'ஈவ் டீசிங்'கில் இது புது வகை!
பள்ளி ஒன்றின் அருகே இருக்கும் பேருந்து நிலையத்தில், மாலை 7:00 மணியளவில் பஸ்சுக்காக காத்திருந்தேன். டியூஷன் முடித்து பிளஸ் 2 மாணவ - மாணவியர் சிலரும் காத்திருந்தனர். அதில் ஒரு மாணவனிடம், 'தைரியமாக போய் சொல்லுடா, தயங்காதே...' என்று உசுப்பேற்றிக் கொண்டிருந்தனர், மற்ற மாணவர்கள்.
அவனும் தைரியத்தை வரவழைத்து, சற்று துாரமாக நின்றிருந்த ஒரு மாணவியிடம், 'எனக்கு ஒரு பொட்டாசியம், ஒரு அயோடின், இரண்டு சல்பர் கொடு...' என்றான். உடனே அந்த மாணவி, தன் காலில் போட்டிருந்த ஷூவை கழட்டி, அவனை அடிக்க ஆரம்பித்ததும், அவனும், மற்ற மாணவர்களும் ஓட்டம் எடுத்தனர்.
அந்த பெண்ணுடன் நின்றிருந்த அவளது தோழியிடம், 'ஏன் அவனை அடித்தீர்கள்...' என்று கேட்டேன். 'நேரடியாக கேட்டால், எல்லாருக்கும் தெரிந்து விடும் என்று, மறைமுகமாக, கெமிஸ்டரி சிம்பலை சொல்லி, கிண்டல் செய்துள்ளான் சார்...
'பொட்டாசியம் சிம்பல் - கே, அயோடின் சிம்பல் - ஐ, இரண்டு சல்பர் என்றால் - எஸ்.எஸ். இந்த நான்கு ஆங்கில எழுத்துகளையும் சேர்த்து பாருங்கள். என்ன அர்த்தம் வருதுன்னு தெரியும். அதான் என் தோழி அடிக்கப் போனாள். 'ஈவ் டீசிங்'கில் இது புது மாதிரி தொந்தரவு சார்...' என்றாள், அவளது தோழி.
அழாமல், ஆர்ப்பாட்டம் செய்யாமல், மிக தைரியமாக சூழ்நிலையை கையாண்டு, அடி கொடுத்து விரட்டிய மாணவியை பாராட்டினேன். மாணவர்களே... நீங்கள் படித்த விஷயத்தை, மதிப்பெண் வாங்க பயன்படுத்துங்கள்; இதுபோன்ற செயலுக்கு பயன்படுத்தாதீர். இல்லாவிட்டால், அடி, உதை தான் மிஞ்சும்!
ஸ்ரீனிவாசன், சென்னை.
மறக்க முடியுமா?
தற்போது என் வயது, 83. என், 25வது வயதில் நடந்த நிகழ்ச்சி இது: எனக்கு திருமணமான புதிதில், தன் நண்பரை விருந்துண்ண அழைத்திருந்தார், கணவர். பலவகை உணவுகளை சமைத்து பரிமாறினேன். மைசூர் பாகு செய்து இலையில் வைத்தேன். அவர், ஆர்வமுடன் ஒரு துண்டு எடுத்து வாயில் போட்டதும், 'ஆ' என்று சத்தம் போட்டார். அவர் பல் உடைந்து, தெறித்து விழுந்தது.
அவரிடம் மன்னிப்பு கேட்டேன். கணவரோ கோபத்தோடு என்னை முறைத்தார். மைசூர் பாகு செய்வது எளிது போல் தோன்றினாலும், பதம் கொஞ்சம் தவறினாலும் அதோ கதிதான். அதன்பின், கொஞ்சம் கொஞ்சமாக, பக்குவமாக செய்ய கற்றுக் கொண்டேன் என்பது வேறு விஷயம்.
இது நடந்து, 58 ஆண்டுகள் கடந்து விட்டது. இப்போதும் மைசூர் பாகு செய்யும்போதெல்லாம், இந்த சம்பவம் நினைவுக்கு வந்துவிடும். எனவே, தீபாவளி இனிப்பு வகைகள் செய்யப் போகிறீர்களா... அனுபவசாலிகளை அருகில் வைத்து, அவர்கள் கூறும் வகையில் செய்வது நல்லது.
— வி. மைதிலி, சென்னை.
இப்படியும் செய்யலாமே!
வேலை நிமித்தம், தினமும் உடுமலைப் பேட்டையிலிருந்து பொள்ளாச்சிக்கு ஒரு குறிப்பிட்ட பேருந்தில் செல்வது வழக்கம். பொள்ளாச்சி வரை டிக்கெட், 42 ரூபாய். நான் பார்த்தவரைக்கும், பயணியர் யாருமே சரியான சில்லரை கொடுப்பதில்லை.
அனைவருமே, 50 - 100 ரூபாயை தான் நீட்டுவர். மீதி சில்லரை கைக்கு வரும் வரை, கண்டக்டரை விடுவதில்லை. தினமும் வாக்குவாதம் தான். அவரும் சில்லரையாக தரும்படி எவ்வளவோ கத்துவார். கடைசியில், 'டென்ஷன்' ஆகி தன் சீட்டில் உட்காருவது தான் மிச்சம். இதைப் பார்த்த நான், கண்டக்டருக்கு ஒரு யோசனையை கூறினேன்.
அதன்படி, இப்போதெல்லாம் ஜோல்னா பை நிறைய ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் விலையுள்ள பேனா, விக்ஸ் மாத்திரை, புளிப்பு மிட்டாய் போன்றவற்றை வைத்திருப்பார். சில்லரை இல்லையென்றால் இவற்றைக் கொடுக்கிறார்.
பிரச்னை தீர்ந்தது. சில்லரை தட்டுப்பாடும் இல்லை; சண்டை, சச்சரவும் இல்லை. இன்னும் ஒருபடி மேலே போய், சில்லரை வேண்டாமென்று பேனா, மிட்டாய்களை கேட்டு வாங்கிக் கொள்வதுடன், நட்புடனும் நடந்து கொள்கின்றனர், பயணியர்.
சில்லரை பிரச்னை உள்ள மற்ற கண்டக்டர்களும், இதே ஐடியாவை பின்பற்றினால் பயணம் இனிமையாக இருக்குமே!
டி. மரியன் நவநீதராஜா, உடுமலைபேட்டை.