வடமாநில மன்னனின் தாகத்தை தீர்த்த மூதாட்டியின் புண்ணியத்தால், கேரள மாநிலத்தில் ஒரு கோவில் எழுந்துள்ளது. அந்த மன்னன் யார் தெரியுமா? மகாபாரத கவுரவர்களின் தலைவன் துரியோதனன். இவனது ஊர் அஸ்தினாபுரம். தற்போது, உத்தரபிரதேசத்தில் இருக்கும் மீரட் நகர் தான், அன்றைய அஸ்தினாபுரமாக இருந்தது.
துரியோதனனுக்கும், பாண்டவர்களுக்கும் தீராத பகை. அவர்களை வனவாசம் அனுப்பி விட்டான், துரியோதனன். இருப்பினும் அவனுக்கு பயம் விடவில்லை. குறிப்பிட்ட காலத்துக்குள் அவர்கள் ஊர் திரும்பி விட்டால், நாட்டை திரும்ப கொடுக்க வேண்டி இருக்குமே என்ற பயத்தில், அவர்களைக் கொல்ல எண்ணி, ஊர் ஊராகத் திரிந்தான்.
அப்போது, அவன் வந்த ஊர் தான் கேரளத்திலுள்ள பொருவழி கிராமம். இங்கு வந்த போது, அவனை கடும் தாகம் வாட்டியது. ஒரு மூதாட்டி வீட்டிற்கு சென்று, குடிக்க தண்ணீர் கேட்டான்.
'தம்பி... நாங்கள் ஜாதி ரீதியாக தாழ்ந்தவர்கள். எங்கள் வீட்டில் உன்னைப் போன்ற உயர் வகுப்பினர் தண்ணீர் குடித்தால், எங்கள் மன்னர் என்னைத் தண்டிப்பார்...' என்றாள், மூதாட்டி.
'அம்மா... நான் அஸ்தினாபுர மன்னன் துரியோதனன். இந்த ஊர் என் ஆட்சிக்குட்பட்ட சிற்றரசர் வசமே உள்ளது. அவரிடம் நான் சொல்லிக் கொள்கிறேன். நீங்கள் தண்ணீர் கொடுங்கள்...' என்றான், துரியோதனன்.
அவனுக்கு குடிக்க ஒரு பானம் தந்தாள், மூதாட்டி. அது வெள்ளையாக, புளிப்பாக இருந்தது. தாகத்தில் இருந்த துரியோதனன், அதுபற்றி ஆராயாமல் குடித்து விட்டான். குடித்ததும், அவனுக்கு சற்று போதை ஏற்பட்டது. அது, அவனுக்கு மகிழ்ச்சியைத் தந்தது.
அந்த பானம் பற்றி துரியோதனன் கேட்க, 'தம்பி... அது தென்னை மரத்து கள். குடிக்க சுவையானது...' என்றாள், மூதாட்டி. அந்த மகிழ்வுடன் மூதாட்டியிடம், 'உங்களுக்கு வேண்டியதைக் கேளுங்கள். தருகிறேன்...' என்றான்.
'தம்பி... இவ்வூரில் கோவில் இல்லாதது ஒரு பெருங்குறை. கோவில் கட்ட ஏற்பாடு செய்யுங்கள்...' என்றாள். துரியோதனனும் வேண்டிய பொருள் கொடுத்தான். அவ்வூர் மக்கள் கோவில் கட்டினர். தங்கள் ஊருக்கு கோவில் வர காரணமாக இருந்த, துரியோதனனின் விக்ரகத்தை பிரதிஷ்டை செய்தனர். அவனுக்கு மண்ணாசையே தவிர, வேறு எந்த குறையும் இல்லாதவன்.
உயர் பண்புகள் நிறைந்தவன். இக்காரணங்களால் அவனுக்கு கோவில் எழுப்பப்பட்டுள்ளது.
கொல்லத்தில் இருந்து பரணிக்காடு வழியாக, 35 கி.மீ., சென்றால், பொருவழி கிராமம் வரும். இங்குள்ள எடக்காடு பகுதியில் கோவில் உள்ளது. கொட்டாரக்கராவில் இருந்து புத்துார் அல்லது ஏனாது வழியாக, 25 கி.மீ., சென்றாலும், இவ்வூரை அடையலாம்.
தி. செல்லப்பா