* டி.எம்.சி.வாசுதேவன், பெங்களூரு: ஏர் - இந்தியாவை வாங்கிய, 'டாடா' குழுமம்...
மிகவும் கெட்டிக்கார குழுமம்! ஏர் - இந்தியா, அவர்களிடம் இருந்ததுதானே. பின், 1953ல், 2.8 கோடிக்கு வாங்கி, நாட்டுடமை ஆக்கினார், நேரு. ஏர் - இந்தியாவின் இப்போதைய மொத்த நஷ்டம், 75 ஆயிரம் கோடி ரூபாய். மொத்த கடன், 61 ஆயிரத்து, 562 கோடி. அரசின் மொத்த முதலீடு, 1.10 லட்சம் கோடி.
இனி, ஏர் - இந்தியா லாபத்தில் இயங்கும். இதுபோன்ற அரசிடம் இருக்கும், 'கமர்ஷியல்' துறைகளையும் தனியாரிடம் விற்று விடலாம். மக்கள் பணம் வீணாகாது!
மருத.வடுகநாதன், வேதாரண்யம்: ஊரக, உள்ளாட்சித் தேர்தலில், பா.ம.க., படு தோல்வியைச் சந்தித்துள்ளதே...
இவர்கள் தான் வரும் சட்டசபை தேர்தலில் தனித்து நின்று, 60 இடங்களைப் பிடித்து, ஆட்சியைப் பிடித்து, அன்புமணியை முதல்வராக்கப் போகின்றனராம்! படு தமாஷாக இல்லை!
மருதுார் மணிமாறன், இடையன்குடி, நெல்லை: 'வாரமலர்' படிக்கும்போது மட்டும், கொட்டாவியே வர்றது இல்லையே ஏன்?
'வாரமலர்' இதழ் என்ன நாடாளுமன்றமா... 'கொர்' விடுவதற்கு...
சோ. ராமு, செம்பட்டி, திண்டுக்கல்: ஊழல் அரசியல்வாதிகளின் மீது போடப்படும் வழக்குகளின் முடிவு...
மொத்தம், 25 ஆண்டுகளுக்குப் பின், கம்பி எண்ணும் தீர்ப்பு கிடைக்கும்! அதற்குள் அரசியல் குற்றவாளிகளின் வயது 70 ஆகி இருக்கும். இதற்கு பின் மேல் முறையீடு செய்வர். அதன் தீர்ப்பு வருமுன், கட்டையை நீட்டி விடுவர். இதுதான் இன்றைய நிலை!
* அ. சிவக்குமார், திருப்பாப்புலியூர்: கட்சியை வைகோ, கலைத்து விட்டு, உதயநிதி ரசிகர் மன்றம் ஆரம்பித்தால், தி.மு.க., ஆட்சி உள்ள வரை, நல்ல நிகழ்காலம் அவருக்கு இருக்கும் அல்லவா?
அருமையான யோசனையாக இருக்கே... உதயநிதி நடிக்கும் படங்களில், வைகோவுக்கும், அவர் மகனுக்கும், முறையே தாத்தா, அப்பா வேடங்களும், அண்ணன் வேடம் கிடைப்பதற்கும் வாய்ப்புள்ளதே!
ஆர். பிரசன்னா, ஸ்ரீரங்கம், திருச்சி: 'அரசு கையாள தேவையில்லாத துறைகளை தனியாரிடம் வழங்குகிறோம்...' என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளாரே...
சரியான முடிவு தான்! அரசு ஏன் லட்சக்கணக்கான கோடிகளை இவற்றின் மூலம் இழக்க வேண்டும்?
* கே. சகுந்தலா, கோவில்பட்டி, துாத்துக்குடி: நம்மை வெற்றி தேடி வர, என்ன தகுதி தேவை?
உண்மையே எப்போதும் பேசுங்கள். பொய் பேசினால் நிறைய ஞாபக சக்தி தேவை. புத்திசாலி பொய் சொல்ல மாட்டான்; மாறாக உண்மையை சொல்வதை தவிர்த்து விடுவான் - வெற்றி தேடி வரும்!