'மல்லிகை என் மன்னன் மயங்கும்' பாடலால், தமிழில் வாணிக்கு வாய்ப்புகள் அதிகரிக்க, தொடர்ந்து சென்னையில் தங்க வேண்டிய நிலை. ஒரு மாதம் அல்லது இரண்டு மாதத்திற்கு ஒருமுறை மும்பையிலிருந்து சென்னை வருவது குறைந்து, சென்னையிலேயே தங்க வேண்டி வந்தது.
குடும்பத்தின் மேல் அளவுக்கதிகமான பாசம் வைத்திருக்கும் வாணி, கணவரை பிரிந்து இங்கே எப்படி தனியாக இருந்திருக்க முடியும். அதுபற்றி அவரே கூறுகிறார்:
யாரு சொன்னாங்க, பாட்டுக்காக நான் கணவரை விட்டு பிரிந்து இங்கு தனியா பாட வந்தேன்னு. குட்டி ஹிந்தி திரைப்படத்தில் பாடி, பிரபலமான உடனேயே எனக்கு நிறைய வாய்ப்புகள் வர ஆரம்பித்தது. கணவரும் கூடவே வந்தா நல்லா இருக்கும், பாதுகாப்பா இருக்கும்ன்னு நினைச்சேன்.
நான் கேட்காமலேயே என் மனச புரிஞ்சுகிட்டவரு, அத்தனை பெரிய பதவியை எனக்காக ராஜினாமா பண்ணிட்டு, ஒவ்வொரு, 'ரெக்கார்டிங்'குக்கும் கூடவே வருவார். அதே மாதிரி, எந்த ஊர்ல கச்சேரி இருந்தாலும், அவர் இல்லாமல் நான் போனதே கிடையாது.
முதல் நாளிலிருந்து கணக்கு வழக்கு பார்த்து, 'இன்கம்டாக்ஸ்' மாதிரியான விஷயங்களிலிருந்தும், வெளியூருக்கு கச்சேரிகள் போகும்போது, 'மைக் செட்' ஏற்பாடு எல்லாமே சரியா இருக்கா என்பது வரைக்கும், அத்தனையையும் பார்த்துக்கிட்டார். அவரது இந்த அணுகுமுறையால், 'டென்ஷன்' இல்லாமல் நிம்மதியா உணர்ந்திருக்கேன்.
கச்சேரிகளுக்கும் சரி, திரைப்பட பாடல்கள் பாடப் போகும்போதும், பணத்தை பற்றி நான் எப்பவுமே கறாரா இருந்தது கிடையாது. சில நேரங்களில் கச்சேரிக்குன்னு வர்றவங்க, 'அம்மா, இது டிக்கெட் புரோகிராம் இல்ல; சின்ன பட்ஜெட்டில தான் பண்றோம். அதனால, எங்களால முடிஞ்சது'ன்னு சொல்லி சன்மானத்தை தருவர்.
அப்படி கொடுக்கும்போது, 'சார்கிட்ட ஒரு வார்த்தை சொல்லிட்டு வாங்கிக்கிறேன்'னு சொல்லி, கணவரிடம் கேட்பேன்.
அவரும், 'வாணி, எல்லாமே உன் இஷ்டம் தான்... உன் நல்ல மனசுக்கு எப்பவாவது நான் குறுக்க நின்னு இருக்கேனா'ன்னு சொல்வார்... அவ்வளவு ஏன், நான் பக்கத்து, 'பிளாட்'டுக்கு போகணும்ன்னா கூட, அவரோட அனுமதி இல்லாம போக மாட்டேன்.
அதுக்காக அவர்கிட்ட போய் நான் கேட்கும்போது, 'ஏம்மா, இதுக்கெல்லாம் கூடவா என் அனுமதி வேணும் உனக்கு... தேசிய விருது வாங்கின பாடகி, பந்தா பண்ணி பார்த்திருப்போம். போயும் போயும் பக்கத்து வீட்டுக்கு போறதுக்கு அனுமதி கேட்பதை யாராவது பார்த்து இருப்பாங்களா...' என்று கிண்டல் செய்வார், என்றார்.
ஹிந்தி பாடல்கள் பாடும் கச்சேரிக்காக சென்னை வந்த வாணி ஜெயராம், முதல் பாடலுக்கு பின், வித்தியாசமான பாடல்களை, எம்.எஸ்.வி., இசையமைப்பில் பாடியிருக்கிறார். அப்படி என்ன வித்தியாசமான பாடல்கள். அவரே சொல்கிறார்:
எம்.எஸ்.வி., சார், என் குரலில் பல வித்தியாசமான பாடல்களை முயற்சி பண்ணி, அது மாபெரும், 'ஹிட்' ஆனது. உதாரணத்துக்கு சொல்லணும்ன்னா, அபூர்வ ராகங்கள் படத்தில், 'ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்...' ராகமாலிகையில், கர்னாடிக் கிளாசிகல் பாடியிருக்கேன்.
அந்த பாட்டை நான், 'ரெக்கார்டிங்'ல பாடி முடிச்ச உடனேயே, 'இந்த பாட்டுக்கு, உங்களுக்கு கட்டாயம், தேசிய விருது கிடைக்கும்'ன்னு முதன் முதலில் சொன்னதே, விஸ்வநாதன் சார் தான். அவர் வாய் முகூர்த்தம் அப்படியே பலிச்சு, அந்த பாட்டுக்கு எனக்கு தேசிய விருது கிடைச்சது. அதுதான், என் முதல் தேசிய விருது, என்றார்.
இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், தமிழில் பாடுவதற்கு முன்னரே, அவர் எத்தனையோ பிற மொழிகளில் பாடல்களை பாடியிருந்தாலும், அவருக்கு, முதன் முதலில் தேசிய விருது பெற்றுத் தந்தது, தாய்மொழியான தமிழ் மொழி தான்.
அதுமட்டுமல்ல, இன்று பெரும்பாலும் மேற்கத்திய இசையையே அடிப்படையாக வைத்து திரைப்பட பாடல்கள் வந்து கொண்டிருந்தாலும், வாணி ஜெயராமுக்கு கிடைத்த மூன்று தேசிய விருதுகளுமே, கர்நாடக சங்கீதத்தை மட்டுமே முற்றிலும் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட பாடல்கள்.
ஆம்... முதல் விருது, தாய்மொழியான தமிழில் அமைந்த இந்த பாடலுக்கும்; இரண்டாவது விருது, தெலுங்கில் அவர் பாடிய, சங்கராபரணம் படத்தில் வந்த, 'தொர குணா...' பாடலுக்கும்; மூன்றாவது விருது, சுவாதி கிரணம் படத்தில் வந்த, 'ஆனத்தி நீயரா...' பாடலுக்கும் தான் கிடைத்தது.
'நீங்கள் பின்னணி பாடகியாகாமல் இருந்திருந்தால் என்ன ஆகி இருப்பீர்கள்...' என்று ஒரு பேட்டியில் கேட்டனர்.
'ஓவியம் வரைவது, கவிதை - கதை எழுதுவது, இதில் ஏதாவது ஒன்றை செய்திருப்பேன். உண்மையை சொல்லப் போனால், அருமையான திரைக்கதை ஒன்றை எழுதி வைத்திருக்கிறேன். எதுவுமே இல்லை என்றால், எனக்கு கை வந்த கலையான சமையல் இருக்கவே இருக்கிறது...' என்றார்.
— தொடரும்.
ஸ்ரீவித்யா தேசிகன்