வேரென நீ இருந்தால்...
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 அக்
2021
00:00

மரம் வெட்டுகிறவனுக்கு நிழலும்,
மண் தோண்டுகிறவனுக்கு இடமும் கொடுக்கும்


அவசரமாக கிளம்பிக் கொண்டிருந்தாள், பார்கவி. வாசலில், 'சசி கேப்ஸ்' என்ற எழுத்துகள் பளிச்சிட்ட பிரைவேட் டாக்ஸி காத்திருந்தது.
''கிளம்பலாமா?''
''எல்லா டாகுமென்ட்ஸும் எடுத்துட்டீங்களா?'' சிரித்தபடி கேட்டாள்.
''நான் எல்லாம் எடுத்துட்டேன். நீங்க எடுத்துட்டீங்களா பாருங்க?''
''இல்லப்பா... 'இ - பாஸ், கேரளா பர்மிட்' அப்படின்னு என்னமோ சொல்றாங்களே?''
''நம்ம வண்டி, 'நேஷனல் பர்மிட்' வண்டிமா... எதுவும் வேண்டாம்... எந்த ஊருக்கு வேணா போகலாம். என் மொபைல்ல மெசேஜ் வந்திருக்கு. 'பிரின்ட் அவுட்' வெச்சிருக்கேன்; தடுப்பூசி போட்டுகிட்ட சான்றிதழ் கூட இருக்கும்மா.''
குருவாயூரப்பனை மனசுக்குள்ளே வேண்டி, வீட்டைப் பூட்டி, ஆவணங்களை சரி பார்த்தாள், பார்கவி. முகக் கவசம் எடுத்து வைத்தாள்.
கார் கிளம்பியது.
பார்கவி, பாலக்காடு போய் சேருவதற்குள், அவளுடைய கதையை சொல்லி விடுகிறேன்.
பாலக்காட்டில் இருக்கும் தத்தமங்கலம் அருகில் இருந்தது, இவளது பிறந்த வீடு.
பார்கவியை, கோவைக்கு அனுப்பி படிக்க வைத்தாள், அவளது அம்மா. அப்போதுதான், முகுந்தனின் அறிமுகம் கிடைத்தது. இவர்கள் காதலுக்கு எதிர்ப்பு சொல்ல யாரும் இல்லாததால், ஒரு சுபயோக சுபதினத்தில்,கோவையில் திருமணம் நடந்து முடிந்தது.
முகுந்தனுக்கு, உறவினர் என்று சொல்லிக் கொள்ள யாருமில்லை. கோவை, கவுண்டன்பாளையம் அருகே ஒரு சின்ன வீட்டில் இவர்கள் குடியிருந்தனர். பார்கவிக்கு மேலே படிக்க ஆசை. ஆனால், முடியவில்லை. இந்த நிலையில் தான், ஏஜென்ட் ஒருவரின் மூலமாக, முகுந்தனுக்கு துபாய் போகும் வாய்ப்பு கிட்டியது.
விசாவுக்காக காத்திருந்த நிலையில், 'அஞ்சு வருஷ கான்ட்ராக்ட்ன்னு சொல்றீங்க... என்னமோ மனசுக்கு கஷ்டமா இருக்குங்க...' என பார்கவி நெகிழ்ச்சியுடன் கூறினாள்.
'கவலைப்படாதே. தினமும் உன்னோடு வீடியோ காலில் பேசறேன்; மாசா மாசம் பணம் அனுப்புறேன். அஞ்சு வருஷம் சிட்டா பறந்துடும்...'
'வாழவேண்டிய வயசுங்க...'
'பரவாயில்லை... நாம நினைச்சா எல்லா வயசுலயும் வாழலாம். வயசு உடம்புக்கு தான்; மனசுக்கு இல்ல...'
'சரி, இப்ப நான் சும்மாதான் இருக்கேன். மேலே படிக்கட்டுமா?'
'உன் இஷ்டம்...'
'ஒருவேளை, எனக்கும் வேலை கிடைச்சு, நான் துபாய் வந்தேன்னா...'
'ஆள பாரு... அங்கே எனக்கே என்ன வேலைன்னு தெரியல... இதுல உன்னை வேற கூட்டிட்டு போகணுமா... ஏற்கனவே, என்னுடைய பாஸ்போர்ட் அது இதுன்னு எல்லாத்துக்கும் நிறைய செலவழிச்சிருக்கே... உன் நகை எல்லாம் இழந்திருக்கே...' என்றவன், அடுத்த சில நாட்களில் துபாய் சென்றான்.
கேரள எல்லைக்குள் நுழைந்தது, கார். அங்கே ஒரு பெண், கையில் ஒரு பெரிய பையுடன் காத்திருந்தாள். முகக் கவசம் கூட சரியாக அணியவில்லை.
''வணக்கம் மேடம்... பாலக்காட்டுக்கு அவசரமா போகணும்; வண்டியே கிடைக்கலை. நீங்க இடம் கொடுத்தீங்கன்னா, பணம் தந்துடறேன்.''
பார்கவி தள்ளி உட்கார்ந்து கொள்ள, அந்தப் பெண் வண்டியில் ஏறினாள். கார் கிளம்பியது. இவர்கள் பாலக்காடு அடைந்தபோது, இருட்டியது. அந்தப் பெண் இறங்கி போனாள்.
பார்கவி, தத்தமங்கலத்தில் இறங்க முயன்றபோது, காலில் பை ஒன்று தட்டியது.
'காரில் ஏறிய பெண் மறந்து விட்டுப் போய் விட்டாளா?' என நினைத்தபடியே, அந்த பையை எடுத்தாள், பார்கவி.
இரண்டு ஆண்டுகள் ஓடி விட்டன. தன் தாயை குணப்படுத்தி, கோவைக்கு அழைத்து வந்து விட்டாள், பார்கவி.
முகுந்தனிடமிருந்து அடிக்கடி செய்தி வரும்.
அன்று, 'எல்லாரையும் வேலையை விட்டு நீக்கி விட்டனர். என்னுடைய, 'பாஸ்போர்ட்' எல்லாவற்றையும், 'ரிலீஸ்' செய்து விடுவர்.
சீக்கிரம் இந்தியா வந்துடுவேன்...' என்று
தகவல் அனுப்பியிருந்தான்.
'ம்மா... அம்மா...' என்றபடியே, உள்ளே இருந்து தத்தித் தத்தி நடந்து வந்தது, ஒரு பெண் குழந்தை. அதை கட்டி அணைத்து, உள்ளே அழைத்து வந்தாள், பார்கவி.
ஒருநாள், யாரோ வாசல் கதவை தட்ட
உதவிக்கு இருந்த ஆயா திறந்தாள். வந்தவன், 'சேச்சி...' என்றபடியே, பார்கவியின் அம்மாவிடம் போனான்.
'யாருப்பா?'
'முகுந்தனோட பிரண்டு, பிரசாந்த். நாங்க கிளாஸ்மேட். அவன் அதிர்ஷ்டக்காரன்; துபாயில் வேலை கிடைச்சது, போய்ட்டான். நான்தான் இங்க ஊர் சுத்திட்டு இருக்கேன்...'
அப்போது, அங்கு வந்த பார்கவியை பார்த்தான்.
'கல்யாண பத்திரிகையிலே பேர் பார்த்தது, மறக்கலை... பார்கவி தானே? அன்னைக்கு நான் ஊர்ல இல்ல; அதனால தான் வர முடியல. ரெண்டு வருஷம் இருக்குமா முகுந்தன் போயி... எப்படி தனியா சமாளிக்கறீங்க?'
'என்ன?'
'அதாவது, குடும்பத்தை எப்படி காப்பாத்தறீங்கன்னு கேட்டேன்...' என்றான்.
'நான், மேற்படிப்பு படிக்கிறேன்...'
'அப்படியா...'
'சாப்பிடுறீங்களா?'
'ஒரு வேலை விஷயமா வந்தேன். நாளைக்கு ஞாயிற்றுக்கிழமை. போக முடியாது... ம் என்ன பண்றதுன்னு தெரியல...'
'கவலைப்படாதீங்க, ஒரு நாள்தானே? இங்க தங்கிட்டு போகலாம்...'
'தேங்க்ஸ்மா... எங்க தொரத்திடுவீங்களோன்னு பயந்தேன்...'
'உங்க பிரண்டுக்கு மெசேஜ், இல்லன்னா வாய்ஸ் மெசேஜுலே பேசட்டுமா...' என்றாள்.
'வேண்டாம், நான் முயற்சி பண்ணிப் பார்த்துட்டேன். 'நெட்ஒர்க்' சரியில்லை போல, எடுக்க மாட்டேங்குது...'
இவளும் முயன்றாள்; லைன் கிடைக்கவில்லை.
ஒருமுறை முகுந்தனுடன் போனில் பேசியபோது, பிரசாந்த் வந்த விபரத்தை பார்கவி கூற, 'யாரு பிரசாந்தா... அவன் ஒரு பொறுக்கி... காலேஜ் நாள்லேயே பெண்களை, 'சைட்' அடிச்சு, ரெண்டு தடவை, 'டிசி' வாங்கினவன்...' என்றான்.
பேசவில்லை, பார்கவி.
'முகுந்தன் கோபமாக இருக்கிறான். பிறகு பார்த்துக் கொள்ளலாம்...' என இருந்தாள்.
அன்று முகுந்தனிடமிருந்து போன் வந்தது.
''ஹேய்... நான் இப்போ கோயம்புத்துார் ஏர்போர்ட்டிலே இருந்து பேசறேன்... 'லக்கேஜ் க்ளியரன்'ஸ் முடிச்சு, ஒரு மணி நேரத்திலே வந்துடுவேன்,'' என்றான்.
'பீரோவில் புடவைகள் சில கசங்கிக் கிடக்கின்றன. புதிதாக இஸ்திரி கடை ஒன்று தெருக்கோடியில் வந்திருக்கிறது. முகுந்தன் வந்தால், அடிக்கடி வெளியே போக வேண்டி வரும்...' என, புடவைகளை கட்டைப் பையில் போட்டு கொடுத்து விட்டு வந்தாள்.
அரை மணி நேரத்தில், வாசலில் டாக்ஸி வந்து நின்றது. அதிலிருந்து இறங்கினான், முகுந்தன். டீ - ஷர்ட், பைஜாமா, கறுப்புக் கண்ணாடி, மைனர் செயின் என்று, தடபுடலாக இருந்தான்.
அவன் கையிலிருந்த பையை வாங்கினாள், பார்கவி.
''அதுலே, என் பிரண்ட்... அதான் பிரசாந்த் ஏதோ, 'கிப்ட்' வாங்கி அனுப்பி இருக்கான். தற்செயலா, துபாய் ஏர்போர்ட்டிலே சந்தித்தேன். என் கல்யாணத்துக்கு தர வேண்டிய பரிசாம்.''
அப்போது... உள்ளேயிருந்து, தடுமாறி நடந்து வந்தாள், பாப்பா.
முகுந்தன் அவளைப் பார்த்தான்.
''ஓ... அதான், கிப்டா? உனக்கு குழந்தை பிறந்திருக்குன்னு சொல்லலியே.''
''எ... என்ன சொல்றீங்க?''
''என்னத்தச் சொல்றது... அதான் பிரசாந்தைப் பார்த்தேனே.''
''சொல்லிட்டாரா?''
''உம்... சொன்னான், எல்லாத்தையும்,'' என்றவன், அவள் கன்னத்தில் ஓங்கி அறைந்தான். பொறி கலங்கி நின்றாள்.
கையிலிருந்த பை நழுவி விழுந்த வேகத்தில் திறந்து கொண்டது. அதிலிருந்த ஒரு கவர் வெளியே விழுந்தது. அதன் மேல், நண்பனுக்கு ஒரு மன்னிப்புக் கடிதம் என்ற கொட்டை எழுத்து... கடிதத்தை எடுத்து படித்தான், முகுந்தன்.
அதில், 'என்னை மன்னித்துவிடு நண்பா... ஒரு நாள் உன் வீட்டில் தங்க நேர்ந்தது, உன் மனைவியிடம் தப்பாக நடந்து கொள்ள முற்பட்டபோது, அவள் என் கன்னத்தில் அறைந்தாள்.
'மேலும், 'உன்னை, என் கணவரின் நண்பன் என்று சொல்லவே வெட்கமாக இருக்கு. உயிர் காப்பான் தோழன் என்பர். ஆனால், நண்பனின் மனைவியை பெண்டாள நினைத்த உன்னை... சே...' என்று காறித் துப்பாத குறையாய் பேசினார்.
'அவர் கால் பிடித்து மன்னிப்புக் கேட்டேன். இதை வெளியில் சொல்லக் கூடாதென சத்தியம் வாங்கிக் கொண்டேன்...'
இவ்வாறு எழுதப்பட்டிருந்தது.
கடிதம் படிக்கப் படிக்க அதிர்ந்தான், முகுந்தன்.
அந்தக் குழந்தை கண்டெடுத்த அந்த நாளை நினைத்துப் பார்த்தாள், பார்கவி.
உடல் நலமில்லாத தாயை பார்க்க காரில் சென்ற போது, இடையில் ஏறிய பெண். மறந்து வைத்து விட்டு போன பையை திறந்து பார்த்தாள்; ஒரு பிஞ்சு குழந்தை அரை மயக்கத்தில் இருந்தது கண்டு அதிர்ந்து போனாள்.
குழந்தைக்கு ஏதோ நோய் பாதிப்பு இருப்பது தெரிந்தது. எனவே, ஆயாவை அமர்த்தி வளர்த்து வந்தாள்.
'இந்த குழந்தையை டாக்ஸியில் விட்டுட்டு போனவளுக்கு எத்தனை கல் நெஞ்சம் இருக்கும்?' என, நினைத்தாள், பார்கவி.
அச்சமயம் வாசலில், இஸ்திரி போடும் பெண் வந்து, ''ஏன்மா, இந்த பை எங்கேம்மா கிடைச்சது?'' என்று கேட்டாள்.
''ஏன் கேட்கறே?''
''ஒண்ணுமில்லம்மா... நான் மகா பாவி. பெற்ற குழந்தையை இந்த பையில் வைச்சு எடுத்துட்டு வரும்போது, எங்க வீட்டுக்காரரோட சொந்தக்காரங்க என்ன தேடி, ஓடி வந்தாங்க... என்ன பண்றதுன்னு தெரியல... உடனே, ஏதோ ஒரு காரில் ஏறி, அந்த குழந்தையோடு பையை வைச்சுட்டு வந்துட்டேன்ம்மா...
''அப்புறம் அந்த டாக்ஸியை தேடி பார்த்தேன், காணோம். என் பெயர் ராசாத்தி... இந்த பையில நான் எம்பிராய்டரி போட்டிருக்கேன்மா... பாருங்க, என் பெயர் போட்டிருக்கேன். இந்த பையில, நீங்க, இன்னைக்கு இஸ்திரி துணி போட்டு கொடுத்தீங்களே... இதை பார்த்த உடனே என் குழந்தை ஞாபகம் வந்தது அம்மா. அந்த குழந்தை எங்கே இருக்கு?'' என்றாள்.
ராசாத்தி கொடுத்த பையை வாங்கி உள்ளே போய், அதில், புது புடவைகள் நிறைத்து எடுத்து வந்தாள், பார்கவி.
''இஸ்த்ரீ பண்ணவாம்மா?'' என்றாள், ராசாத்தி.
''இல்ல... உனக்கு; இது, உன் குழந்தைக்கான விலையில்லை, உன் தாய்மைக்கு பரிசு. முறைப்படி குழந்தையை தத்தெடுத்துக்கறேன்; நல்லா படிக்க வைப்பேன்; எல்லா ஏற்பாடும் பண்ணி இந்த குழந்தையை உன்கிட்ட ஒருநாள் ஒப்படைப்பேன்.
''இது, உன் குழந்தை தான்; நான் உரிமை கொண்டாட மாட்டேன்; நிம்மதியா போயிட்டு வா. இந்தா, உன் குழந்தைக்கு ஆசை தீர முத்தம் கொடு,'' என்று, குழந்தையை அவள் கையில் ஒப்படைத்தபோது, தலை குனிந்து நின்றான், முகுந்தன்.
''சரி, பிரச்னை தீர்ந்ததுல்ல... இனிமே ஒண்ணும் இல்ல... வா!'' என்ற முகுந்தனின் கையை உதறினாள், பார்கவி.
''இல்லைங்க, தினம் தினம் என் கற்பை நிரூபிக்க, நான் அக்னிபிரவேசம் செய்ய முடியாது... சாட்சிகளைக் கூட்டிட்டு வர முடியாது...வெட்றவனுக்கு நிழலும், தோண்டறவனுக்கு இடமும்கொடுக்கும் நில
மகள் மாதிரி பெண்கள்... நதியானாலும், ஆறானாலும், ஓடையானாலும் அது, நீர்
வழித் தடம் தான்.
''அதேபோல் தான் தாய்மை. அவள் பெண்ணானாலும், தாயானாலும், வயதான மூதாட்டியானாலும், அவள் தாய் தான். அந்த கருணை அவளிடம் வற்றாது,'' என்றவள் போனை எடுத்து, ''சசி கேப்ஸ்... உடனே வாங்க கிளம்பணும்,'' என்றாள்.
கோவிலிலிருந்து அப்போது தான் வீடு திரும்பிய பார்கவியின் அம்மா, ''மாப்பிள்ளே... வந்துட்டீங்களா?'' என்று கேட்கவும், ''கிளம்பும்மா!'' என்றாள்.
''எங்கே?''
''நம் ஊருக்கு நிரந்தரமா. நீ தான் ஊருக்குப் போகணும்ன்னு சொல்லுவியே,'' என்றவள் பாப்பாவையும் எடுத்துக் கொண்டு, வாசலுக்கு வந்தாள்.
'சசி கேப்ஸ்' கார் வந்து காத்திருந்தது.

அமராவதி

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (5)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Velu Mandhimuthiriyar - COIMBATORE,இந்தியா
29-அக்-202121:03:03 IST Report Abuse
Velu Mandhimuthiriyar சந்தேகம்தான் நமது முதல் எதிரி.... அவனை தீர்த்துக் கட்டிவிட்டால் நமது வாழ்க்கையே சொர்க்கம்தான்.. நல்ல கருத்துள்ள கதை. வாழ்த்துக்கள்.
Rate this:
Cancel
C.. Asaithambi - pattukkottai,இந்தியா
23-அக்-202118:09:09 IST Report Abuse
C.. Asaithambi கதையின் முடிவு நன்று, ஆனால் கதை சொல்லிய நடையில் சிறிது குழப்பமான இடங்கள்...உள்ளது .
Rate this:
Cancel
M.Ravichandran - Tirupur,இந்தியா
20-அக்-202112:27:50 IST Report Abuse
M.Ravichandran லாஜிகே இல்லைங்க..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X