தெய்வ நம்பிக்கை ஒருபோதும் வீணாகாது. 72 ஆண்டுகளுக்கு முன், நடந்த நிகழ்ச்சி இது:
புகைவண்டி நிலையத்தில் உதவி அதிகாரியாகப் பணியாற்றி வந்தார், லட்சுமண் என்பவர். தினமும் வழிபாடு செய்பவர். அவருக்கு உதவியாளராக இருந்த துர்கா பிரசாத், லட்சுமணின் பக்தியை கிண்டல் செய்வார்.
மாலை நேரம். புகைவண்டி நிலையத்திற்குள் ரயில் ஒன்று வந்தது. அதைக் கவனிக்கும் பணியில் இருந்தார், லட்சுமண். அப்போது அங்கு வந்தார், துர்கா பிரசாத்.
'கொடுக்கிற தெய்வம் கூரையைப் பிய்த்து கூட கொடுக்கும்...' என்றார், லட்சுமண்.
உடனே, 'கூரையைப் பொத்துக் கொண்டு கொட்டும் உங்கள் கடவுள், இப்போது நீங்கள் கேட்காமலே உங்களுக்கு, 50 ரூபாய் தரட்டும். பார்க்கலாம்... நான் உங்கள் கடவுளை நம்புகிறேன்...' என்று சிரித்தபடி கூறினார், துர்கா பிரசாத்.
அவர் பேசி முடிப்பதற்குள், வண்டியிலிருந்து இறங்கிய சேட் ஒருவர், லட்சுமணை நெருங்கி, 'என்ன லட்சுமண்... நீங்கள் இங்கேயா வேலை பார்க்கிறீர்கள்... இதற்கு முன், எங்கள் ஊர் புகைவண்டி நிலையத்தில் வேலை பார்த்தீர்களே...
10 ஆண்டுகளுக்கு முன் பார்த்தது...' என்றார்.
'ஆமாம்...' என்றார், லட்சுமண்.
'அப்போது, நமக்கிடையில் உண்டான ஒரு கணக்கு, இன்னும் தீர்க்கப்படாமல் இருக்கிறதே, நினைவிருக்கிறதா...' என கேட்டார், சேட்டு.
லட்சுமணுக்குத் திகைப்பாய் இருந்தது.
'இந்த சேட்டிடம் ஏதாவது பணம் வாங்கி, திருப்பிக் கொடுக்காமல் வந்து விட்டோமோ...' என்ற கவலையுடன், 'சேட்ஜி... நான் ஏதாவது கொடுக்க வேண்டியிருக்கிறதா உங்களுக்கு?' எனத் தயங்கியபடி கேட்டார்.
'ஐயா... நீங்கள் ஒன்றும் எனக்குத் தர வேண்டியதில்லை. நானல்லவா உங்களுக்குக் கொடுக்க வேண்டும். நீங்கள் என் மகனுக்கு இரண்டு மாதங்கள் பாடம் (ட்யூஷன்) சொல்லிக் கொடுத்தீர்களல்லவா...
'அதற்கு சம்பளம் வாங்காமலே போய் விட்டீர்கள். அதற்கான, 50 ரூபாய் இந்தாருங்கள்...' என்று, 10 ரூபாய் தாள் ஐந்தை லட்சுமணிடம் கொடுத்தார்.
'பத்து ஆண்டுகளுக்கு முன் பாடம் சொல்லிக் கொடுத்தது, எனக்கே மறந்து விட்டது. அதை நினைவில் வைத்து, இன்று பணம் தருகிறாரே...' என வியந்தார், லட்சுமண்.
'நான் சவால் விட்டு இரண்டு நிமிடங்களுக்குள் 50 ரூபாயை லட்சுமணுக்கு அனுப்பி விட்டாரே கடவுள்...' என்று வியந்தார், துர்கா பிரசாத்.
தெய்வ நம்பிக்கை ஒருபோதும் வீண் போகாது என்பதை விளக்கும், நிகழ்வு இது!
பி. என். பரசுராமன்
ஆன்மிக தகவல்கள்!
நேம நிஷ்டை என்பதன் பொருள்: அதிகாலை நீராடி வழிபடுவது, சைவ உணவு உண்பது, கடமையை செய்வது ஆகியவை நியமம். நிஷ்டை என்பது, தியானம் செய்தல்.