அன்புடன் அந்தரங்கம்! | வாரமலர் | Varamalar | tamil weekly supplements
அன்புடன் அந்தரங்கம்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

24 அக்
2021
00:00

அன்புள்ள சகோதரிக்கு —
என் கணவர், அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெற்றவர். எங்களுக்கு இரண்டு மகன்கள். மூத்தவன் - முதுநிலை பவுதீகம் படித்தவன். அவனுக்கு திருமணமாகி, 18 ஆண்டுகள் ஆகின்றன.
15 வயதில் மகளும், 10 வயதில் மகனும் இருக்கின்றனர்.
10ம் வகுப்பு படிக்கும் பேத்தி, நான்கு மாதங்களுக்கு முன் பெரிய மனுஷி ஆகிவிட்டாள்.
இரண்டாவது மகன், அரசு கல்லுாரியில் விரிவுரையாளராக இருக்கிறான். அவனுக்கு திருமணமாகி, 10 ஆண்டுகள் ஆகிறது. நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு அவன் மனைவி கர்ப்பமாய் இருக்கிறாள். இன்னும் ஐந்தே மாதங்களில் பேரனோ, பேத்தியோ பெற்று கொடுக்கப் போகிறாள்.

மூத்த மகன் என்னிடம், 'அம்மா... பருவம் எய்திய மகளை உன்னிடம் ஒப்படைக்கிறேன். இரண்டு ஆண்டுகள் அவள் உன் பாதுகாப்பில் இருக்கட்டும். இங்கேயே அவளை பள்ளியில் சேர். நல்ல பழக்கவழக்கங்களை கற்று கொடுத்து பண்புள்ளவள் ஆக்கு. இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு என்னிடம் கொண்டு வந்து விடு...' என்றான்.
எனக்கும், கணவருக்கும் உயர் ரத்த அழுத்தமும், சர்க்கரையும் இருக்கிறது. தினமும் மாத்திரை எடுத்துக் கொள்கிறோம்.
பேத்தியை எங்கள் ஊருக்கு அழைத்து வந்து விட்டோம். காலை, 10:00 மணி வரை துாங்கும் அவளை, 7:00 மணிக்கு எழுப்ப நான் படும் பாடு சொல்லி மாளாது. காலை, 10:00 - 4:00 மணி வரை பள்ளியின், 'ஆன்லைன்' வகுப்பு; இரவு, 7:00 - 10:00 மணி வரை வீட்டுப் பாடம்.
'ஆன்லைன்' வகுப்புகளின் போதே கார்ட்டூன் பார்ப்பாள். கிடைக்கும் நேரங்களில், 'வீடியோகேம்' ஆடுவாள். மாலை, 4:00 - 6:45 மணி வரை, 'டிவி' பார்ப்பாள்.
நான் மிகவும் கண்டித்தால், 'ஏன் பாட்டி உயிரை வாங்கற... நீயும், தாத்தாவும் மோசம். நான் எங்க வீட்லயே இருந்திருப்பேன். இங்க கூட்டிவந்து ஏன் கொடுமைபடுத்துற...' என கோபிப்பாள். இந்த இரண்டு மாதங்களில் இரண்டு மொபைல், ஒரு மடிகணினியை உடைத்து விட்டாள், பேத்தி.
பேத்தியை குளிக்க வைப்பது, பேன் பார்த்து தலைவாரி விடுவது, வீட்டு பாடங்களை எழுதி கொடுப்பது, பிடித்ததை சமைத்து ஊட்டி விடுவது, சானிடரி நாப்கின்களை பயன்படுத்த சொல்லிக் கொடுப்பது... இப்படி, சில தனி பாடங்களை சொல்லிக் கொடுப்பதும் நான் தான்.
தினம் ஆறு தடவை போன் செய்து, மகள் ஒழுங்காக படிக்கிறாளா, சரியா சாப்பாடு தருகிறேனா என சோதிப்பான், மூத்த மகன். நாள் முழுவதும் அவள் பின்னே ஓடுகிறேன். இருந்தும் என்னை சபிக்கிறாள், பேத்தி.
இடையில், 'பேத்தியை இன்னும் நான்கைந்து மாதங்களில் அவங்க பெற்றோரிடம் விட்டுடு. எங்கள் கூடவே இருந்து, எனக்கு பிறக்கும் மகன் (அ) மகளை கவனித்துக்கொள்...' என்கிறான், இரண்டாவது மகன்.
இரு மகன்களை பார்த்து, 'அய்யா சாமிகளா, எங்கள விட்ருங்க... உங்களை பெத்து வளத்து ஆளாக்கி திருமணமும் செஞ்சு வச்சதோட எங்க கடமை முடிஞ்சு போச்சு. நானும், அவரும் நிம்மதியான ஓய்வூதிய வாழ்க்கை வாழ அனுமதிங்க'ன்னு கதற தோன்றுகிறது.
இந்த ஆயா வேலையிலிருந்து விடுதலையாக, நல்ல யோசனை கூறுங்கள், சகோதரி.
இப்படிக்கு,
அன்பு சகோதரி.


அன்பு சகோதரிக்கு —
'ஆயா வேலை' என்று சொன்ன உன் வாயை கழுவு. தன்னை எப்படி அம்மா சிறப்பாக படிக்க வைத்து ஆளாக்கினாரோ அதேபோல பேரன், பேத்திகளையும் வளர்த்து ஆளாக்க வேண்டும் என்ற நல்லெண்ணம் கொண்டுள்ளனர், மகன்கள்.
அம்மாவழி பாட்டி என்பது, உலகிலேயே மிக உயர்ந்த ஸ்தானம். ஒரு பாட்டி, 10 மருத்துவர், 10 ஆசிரியர்களுக்கு சமம். பெற்றோர் வளர்க்கும் குழந்தைகளை விட, பாட்டி வளர்க்கும் குழந்தைகள் அதிகம் சாதிக்கின்றனர்.
உன்னிடம் சுற்றுலா நோக்கமாய் வரவில்லை, பேத்தி; சகலத்தையும் கற்று கொள்ள வந்திருக்கிறாள். கற்றுக் கொள்ளும்போது உன்னை ஏசவும், பேசவும் தான் செய்வாள்.
உயர் ரத்த அழுத்தமும், சர்க்கரையும் இப்போது, 30 வயது இளைஞர் - இளைஞிகளுக்கே வந்து விடுகிறது. இரண்டுக்கும் உரிய மருந்து எடுத்து, 50 ஆண்டுகள் வாழலாம். சோம்பலாய் இருந்த உங்கள் ஓய்வூதிய வாழ்க்கையை 24 மணி நேரமும் இயங்கும் சுறுசுறுப்பான வாழ்க்கையாய் மாற்றி இருக்கிறாள், பேத்தி.
இரு மொபைல்களும், ஒரு மடிகணினியும் தானே உடைந்தது? வாஷிங்மெஷின், ப்ரிட்ஜ், 'டிவி' எல்லாம் பத்திரமாகதானே இருக்கின்றன. அவைகளை ஒன்றும் செய்யாமல் விட்டிருக்கும் பேத்தியை பாராட்டு.
இனி நீ என்ன செய்ய வேண்டும் தெரியுமா?
அரைகுறையாய் இல்லாமல் பேத்தி வளர்ப்பில் முழுமையாக ஈடுபடு. பேத்திக்கு நாட்டு கோழி முட்டை, நாட்டு கோழி சூப், நல்லெண்ணெய் கலந்த உளுந்தங்களி போன்றவற்றை உண்ணக் கொடு. 15 வயதுக்குரிய மனவளர்ச்சியை ஊக்கப்படுத்து.
சபிக்கும் பேத்தியிடம், 'நாளையே உன் அப்பாவிடம் உன்னை விட்டு வருகிறேன்' என கூறி பார். உன்னை கட்டியணைத்து, 'பாட்டியை விட்டு எங்கும் போக மாட்டேன்' என்பாள். பேத்தியின் சபிப்பு ஒரு நடிப்பு. அவளின் கோபம் மிகவும் தற்காலிகமானது.
உன் இரண்டாவது மருமகள், குழந்தையுடன் மகன் வீடு திரும்பும் போது, நீயும், பேத்தியும் போய் வரவேற்று ஆரத்தி எடுங்கள். பேத்தியையும், மகன் வழி பேரன் அல்லது பேத்தியை ஒரு சேர பார்.
கங்காருவுக்கு அதன் பையில் இருக்கும் குட்டி பாரமல்ல. அதை போல ஒரு பாட்டிக்கு பேரனோ, பேத்தியோ கூடுதல் சுமையல்ல. பேத்திக்கு திருமணமாகி குழந்தை பெற்றால், கொள்ளு பேத்தியையும் வளர்த்தெடுக்க நீண்ட ஆயுளை இறைவன் உனக்கு தரட்டும்.
என்றென்றும் பாசத்துடன்,
சகுந்தலா கோபிநாத்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

 We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X