா என, ஒரு மாத நோட்டீஸ் ஒட்டுவர். அதன்பின், உங்கள் திருமணம் எழுத்துப்பூர்வமாக பதிவாகும்
* திருமணத்திற்கு அனுமதி தான் கேட்க வேண்டாம் என சொன்னேன். திருமணம் செய்து கொள்ளப் போகிறோம் என்ற தகவலை, இருதரப்பு மகன் - மகளிடம் தெரிவியுங்கள்
* உங்களுக்கு பின் ஓய்வூதியம் பெறும் வாரிசுதாரராக, புது மனைவியின் பெயரை பதிவு செய்யுங்கள்
* திருமணத்திற்கு முன் இறந்து போன வாழ்க்கை துணைகளிடம் மானசீக வாழ்த்துகளை பெறுங்கள்
* எந்த வயதில் துவங்கினாலும் திருமண வாழ்க்கை மகோன்னதமானது என்பதை உலகிற்கு உணர்த்துங்கள்.
வாழ்த்துகள் மூத்த குடிமக்களே!
— என்றென்றும் பாசத்துடன்,
சகுந்தலா கோபிநாத்