யானைக்கு ஒரு காலம் வந்தால்
பூனைக்கு ஒரு காலம் வரும்!
''என்னங்க... இந்த விளம்பரத்தை பார்த்தீங்களா... இப்போதான் புரிஞ்சுது, இது, வருண்குமாருக்கு கொடுக்கப்பட்ட விளம்பரம்ன்னு...
''இன்னிக்கு, உங்க நாடகத்திற்கு, சினிமா நடிகர் வருண்குமார் சிறப்பு விருந்தினராக வர்றாரு. உங்க நாடகத்துக்கு எவ்வளவு பெரிய விளம்பரம், இப்பதான் பார்க்கறேன்,'' கையில் தமிழ் நாளிதழுடன் உள்ளேயிருந்து ஓடி வந்தாள், மனைவி ரேவதி.
தன் முன் கிடந்த பேப்பரை பார்த்தான், பார்த்திபன்.
இவன் பெயரும், நாடகத்தின் பெயரும் எங்கோ கீழே சிறு எழுத்துக்களாகவும், வருண்குமாரின் பெயரும், விளம்பரமும் தான் மிகப்பெரிதாக இருந்தது. வரதன் என்ற பெயரை வருண்குமாராக மாற்றியதே, இவன் தான்.
கடந்த காலம் கண் முன் ஓடியது.
தன் மனதுள் இருந்த யாரும் தொடாத அந்த கருப்புப் பெட்டியை திறந்து பார்த்தான், பார்த்திபன்.
கல்லுாரி இறுதியாண்டில், வரதன், பார்த்திபன், சகுந்தலா மூவரும் ஒன்றாக படித்தனர். இவர்கள் மூவருக்கும் இடையில் நட்பும், நல்ல புரிதலும் இருந்தது.
பெரிய பணக்காரரின் ஒரே மகள், சகுந்தலா. தினம் ஒரு காரில் வருவாள். கோவில் கும்பாபிஷேகம், பள்ளிக்கூடம் திறப்பு விழா, அய்யப்ப பூஜை எல்லாவற்றுக்குமே அவளது பெற்றோருக்கு தான் முதலிடம்.
ஆண்டுதோறும் அய்யப்ப பூஜைக்கு மாலை போடும் வைபவம், இவர்கள் வீட்டில் தான் விசேஷ பூஜையுடன் நடக்கும். அத்தனை பெரிய மனிதர்களும், சினிமா நடிகர்கள், இயக்குனர்களும் வருவர். அந்தாண்டு, சகுந்தலாவின் அப்பா மாலை போட இருப்பதால், அத்தனை பேரும் வந்திருந்தனர்.
அப்படிப்பட்ட ஒரு நாளில்தான் சகுந்தலா இவர்களை அழைத்து, 'வரதா... நீதான் சினிமா நடிகனாக ஆசைப்பட்ட. எங்க வீட்டுக்கு வா, மெட்ராஸ்ல இருந்து பெரிய பெரிய இயக்குனர்கள், அய்யப்ப பூஜைக்கு வர்றாங்க... அங்க போனா, உன்னால பார்க்க முடியாது. இங்கு சுலபமா அவங்களை சந்தித்து பேசலாம். அப்பாகிட்டே சொல்லி ஏற்பாடு பண்றேன். நீ பூஜைக்கு வரும்போது, அவங்கள போய் பாரு...?' என்றாள்.
அதன்பின், 'சாமி சரணம் அய்யப்ப சரண கோஷம்' முடித்தபின், இயக்குனர் ஒருவர் ஓய்வாக இருந்தபோது, வரதனுடன், பார்த்திபனும் சந்தித்தான்.
பார்த்திபனிடம், 'நடிப்பியா?' என்றார், இயக்குனர்.
'எனக்கு இல்லை சார்... என் நண்பனுக்கு தான் ரொம்ப ஆசை...'
'ஏன்பா உனக்கு ஆசை இல்லையா?'
'இல்லைங்க... எங்க வீட்ல அனுமதிக்க மாட்டாங்க... ரொம்ப ஆச்சாரமான குடும்பம்...'
'ஏன்பா நீயும் கூட வரலாம்ல்ல?' என்றார், இயக்குனர்.
'இல்ல சார்... வரதனுக்கு வாய்ப்பு கிடைச்சா எனக்கு கிடைச்ச மாதிரி. எனக்கு ஒரே ஒரு வேண்டுகோள் தான் சார்... ராஜேஷ்குமார், கிஷோர் குமார் இந்த மாதிரி வருண்குமார்ன்னு பேர் வைங்க... நல்லா இருக்கும்...' என்றான், பார்த்திபன்.
சிரித்தார், இயக்குனர்.
அதன்பின், வருண்குமாரின் உதயம். தொடர்ந்து பல வெற்றிப் படங்கள். அவன், புகழ்பெற்ற நட்சத்திரமானான்.
அப்பாவின் மரணம், அம்மாவின் நோய், படிப்பு பாதியில், சரியான வேலையின்றி தவித்தான், பார்த்திபன். எத்தனை அவமானங்கள், நிராகரிப்புகள். அப்போதுதான், 'பார்த்தசாரதி கலைக்குழு' என்ற ஒன்றை ஆரம்பித்தான்.
கடந்த, 1980களில், சென்னையில் நாடகங்கள் கோலோச்சிய நேரம்.
நண்பர்களுடன் சேர்ந்து தரமான நாடகங்களை தயாரித்தான். உள்ளூரிலேயே சபாக்கள் பிடித்து, நாடகங்களை அரங்கேற்றினான். 'மெம்பர்ஷிப்' சேர்த்து, ஆண்டுக்கு மூன்று நாடகங்கள் என்று திட்டமிட்டான்.
கிட்டத்தட்ட, 100 பேருக்கு மேல் சேர்ந்தனர். அதன் பின், ஒவ்வொரு சபா செக்ரடரியிடமும் பேசி, நாடகங்களுக்கு ஏற்பாடு செய்தான். இவன் நாடகங்கள் தரமாக, செலவு குறைவாகவும் இருந்ததால், 'புக்' ஆகின.
வெளியூர், உள்ளூர் மட்டுமின்றி, கேரள மாநிலத்திலும் நிறைய நாடகங்கள் போட்டான். ஆனால், திரைப்பட வாய்ப்புதான் கிடைக்கவே இல்லை.
இந்நிலையில் தான், இவன் நாடகம் பார்க்க வந்தாள், ரேவதி. நாடகம் நடக்கும் நாளில், முன்வரிசையில் அமர்ந்து, பிறகு, இவன் மனைவியாக பக்கத்திலும் அமர்ந்தாள்.
ஆரம்பத்தில் வாழ்க்கை நன்றாகத்தான் இருந்தது. திருமணம் ஆகி, ஆறு ஆண்டுகளில் எதுவுமே வரும்படி இல்லாததால், பார்த்திபனை வெறுக்க ஆரம்பித்தாள்.
நாடகம் தான், இவன் உயிர் மூச்சு. சபையோரின் கைத் தட்டல்கள் ஊக்க மருந்து, பொழுது போக்கு. வீட்டில் மனைவியின் ஏளனம், ஏமாற்றத்திற்கு எல்லாம் நாடகம் ஒரு வடிகாலாக இருந்தது.
திடீரென்று பார்த்திபனின் கனவுகள் கலைந்தன. மாலை, 4:00 மணி.
ஆறு மணி நாடகத்திற்கு இப்போதே போனால்தான் அரங்கை வடிவமைத்து, நடிகர்களோடு ஒத்திகை பார்த்து, 'மேக் - அப்' போட்டு தயாராக முடியும். நடிகர் வருண்குமார் வருவதால், நிறைய கூட்டம் வரும். இவன் நாடகத்துக்கு கூட்டம் வருகிறதோ இல்லையோ, நடிகனை பார்க்க கூட்டம் வரும் என எண்ணியபடியே கிளம்பினான்.
அப்போது, பளீரென்ற அலங்காரத்துடன் ஓடி வந்தாள், ரேவதி.
''என்ன ஆச்சு?''
''உங்ககூட இன்னைக்கு நாடகத்திற்கு வரேன்,'' என்றாள்.
நாடக அரங்கம் -
இதற்கு முன், இந்த அரங்கத்தில் பலமுறை நாடகம் போட்டிருக்கிறான். இப்போது, வருண்குமார் வருகிறார் என்பதால் ஏகக் கூட்டம்.
நேரமாகிக் கொண்டிருந்தது. 'நடிகர் ஷூட்டிங்கில் இருக்கிறார்; வருவதற்கு தாமதமாகுமாம். எனவே, நாடகத்தை ஆரம்பிக்க சொல்லி விட்டார்...' என்று, யாரோ ஒரு பையனிடம் சொல்லி அனுப்பியிருந்தார், செகரட்டரி.
நட்பு பற்றிய நாடகம். 'மேக் - அப்'புடன் இருந்தான், பார்த்திபன். இந்த நாடகத்தில் ஓரங்க நாடகம் ஒன்று இடைச் செருகலாகி இருந்தது. அதில், கிருஷ்ணனை காண வருவான், குசேலன். குசேலனை கட்டி அணைப்பான், கிருஷ்ணன். நாடகத்தின் இறுதியில் ஒரு, 'ட்விஸ்ட்' வைத்திருந்தான், பார்த்திபன்.
நாடகம் ஆரம்பமாகி பாதி முடிந்தது. இன்னும் சிறப்பு விருந்தினர் வரவில்லை. திடீரென பேண்ட் வாத்திய முழக்கம்.
'ஓ... வருண்குமார் வந்து விட்டான்...' என நினைத்தபடி, குசேலன் வேடத்தில் மேடையிலே நின்றிருந்தான், பார்த்திபன். கிருஷ்ணராக அருள்தர வேண்டிய நடிகன் காத்திருந்தான்.
நடிகர் வருண்குமார் வர, ஜனங்கள் கை தட்டி ஆரவாரம் செய்து, விசில் அடித்தனர்.
கைகூப்பியபடி வந்து கொண்டிருந்தான், வருண்குமார். இந்த ஐந்தாறு ஆண்டுகளில் அவன் முகத்தில் செழுமையும், வனப்பும் கூடியிருந்தது. குசேலனாக நின்றிருந்த பார்த்திபனை வருண்குமாருக்கு அடையாளம் தெரிய வாய்ப்பில்லை.
ஒரு காட்சி கூட நடந்திருக்காது. பாதி நாடகத்தில் நடுவில் திடீரென்று மேடை பரபரப்பானது. சிறப்பு நிகழ்ச்சியாம். வருண்குமாருக்கு மரியாதை செய்ய, திரை போடப்பட்டது.
''குசேலனை வரச் சொல்லுங்கப்பா,'' கூப்பிட்டார், செகரட்டரி.
தலைகுனிந்தபடியே மேடைக்கு வருண்குமார் எதிரில் வந்தான், பார்த்திபன்.
அவனை உற்றுப் பார்த்த வருண்குமார், ''நீ பார்த்திபன் தானே?'' என, ஆரத்தழுவி தன் கழுத்தில் போட்டிருந்த ஆளுயர மாலையை பார்த்திபனுக்கு போட்டான்.
'மைக்'கில், ''பார்த்திபன் யார் தெரியுமா, என் நண்பன். வருண்குமார்ன்னு எனக்கு பெயர் வைத்ததே இவன் தான். இவனை நான் இங்கே சந்திப்பேன் என்று நினைக்கவில்லை. கவலைப்படாதே நண்பா, உன்னை, நானே திரையில் அறிமுகப்படுத்துகிறேன். யானைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கு ஒரு காலம் வரும்... வர வைப்பேன்,'' என்றான்.
ஏற்புரைக்கு பார்த்திபனிடம், 'மைக்' தந்தனர்.
மாலையைக் கழற்றி வைத்து, ''நன்றி நண்பா... பல ஆண்டுகளுக்கு பின், உன்னை சந்திப்பதில் மகிழ்ச்சி. அது, யானையும், பூனையும் மிருகங்களை குறிப்பிடவில்லை. ஆ நெய் என்றால், பசுவின் நெய். பூ நெய் என்றால், மலர். மலர்களில் இருக்கக் கூடிய நெய். அதாவது, தேன்.
''இளமையிலேயே பசு நெய் உடம்புக்கு ஒத்துக்கொள்ளும். வயதான பிறகு மருந்து மாத்திரை விழுங்க, தேன் தான் தேவைப்படும். நான் இரண்டாவது கட்டத்தில் இருக்கிறேன். என் கசப்புகளை தேனில் குழைத்து சாப்பிட பழகி விட்டேன்.
''இனிமேல் அப்பா, மாமா வேஷமெல்லாம் எனக்கு சரிப்படாது... நாடக மேடையில் ராஜாவா வாழ்ந்தே என் காலம் முடிஞ்சுரும். 'கூழாங்கற்கள் எல்லாத்தையும் கூர்மையாக்க நினைக்கக் கூடாது. அது மழுங்கி இருக்கிறது தான் அதோட அழகு'ன்னு சொல்வாங்க...
''ஆண்டவன் படைப்பு, பிறப்பு; அவனுடைய அழைப்பு, இறப்பு; இடையில் நாம் நடிப்பது தான், நடிப்பு.''
பார்த்திபன் பேசப் பேச, அனைவரும் கை தட்டினர். நண்பனுக்கு விடை கொடுத்தான்.
வருண்குமார் காரில் ஏறி போனபின், பவ்யமாக பார்த்திபன் அருகில் வந்து நின்றார், சபா செகரட்டரி.
''உங்க எல்லாருக்கும் பைவ் ஸ்டார் ஹோட்டலில் டின்னர் ஏற்பாடு பண்ணியிருக்கேன். எல்லாரும் அங்க வந்துடுங்க... உங்களை கூட்டி போக வேன் காத்துட்டு இருக்கு,'' என்றார்.
கை கூப்பி, ''ரொம்ப நன்றி. வழக்கம்போல எங்களுக்கு மேடையிலேயே பொட்டல பார்சல் அனுப்பிடுங்க. அவங்கவங்க வந்தபடியே சைக்கிளிலோ, பஸ்சிலோ போய்ப்பாங்க. நீங்க சிரமப்பட வேண்டாம்,'' என்றான்.
நாடகம் முடிந்தது. தன் வழியே நடந்தான், பார்த்திபன்.
மலைய மாருதம்