'ஸ்கெட்ச்' போட்டு அடிக்கும், வடிவேலு!
சினிமாவில் காமெடியனானபோது, தனக்கென தனி, 'ஸ்டைலை' வைத்து நடித்து வந்தார், வடிவேலு. அந்த, 'ஸ்டைலில்' அவரை தவிர யாராலும் நடிக்க முடியாது என்றொரு நிலையை உருவாக்கினார். தற்போது, 'ரீ - என்ட்ரி' கொடுத்துள்ளவர், 'பழைய பாணியிலிருந்து மாறுபட்டு, புது மாதிரியான வடிவேலுவாக வெளிப்படுத்தப் போகிறேன். 'டயலாக் டெலிவரி' மட்டுமின்றி, 'பாடிலாங்குவேஜை'யும் பக்காவாக மாற்றி, 'ஸ்கெட்ச்' போட்டு அடிக்கப் போகிறேன்...' என்கிறார்.
சினிமா பொன்னையா
ஓவியாவை ஓரங்கட்ட வைத்த, அரசியல்!
களவாணி நடிகை, ஓவியா, பிக்பாசில் பரபரப்பை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, அரசியல் தலைவர்கள் குறித்த எதிர்மறை கருத்துக்களை, 'சோஷியல் மீடியா'வில் பதிவிட்டார். ஆனால், அதுவே அவருக்கு ஆப்பு வைத்தது. இந்த நடிகைக்கு தங்கள் படங்களில் வாய்ப்பு கொடுத்தால், அரசியல் ரீதியான எதிர்ப்புக்கு ஆளாக வேண்டியிருக்கும் என்று, ஓவியாவை ஓரங்கட்டினர், சில இயக்குனர்கள். இந்த ரகசியத்தை எப்படியோ மோப்பம் பிடித்த ஓவியா, பதறிவிட்டார். அதையடுத்து, 'அரசியல் தலைவர்களை சீண்டியது, 'பப்ளிசிட்டி'காகத்தான். மற்றபடி அவர்களுடன் எனக்கு வாய்க்கால் வரப்பு சண்டை எதுவும் கிடையாது...' என்று, தன்னிலை விளக்கம் கொடுத்துள்ளார். சீ... சீ... என்றதும் இந்த வாய்தான்; சிவ சிவா என்கிறதும் இந்த வாய்தான்!
—எலீசா
மிரட்டும், சாய் பல்லவி!
இதுவரை தான் நடிக்கும் படங்களின், 'ஹீரோ'களை மிஞ்சும் நடிப்பை வெளிப்படுத்தி, 'ஓவர்டேக்' செய்து வந்த, சாய்பல்லவி, இப்போது நடனத்திலும் அதிரடி காட்டி வருகிறார். குறிப்பாக, 'ரவுடிபேபி' பாடலின், 'ஹிட்'டுக்கு பிறகு, தலா இரண்டு பாடல்களிலாவது செமத்தியான ஆட்டம் போட வாய்ப்பு தருமாறு நிபந்தனை போட்டு ஒப்பந்தமாவதுடன், அந்த படங்களில் தன்னுடன் நடிக்கும், 'மெகா ஹீரோ'களை கூட தன் அசத்தலான நடனத்தால் ஓரங்கட்டி வருகிறார். இதனால், சாய்பல்லவி தங்கள் படங்களின், 'ஹீரோயினி' என்றாலே, பல, 'ஹீரோ'கள் மிரண்டு போகின்றனர்.
— சினிமா பொன்னையா
அதிரடி காட்ட வரும், நந்திதா!
குடும்பப்பாங்கான வேடங்களாக நடித்து வந்த, நந்திதாவுக்கு, பட வாய்ப்புகள் குறைந்தபோது, அவரை கவர்ச்சி நடிகையாக்க சிலர் திட்டமிட்டனர். அவரோ அதிலிருந்து, 'எஸ்கேப்'பாகி, தெலுங்கில், 'ஆக் ஷன்' நாயகியாக நடித்து வருகிறார். அதேசமயம், படம் முழுக்க, 'ஆக் ஷனில்' வந்தால் ரசிகர்களுக்கு போரடித்து விடும் என்பதால், கவர்ச்சிகரமாகவும் தோன்றி பாடல் காட்சிகளில் அல்லு தெறிக்க விடுகிறார். இப்படி, 'ஆக் ஷன்' மற்றும் -கவர்ச்சி என்று நந்திதா கலந்துகட்டி அடிப்பதைப் பார்த்த கோலிவுட் கமர்ஷியல் இயக்குனர்கள், தற்போது அவருக்கு அழைப்பு விடுத்துள்ளனர். 'கூடிய சீக்கிரமே கோலிவுட் கோதாவில் மீண்டும் குதிக்கப் போகிறேன்...' என்கிறார். எண்ணெய் தடவிக்கொண்டு மண்ணில் புரண்டாலும் ஒட்டுவது தான் ஒட்டும்!
— எலீசா
சினி துளிகள்!
* சில ஆண்டுகளுக்கு முன், சினிமாவில் நடிக்க பாக்யராஜிடம் வாய்ப்பு கேட்ட யோகிபாபுக்கு, அவர் இயக்கிய, சித்து +2 படத்தில், சிறிய வேடம் கொடுத்தார். அதற்காகவே, தற்போது, பாக்யராஜ் மகன், சாந்தனு நடித்துள்ள ஒரு படத்தில், 'கால்ஷீட்' கேட்டதும், உடனே கொடுத்து, நன்றிக்கடன் செலுத்தியுள்ளார்.
* மது பாட்டிலுடன் தான் ஆட்டம் போடும் வீடியோவை வெளியிட்டு, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார், நடிகை அமலாபால்.
* திருமணத்திற்கு பிறகும் நடித்து வந்த, காஜல் அகர்வால் கர்ப்பமாகி விட்டதால், ஏற்கனவே ஒப்பந்தமான படங்களில் இருந்து விலகி வருகிறார்.
அவ்ளோதான்!