ஆட்டுக்கறி!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 அக்
2021
00:00

''அம்மா... அன்னிக்கு ஒருநா கோவாலு மாமா வூட்லருந்து தந்தாங்களே... நாங்கூட, 'அவுக் அவுக்'ன்னு அள்ளி அள்ளி சாப்புட்டனே. அதே ஆட்டுக்கறியா... இன்னைக்கு தருவாங்களாம்மா?'' என்றான், கண்ணன்.
''ஆமாடா ராசா... அதே தான்,'' என்றாள், சுந்தரி.
''அய்ய்யா... அப்போ ஜாலி தான்! ஏம்மா... நல்லா மணக்குமே. நாம் ஒரு தடவை ஊருக்கு போனப்போ, நம்ம ஆச்சி உசிரோட இருந்தப்போ வச்சுக் குடுத்தாளே... அந்த ஆட்டுக்கறி தானே?''
''ஆமா கண்ணா... அதே தான். நீ தொண தொணன்னு பேசாம, கொஞ்சம் வெரசா நட,'' ஏழு வயது மகனின் கையை பிடித்து வேகமாக நடந்தாள், சுந்தரி.

கட்டியவன் சரியில்லாததால், வீட்டு வேலைக்குப் போய் இவள் கொண்டு வரும் காசும் சாராயக் கடைக்கே சரியாகி விடும். பசியும், பட்டினியுமான ஜீவனம்.
தனக்கு பிறந்த இந்த ஒற்றை மகனை, எப்படியாவது கஷ்டப்பட்டு, நல்லபடியாக வளர்த்தெடுக்க வேண்டும் என்பதையே லட்சியமாய் நினைத்து, உயிர் வாழ்கிறாள். இவளுக்குத் துணையாய் இருந்த ஒரேயொரு ஜீவன், இவளின் தாய் தான். அவளும் இரண்டு மாதங்களுக்கு முன் போய்ச் சேர்ந்து விட்டாள்.
''அம்மா... அந்த ஆட்டுக்கறி இருக்குல்ல... அதுல...''
''டேய் கண்ணா... கொஞ்சம் பேசாம வெரசா நடடா, நேரமாச்சு... இல்லாட்டி அங்கன போய் நாந்தான் ஏச்சு வாங்கணும்.''
அவள் வேலை பார்க்கிற வீட்டில் இன்று விருந்தினர்கள் நிறைய பேர் வருவதால், சீக்கிரம் வர சொல்லியிருந்தனர். இன்று மதியம் ஆட்டுக்கறி விருந்து என்று அவர்கள் பேசியது இவள் காதில் விழ, தன் மகனையும் அழைத்துச் செல்கிறாள்.
அங்கு போய் சேர்ந்ததும், ''இங்க பாரு ராசா... நீ, பேசாம அந்த மரத்தடியில் போய் ஏதாவது வெளையாடிட்டு இரு. அவுங்க என்னை சாப்பிட கூப்பிடும்போது, நா உன்ன கூப்புடுவேன்... நீ அப்போதான் வரணும் சரியா,'' என்று சொல்லி, மகனை முத்தமிட்டு வீட்டுக்குள் நுழைந்தாள்.
''என்னடி சுந்தரி... என்னிக்கு சீக்கிரம் வான்னு சொல்றேனோ, அன்னிக்குத்தான் நீ, லேட்டா வருவே... ஆமா, அது யாரு, உம் மவனா?'' என்றாள், கிரிஜாம்மா.
''ஆ... ஆமாம்மா. எப்பவும் பக்கத்து வூட்டு பசங்க கூட வெளையாட சொல்லிட்டு, நான் இங்கன வேலைக்கு வருவேன். இன்னிக்கு அவுக எல்லாம் ஒரு கண்ணாலத்துக்குப் போயிட்டதால, இவன் தனியா இருப்பானேன்னு கூட்டியாந்தேன்.''
''சரி சரி... சும்மா புள்ளைய கொஞ்சிட்டு இருக்காம, கடகடன்னு வேலையைப் பாரு... கறிக்கு அரைக்க வேண்டிய மசாலால்லாம் அம்மிகிட்ட வச்சிருக்கேன். போய் மொதல்ல அதை அரைச்சு எடுத்திட்டு வா,'' என்றாள் அதட்டலாய்.
போய் பார்த்தவளுக்கு மயக்கம் வராத குறை தான். பக்கத்திலேயே இரண்டு பேர் நின்று கறியைக் கழுவுவதை பார்த்தாள்.
'அடேங்கப்பா... இவ்ளோ கறியா... எப்படியும் அஞ்சு கிலோ இருக்குமே...' என, நினைத்துக் கொண்டாள்.
இவள் என்றைக்கு இவ்வளவு கறியைப் பார்த்தாள். அதனால் தான், 10 கிலோ கறியை பாதியாய் எடை போட்டு அதற்கே மலைத்துப் போனாள்.
'இவ்ளோ கறிக்கும் மசாலா, தனியா நானே அரைக்கணுமா...' நினைத்தவளுக்கு தலை சுற்றியது.
யோசித்தால் வேலைக்கு ஆகாது என்று தன்னைத்தானே தேற்றி, சேலையை துாக்கி சொருகி, அரைக்கத் துவங்கினாள், சுந்தரி.
பட்டை, கிராம்பு, சோம்பு, கசகசா என்று, மசாலாவை அரைக்க அரைக்க, மணம் துாக்கியது.
வெளியே விளையாடிக் கொண்டிருந்த கண்ணனுக்கு, அந்த வாசமே பசியையும், ஆசையையும் துாண்ட, மெதுவாக நடந்து சமையலறைப் பக்கம் வந்தான்.
''அம்மா... ஆட்டுக்கறி குழம்பு வாசம் துாக்குதும்மா. அன்னிக்கு சாப்புட்ட அதே வாசம், அதுக்கப்புறம் இன்னிக்கு தான் வருதும்மா,'' ஆசையாய் அம்மாவிடம் சொல்ல, சுந்தரிக்கு கண்கள் கலங்கியது.
'ஒத்தப்பிள்ளை ஆசப்படுறத கூட வாங்கி குடுக்க முடியாத பாவியா இருக்கேனே... கோவாலு அண்ணன் வூட்ல கெடா வெட்னப்போ, கறி குடுத்துச்சு... அதை சாப்பிட்டு ரெண்டு வருசமாவப் போகுது... அதையே நினைச்சிட்டு இருக்கானே...' என்று வருந்தியவள், மகனைப் பார்த்து சிரித்தாள்.
''ஏய், அங்க என்னடி கொஞ்சல்... இங்கன எம்புட்டு வேலை இருக்கு... சீக்கிரமா வந்து வெங்காயம், பூண்டு எல்லாம் உரிச்சு, இவங்ககிட்ட குடு,'' என்று அதட்டினாள், கிரிஜாம்மா.
'ஓடு ஓடு... அங்க போய் உட்கார்ந்துக்கோ...' என்று, சைகை செய்தாள்.
கடகடவென பூண்டு, வெங்காயம் உரிக்கத் துவங்கினாள்.
மரத்தடியில் உட்கார்ந்து, அணில், குருவியை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான், கண்ணன்.

ஒருவழியாக சமையல் வேலைகள் விறுவிறுவென நடந்து முடிந்தது. காலையில் கொஞ்சம் கஞ்சி குடித்துவிட்டு வந்ததால், சுந்தரிக்கு தலையை சுற்றியது. ஏதாவது சூடாக குடித்தால் தெம்பாக இருக்கும் என்று தோன்றியது.
யாரிடம் கேட்க, எப்படி கேட்க என்று யோசித்து, வெளி பைப்பில் தண்ணீர் பிடித்து குடித்து, முகத்திலும் தண்ணீரை தெளித்து கழுவி ஆசுவாசப்படுத்திக் கொண்டாள். பூண்டும், வெங்காயமும் நிறைய உரித்ததில், நகங்களில் எரிச்சலும், வலியுமாய் இருந்தது.
விருந்தினர்கள் வந்ததும், பந்தி துவங்கியது. எல்லாரும் சாப்பிட்டு முடித்தபின் தான் சுந்தரிக்கு கொடுப்பர். அதுவும் இவளுக்கு மட்டும் தான்; வீட்டுக்கெல்லாம் கொடுக்க மாட்டார்கள். சங்கோஜப்பட்டு, இவளும் எதுவும் கேட்க மாட்டாள்.
சுந்தரிக்காக கொடுக்கும் தோசை, இட்லிகளை, அங்கிருக்கும் வாழை மர இலையைப் பறித்தோ அல்லது சமயத்தில் இவள் சேலையில் வைத்தோ வீட்டுக்கு எடுத்து வந்து, மகனுக்கு கொடுப்பாள்.
ஆனால், இன்று ஆட்டுக்கறி விருந்து என்பதால், 30 பேர் சாப்பிடும் இடத்தில், ஒரு சின்ன குழந்தைக்கு தரமாட்டார்களா என்ற எண்ணத்தில், அவர்களை கேட்காமலே மகனை அழைத்து வந்து விட்டாள்.
வந்தவர்கள் எல்லாரும் சாப்பிட்டு முடித்ததும், ''சுந்தரி...'' என்றாள், கிரிஜாம்மா.
''என்னம்மா?'' என்று அவசரமாக ஓடினாள்.
அம்மாவை அவர்கள் கூப்பிட்ட சத்தம் கேட்டு ஓடி வந்த கண்ணன். சமையலறை வாசலில் நின்று எட்டிப் பார்த்தான்.
எப்போதும் இவளுக்கு கொடுக்கும் பீங்கான் தட்டில், நிறைய சோறை அள்ளி வைத்து, எலும்போடும், கறியோடும் குழம்பை அள்ளி ஊற்றினாள், கிரிஜாம்மா. தட்டில் சோற்றை விட கறித்துண்டுகளே அதிகம் தெரிந்தது. கண்கள் விரிய ஆசையோடு பார்த்தான், கண்ணன். சுந்தரிக்கே ஆச்சர்யம்...
'ஏ அப்பா... எவ்ளோ கறி... கண்ணனும், நானும் வயிறு நிறைய சாப்பிட்டாலே மிச்சம் வரும் போலிருக்கே...' என்று மனதுக்குள் குதுாகலித்தாள். கண்ணனை திரும்பி பார்த்தாள். அவன் சிரிக்க, சந்தோஷமானாள்.
''ஏய்... என்ன மசமசன்னு நின்னுட்டுருக்க, அங்க எல்லாரும் சாப்பிட்டாச்சு. போய் அந்த இலைகளை எடுக்க வேண்டாமா... ஓடு,'' என்று விரட்டினாள், பங்கஜம்மா.
''இதோ போறேம்மா,'' என்று ஓடினாள்.
'சரி, அவங்க குடுக்கிறதை வாங்கி மொதல்ல கண்ணன் சாப்பிடட்டும்...
நாம் இதை முடிச்சிட்டு போவோம்...'
என்று எண்ணி அவசர அவசரமாக இலைகளை எடுத்து, குப்பையில் போட்டு, கண்ணனை பார்த்தாள்.
அவன், பசியோடு சுந்தரியை பரிதாபமாக பார்க்க, 'என்னடா... சாப்பாடு தரலையா...' என்று கண்களாலேயே விசாரித்தாள்.
அவன் பார்வை, கிரிஜாம்மா கொஞ்சி கொஞ்சி ஆசையாய் வளர்க்கும், டாபர்மேன் டைகரின் தட்டு பக்கம் போனது. அதைப் பார்த்ததும் தான் இவளின் தட்டும், டாபர்மேனின் தட்டும், ஒரே மாதிரியான பீங்கான் தட்டுகள் என்ற ஞாபகம் வந்தது.
'ஓ... இதுக்குதான் அப்படி அள்ளி அள்ளி வச்சாங்களா... இது தெரியாம நான் வேற லுாசு மாதிரி... ச்சே... ஆனாலும், பாவம் புள்ள பசியோட இருக்கானே' என, மனதில் மறுகினாள். கண்ணனைப் பார்த்தாள். பசியிலும், ஏமாற்றத்திலும் முகம் வாடி, மரத்தடியில் படுத்திருந்தான்.
இவளுக்கு அழுகையாக வந்தது.
''ஏய் சுந்தரி...'' என்றாள், கிரிஜாம்மா. உள்ளே போனாள்.
''இந்தா... இதுல நிறைய சோறு வச்சிருக்கேன்; கறிக்குழம்பு தீர்ந்து போச்சு. அதனால, ரசம் ஊத்தியிருக்கேன். மிளகு ரசம்டி, உடம்புக்கு நல்லது. ரெண்டு அவிச்ச முட்டையும் வச்சிருக்கேன். நீயும், உன் பிள்ளையும் நல்லா சாப்பிடுங்க,'' தட்டை அவள் கையில் வைத்து, போய் விட்டாள்.
கண்களில் கண்ணீர் பொங்க, நடுங்கிய கைகளால் தட்டை பிடித்துக் கொண்டாள். தட்டில் என்ன இருக்கிறதென்பதே தெரியாமல் கண்ணீர் மறைத்தது.
வெளியே ஆட்டுக்கறி சாப்பிட ஆசையோடும், பசியோடும் காத்திருக்கும் பிள்ளையிடம் என்ன சொல்வது என அழுதபடியே வெளியே வந்தாள்.

டைகரின் தட்டில், பாதிக்கு மேல் சாப்பாடும், கறித்துண்டுகளும் இருந்தது. அதைப் பார்த்ததும், அவளுக்கு இன்னும் அழுகை பொத்துக் கொண்டு வந்தது.
'இந்த நாய்க்கு கிடைக்கும் பரிவு கூட ஒரு மனுஷிக்கு இல்லையா... ஏன்... நான் ஒரு ஏழை. காசு பணமில்லை. அதுக்காக இப்படியா என்னை, என் மனசை, உணர்வுகளை கசக்கிப் பிழிவாங்க...' என நொந்தபடி, துாங்கிக் கொண்டிருந்த கண்ணனை எழுப்பினாள்.
பாதி துாக்கத்தில் இருந்தவன், தட்டைப் பார்த்ததும், அவசரமாக ஆசையோடு எழுந்து உட்கார்ந்தான்.
மனதை கல்லாக்கியபடி, ரச சாதத்தையும், முட்டையையும் எடுத்து ஊட்டினாள்.
''அம்மா... ஆட்டுக்கறி?'' என்றான்.
அழுது சிவந்திருந்த அவள் கண்களைப் பார்த்ததும், அந்த சிறுவனுக்கு எல்லாம் புரிந்தது.
''ஆட்டுக்கறி இல்லன்னா பரவாயில்லம்மா... இந்த சாப்பாடு கூட கிடைக்காம, எத்தன பேர் பட்டினியா இருப்பாங்க... நீ அழாதம்மா... நான் படிச்சு, பெரியவனாயி, வேலைக்குப் போயி நெறய காசு சேர்க்கிறேன்.
''அப்போ, உனக்கும், எனக்கும் மட்டுமில்ல... நம்மள மாதிரி கஷ்டப்படுற நிறைய பேருக்கு நல்லா சாப்பாடு போடுவோம்மா,'' என்று அவளை ஆறுதல் படுத்தினான்.
''என் தங்கமே...'' என்று கண்ணனை கட்டிக்கொண்டு அழுதாள், சுந்தரி.

சுபா செல்வக்குமார்
கன்னியாகுமரி மாவட்டத்தில் வசித்து வருகிறேன். இல்லத்தரசியாய் இருந்த நான், வளர்ந்து வரும் ஒரு எழுத்தாளராய் அறியப்படுவதில் மிகவும் மகிழ்கிறேன். கடந்த ஆறு மாதங்களாக, 'மாம்ஸ்ப்ரெஸ்ஸோ' எனும் வலைதளத்தில் நிறைய சிறுகதை, குறுங்கதை மற்றும் கட்டுரைகளை எழுதி வருகிறேன். அதற்காக பணப்பரிசுகளும் பெற்றிருக்கிறேன்.
டி.வி.ஆர்., நினைவு சிறுகதைப் போட்டியில் கலந்து கொள்வது இதுவே முதல்முறை. நான் விரும்பும் பத்திரிகை நடத்திய போட்டியில் பங்கேற்று பரிசு பெற்றிருப்பது மிக்க மகிழ்ச்சி.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (5)
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
03-நவ-202102:34:48 IST Report Abuse
Natarajan Ramanathan சைவம் மட்டுமே சாப்பிடும் என்போன்ற நபர்களுக்கு எல்லாம் இந்த மாதிரி அபத்த கதைகளை படிக்கும்போது ஏன் மனிதர்களும் இப்படி அசைவம் என்றாலே கேவலமாக அலைகிறார்கள் என்று மிகவும் வெறுப்பாக இருக்கிறது.
Rate this:
Cancel
Velu Mandhimuthiriyar - COIMBATORE,இந்தியா
29-அக்-202120:45:05 IST Report Abuse
Velu Mandhimuthiriyar ஏழைக்கு கிடைத்த எள்ளுருண்டை.... அதையாவது கொடுத்தார்களே
Rate this:
Cancel
Vk -  ( Posted via: Dinamalar Android App )
25-அக்-202108:54:16 IST Report Abuse
Vk PLEASE DON'T REPEAT THE SAME COMMENT
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X