அக்., 30, தேவர் பிறந்த, நினைவு தினம்
வழக்கம் போல், மாலையில் வீடு திரும்பிய பசும்பொன் தேவர், அவரது காரோட்டியை அழைத்து, அவரிடம் ஒரு தொகையை கொடுத்து, 'தம்பி... இந்த பணத்தில், விலை உயர்ந்த நல்ல புடவை ஒன்றை எடுத்துக் கொள். தட்டில் வைக்க பழங்களும் வாங்கிக் கொள். நாளை காலை சீக்கிரம் வா, நாம் ஒருவரை பார்க்க வேண்டும். இப்போது நீ கிளம்பலாம்...' என்றவாரே வீட்டிற்குள் சென்று விட்டார்.
காரோட்டிக்கோ ஒரே குழப்பம். தேவரோ பிரம்மச்சாரி. பிற பெண்களை மதிப்பவர். அவர் யாருக்கு, அதுவும் விலை உயர்ந்த புடவை வாங்குகிறார் என குழம்பியபடியே, கடைக்கு சென்று, நல்ல விலையில் ஒரு புடவையும், பழங்களையும் வாங்கிக் கொண்டு, மறுநாள் அதிகாலையில், தேவரை பார்க்க வந்து விட்டார்.
தயாராக இருந்த தேவர், 'வந்து விட்டாயா...' எனக் கூறி, காரில் ஏறிக்கொண்டார். கார் புறப்பட்டது. யாருக்கு இந்த புடவை என குழம்பியபடியே, காரோட்டினார், டிரைவர். ஒரு குறுகிய சந்தை அடையாளம் காட்டி, காரை நிறுத்தி இறங்கினார், தேவர்.
டிரைவரும் இறங்கி, தாம்பாளத்தில் அந்த புடவையையும், பழங்களையும் வைத்து சுமந்தபடி, அந்த குறுகலான தெருவில், பல சந்துகளை கடந்து, இறுதியில் ஓர் சிறிய வீட்டிற்கு சென்றனர்.
அங்கு, 40 வயது மதிக்கதக்க விதவை பெண்மணி, தேவரை கண்டதும், வணங்கி வரவேற்றார். குட்டையான வாசலில் தலையை குனிந்து, வீட்டினுள் நுழைந்தார், தேவர். வெளியே நின்றிருந்தார், காரோட்டி. அப்பெண்மணியிடம் நலம் விசாரித்து, பின், குடிப்பதற்கு நீர் கேட்டார், தேவர்.
அப்பெண்மணி உள்ளே சென்றதும், ஜிப்பாவில் இருந்து ஒரு கட்டு பணத்தை எடுத்து, அந்த புடவையின் நடுவே மறைவாக வைத்தார். பெண்மணி கொணர்ந்த நீரை வாங்கி அருந்திய பின், தான் கொண்டு போன புடவை, பழத் தட்டை கொடுத்து அவரது காலில், நெடுஞ்சாண் கிடையாக விழுந்து நமஸ்கரித்தார், தேவர்.
இதை வெளியே இருந்து பார்த்துக் கொண்டிருந்த காரோட்டி, கலங்கிப் போனார். மேலும், உள்ளே என்ன நடக்கிறது என கேட்க, தன் காதை கூர்மையாக்கிக் கொண்டார். 'அம்மா... நான் கிளம்புகிறேன். உங்களுக்கு எந்த உதவி வேண்டுமானாலும் ஒரு வார்த்தை சொல்லி அனுப்புங்கள். ஓடோடி வந்து உதவ காத்திருக்கிறேன்...' என, கண்ணீர் மல்க கூறினார், தேவர்.
புன்னகையோடு, 'போதும். நீங்கள் செய்வதே என் தேவைக்கு அதிகமானதாகவே உள்ளது. உங்களை மறவேன்...' என்று அப்பெண்மணி கூற, கண்ணீரை துடைத்தபடி, காரோட்டியை திரும்பி பார்க்காது, விறுவிறுவென வேகமாக நடந்து வந்து காரில் ஏறிக்கொண்டார். காரை ஓட்ட துவங்கினார், காரோட்டி.
சிறிது நேரத்திற்கு பின், 'அய்யா, உங்களிடம் ஒரு கேள்வி... யார் அந்த பெண்மணி... நீங்கள் ஏன் அவர் காலில் விழுந்து நமஸ்கரித்தீர்கள்... எனக்கு ஒரே குழப்பமாக இருக்கு...' என்றார், காரோட்டி.
சற்று நேரம் மவுனமாக இருந்தவ தேவர், 'அவள் என் தாய்... என் தாய்க்கும் மேலானவள். மண வாழ்வு கண்ட சில நாட்களிலேயே தன் இளம் வயது கணவனை இந்திய சுதந்திரத்திற்காக விட்டுக் கொடுத்தவள். நள்ளிரவில், மணியாச்சி புகைவண்டி நிலையத்தில், வ.உ.சி.,க்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்ததற்காக, வெகுண்டெழுந்து, கவர்னர் ஆஷ்ஷை சுட்டுக்கொன்ற வாஞ்சிநாதய்யரின் மனைவி அவள்.
'தேசத்திற்காக தன்னையே கொடுத்த, என் தந்தையான வாஞ்சியின் மனைவி, எனக்கு தாயன்றோ... அவளை வணங்குதல் தவறோ...' என, கலங்கியபடியே கூறினார்; காரோட்டியின் கண்களிலும் தாரை தாரையாய் கண்ணீர் வழிந்தது.
ஓர் தலைவனையே சிறு குழந்தையென நெகிழ வைத்து, அன்பால், தியாகத்தால் அடிமைப்படுத்திட்டான் மாவீரன் வாஞ்சிநாதன். வீழ்வது நாமாக இருந்தாலும், வாழ்வது தேசியமாக இருக்கட்டும் என்ற தேச பக்தியோடு வாழ்வோம்.
நடுத்தெரு நாராயணன்