பா - கே
குப்பண்ணா, தன் வீட்டு கொலுவுக்கு அழைப்பு விடுக்க, நான், லென்ஸ் மாமா, திண்ணை நாராயணன், அன்வர்பாய், 'பீச்' நண்பர்கள் சிலர் என, ஒரு படையே கிளம்பினோம்.
கொலுவை கண்டுகளித்து, மொட்டை மாடியில், சுண்டல் சாப்பிடும்போது, 'நான், தாஜ்மஹாலை பார்க்க சென்றிருந்தேன். தாஜ்மஹாலை விட அழகான ஒரு கட்டடம் உலகில் வேறு எதுவுமே இல்லை...' என, சிலாகித்து பேசினார், 'பீச்' நண்பர் ஒருவர்.
அவ்வளவு தான், வார்த்தைகளால் பொரிய ஆரம்பித்தார், திண்ணை நாராயணன்:
தாஜ்மஹால், மிக அழகான கட்டடம் தான். அதை யாரும் மறுக்க முடியாது. ஆனால், தாஜ்மஹால் மட்டும் தான் உலகில் அழகான கட்டடமா? அதை விட அழகான கட்டடங்கள் உலகில் நிறையவே இருக்கிறது. சரி, உலக அதிசயம் என்றால் என்ன?
ஒன்று உருவான பின், அதேபோல் ஒன்றை உருவாக்க முடியாது என்பது தான் உலக அதிசயம்.
நெல்லையப்பர் கோவிலில் கல் துாணை தட்டினால் ச, ரி, க, ம, ப, த, நி என்கிற ஏழு இசை ஸ்வரங்கள் ஒலிக்கும். கல்லுக்குள் ஏழு ஸ்வரங்களை வைத்தனரே... அது அதிசயமில்லையா!
திருப்பூரில் உள்ள குண்டடம், வடுகநாத பைரவர் கோவிலில், குழந்தை, தாயின் கர்ப்பத்தில் ஒவ்வொரு மாதத்திலும், எந்த விதமான நிலையில் இருக்கும் என்பதை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, கல்லில் சிற்பங்களாக வடித்து வைத்துள்ளனர், நம் முன்னோர்.
அன்னியர் படை எடுப்பின்போது கூட, இந்த அதிசய சிற்பங்களை அவர்களால் சிதைக்க முடியவில்லை.
இன்றும் நிறைய கோவில்களில், சூரிய ஒளி குறிப்பிட்ட நாளில், காலை அல்லது மாலை வேளையில் சிவலிங்கத்தின் மீது விழும்.
சில கோவில்களில் தினமுமே சூரிய ஒளி, சிவலிங்கத்தின் மீது மாலை போல் வந்து விழும். வட சென்னையில் உள்ள வியாசர்பாடி ரவீஸ்வரர் சிவன் கோவிலில், மூன்று வேளையும் சூரிய ஒளி, சிவலிங்கத்தின் மீது மாலை போல் விழும். இந்த கோவிலில் உள்ள சிவலிங்கம், 5,000 ஆண்டுகள் பழமையானது.
இருபதாம் நுாற்றாண்டில் கண்டு பிடிக்கப்பட்ட படலம், ஓசோன். 700 ஆண்டுகளுக்கு முன்பே மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், ஓசோன் படலத்தின் படம், அதன் முக்கியத்துவம், அதை நாம் எவ்வாறு பாதுகாக்க வேண்டும் என, அனைத்தும் அங்கே குறிப்பிடப்பட்டு உள்ளது.
பழங்கால கோவில்களில் யாளி என்கிற மிருக சிலையின் வாயில் ஒரு கல் உருண்டை இருக்கும். அந்த கல் உருண்டையை நாம் உருட்டலாம். ஆனால், ஆயிரம் வீரர்கள் ஒன்று சேர்ந்து முயற்சித்தாலும், யாளி வாயில் உள்ள உருண்டையை வெளியே உருவ முடியாது.
இன்று, ஒரு வல்லரசு நாடு நினைத்தால், ஆயிரம் தாஜ்மஹாலை உருவாக்க முடியும். ஆனால், கல்லுக்குள் ஏழு ஸ்வரங்களை வைக்கும் அந்த வித்தையை எந்த வல்லரசாலும் செய்ய முடியாது.
மிகப்பெரிய பிரம்மாண்ட கற்கோவில்களை, அழகிய கலை வேலைப்பாடுகளோடு உருவாக்குவது எந்த வல்லரசாலும் செய்ய முடியாதது.
அதுபோல், ஜெயங்கொண்டத்தில் உள்ள கங்கைகொண்ட சோழபுரம் கோவிலில், கிணற்றிற்கு அருகில் சிங்கத்தின் சிற்பம் இருக்கும். சிங்கத்தின் வாயில் ஒரு கதவு தென்படும். அதன் வழியே கீழே இறங்கினால், கிணற்றில் குளிக்கலாம். ஆனால், மேலேயிருந்து பார்த்தால் நாம் குளிப்பது தெரியாது. அன்றைய ராணிகளுக்காகவே கட்டப்பட்ட கிணறு அது.
அதுபோல், அக்கோவிலின் கருவறையில் உள்ள சுவர்களில் மரகத கற்கள் பதித்துள்ளனர். அதனால், வெளியே வெயில் அடித்தால், உள்ளே குளிரும். வெளியே மழை பெய்தால், உள்ளே கதகதப்பாக இருக்கும். மேலும், கோவில் மேற்கூரையில் ஒரு ஆள் பதுங்கும் உயரத்தில் பாதுகாப்பு பெட்டகம் உள்ளது.
போர் காலத்தில், ஆயுதங்களும், படை வீரர்களும், பதுங்கும் வகையில் கட்டியுள்ளார், ராஜேந்திர சோழர். தமிழர் பண்பாட்டை போற்றி பாதுகாப்போம். முன்னோர்களின் திறமையையும், கலைநயத்தையும் போற்றி தலை வணங்குவோம். இம்மண்ணில் பிறந்தமைக்கு பெருமிதம் கொள்வோம்.
நம் திறமையை பாராட்டாவிட்டாலும் பரவாயில்லை, அடுத்தவர்களது பெருமையை தலை மேல் துாக்கி வைத்து, நம்மை நாமே சிறுமைப்படுத்திக் கொள்ள வேண்டாம். இவ்வாறு பொங்கி எழுந்தார், நாராயணன். அதன்பின், நண்பர் வாய் திறக்க வேண்டுமே... 'கப் சிப்' தான்!
ப
அந்துமணி வாசகர் ஒருவர் எழுதிய கடிதம் இது: என் வயது: 62. கடந்த, 2010ல், கோவை மாவட்டம், குனியமுத்துார் காவல் நிலையத்தில் உளவுத்துறை உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தேன். ஒருநாள் காலை, 11:00 மணியளவில் கோவை ஆத்துப்பாலத்திலிருந்து காவல் நிலையத்திற்கு இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தேன்.
காளவாய் அருகே சென்றபோது, எனக்கு முன் சென்ற இரு சக்கர வாகன ஓட்டுனர், திடீரென வாகனத்தை நிறுத்தி, என் வாகனத்தை நோக்கி ஓடி வந்தார்.
'என்ன...' என்று கேட்க, 'ஒன்றுமில்லை...' என சொல்லி, ரோட்டின் நடுவே கிடந்த மஞ்சள் பையை எடுத்துச் சென்றார்.
அவர் அருகே சென்று, 'யாருடைய பை...' என்று கேட்டேன்.
ஒரு வித பதற்றத்துடன், 'என்னுடையது...' என்றார்.
நான் எப்போதும் (போலீசுக்கு சந்தேகம் தான் மூலதனம்) வாகன எண்களை மனதில் பதிவு செய்து கொள்வேன். அன்று, வண்டியில் வந்தவரின் வாகன எண்களை மனதில் பதிவு செய்து கொண்டேன்.
காவல் நிலையம் வந்து, டைரியில் வாகன எண்ணை பதிவிட்டு, அலுவல்களை முடித்து, மதியம் சாப்பிட வெளியே வந்தேன். அப்போது, காவல் நிலையத்தில் புகார் அளிக்க வந்திருந்தனர், 60 வயது மதிக்கதக்க ஒரு தம்பதி.
விசாரித்ததில், 'என் மகள் திருமணத்திற்கு, அடகு வைத்த, 15 சவரன் நகையை, டவுன் ஹாலில் மீட்டு வரும்போது, குனியமுத்துார் பகுதியில் எங்கோ விழுந்து விட்டது...' என்று கூறினர்.
'காணாமல் போன பை, என்ன கலர்...' என்றேன்.
'மஞ்சள் பை...' என்றவுடன், எனக்கு பொறி தட்டியது. துரிதமாக செயல்பட்டு, ஆர்.டி.ஓ., ஆபிஸ் சென்று, வண்டியின் எண்ணுக்குரிய விலாசத்தை வாங்கினேன். மதுக்கரை சென்று, அங்கு வீட்டிலிருந்த நபரை பிடித்து, உலுக்கி எடுத்து விட்டேன்.
உண்மையை சொன்ன நபர், வேறு வழியின்றி, பையை எடுத்துக் கொடுத்தார். உடனே, அவரையும் காவல் நிலையம் அழைத்து வந்து, அவர் மூலமாக அந்த தம்பதியிடம் நகைகளை ஒப்படைத்தேன்.
அவர்கள் கண்களில் ஆனந்த கண்ணீரை பார்க்க முடிந்தது. மகள் திருமணத்திற்கு அழைத்திருந்தனர். பணிச்சுமையால் போக முடியவில்லை. வாழ்நாளில் மறக்க முடியாத சம்பவமாக இது அமைந்து விட்டது.
- இப்படி எழுதியுள்ளார்.
காவல்துறையில் இப்படிப்பட்டவர்களும் இருப்பதை நினைத்து, ஆறுதல் அடைந்தேன்.