அம்பிகா - அர்ச்சனா - ஆராதனா! (5) | வாரமலர் | Varamalar | tamil weekly supplements
அம்பிகா - அர்ச்சனா - ஆராதனா! (5)
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

24 அக்
2021
00:00

முன்கதை சுருக்கம்: விக்ரமிற்கு அம்பிகா போன் செய்ய, தன் பெயர் அர்ஜுன் என, அறிமுகப்படுத்தி கொண்டான். காதலில் விழுந்த அம்பிகா ஒருநாள், 'செல்பி' எடுக்க முயல, அவளை தடுத்தவன், அதற்கொரு கற்பனை கதையைக் கூறினான்-

கையில் சில ஷாப்பிங் பைகளுடன், 'விக்ரோலி சென்ட்ரல் மாலில்' இருந்து வெளியே வந்து கொண்டிருந்தனர், விக்ரமும், அம்பிகாவும்.
''என்ன அர்ஜுன்... திடீர்னு ஊருக்கு போறேன்னு சொல்ற?'' டென்ஷனாக கேட்டாள், அம்பிகா.

''நான் என்ன பண்றது... என் வேலை அப்படி... எல்லாம் எங்க பாஸ் மற்றும் ஹெட் ஆபிஸ்ல முடிவு செய்யறது.''
''மறுபடி எப்போ வருவ?''
''ஏதாவது ரெண்டு நாள், 'லீவு' கிடைச்சா வரேன்... இல்லன்னா போன்ல பேசுவோம்.''
மவுனமாக அழ தயாரானாள். அவள் முகத்தை நிமிர்த்தினான், விக்ரம்.
''இங்க பாரு... கொஞ்ச நாள் அப்படி இப்படி ஊர் ஊரா சுத்தினேன்னா, பிரமோஷன் கிடைச்சு மேனேஜர் ஆயிடுவேன். அப்புறம், கல்யாணம் பண்ணிக்கிட்டு நமக்கு பிடிச்ச மாதிரி எதாவது ஒரு ஊர்ல, 'செட்டில்' ஆகிடலாம்.''
கொஞ்சம் குளிர்ந்தாள்.
''ஆனா, தினமும் போன் பண்ணணும்.''
''வேற என்ன வேலை எனக்கு?''
அவனை கட்டிக்கொண்டு, ''லவ் யூ, லவ் யூ,'' என்றாள்.
அவளின் அந்த அழுத்தத்தில், தன் மீது அவளுக்கு எவ்வளவு ஆழமான காதல் இருக்கிறது என தெரிந்து, உள்ளுக்குள் சிரித்தான்.
மேலும் நடந்தனர். அவளை கால் டாக்ஸியில் ஏற்றி விட்டான்.
நாளை இந்நேரம் இருக்க வேண்டிய இடம், கோல்கட்டா. 'புக்' செய்து வைத்திருந்த டிக்கெட்டை பாக்கெட்டில் இருந்து எடுத்து பார்த்து, சிரித்துக் கொண்டான்.

கோல்கட்டா...
திருநெல்வேலி அல்வா, மணப்பாறை முறுக்கு, பண்ருட்டி பலா என்கிற மாதிரி, கோல்கட்டாவுக்கு ரசகுல்லா.
கோல்கட்டாவிலிருந்து வருபவர்களும், அங்கு போகிறவர்களும் தவறாமல் போகும் இடம்: கே.சி.தாஸ் ரசகுல்லா கடை.
போ பாராக்ஸ்; மத்திய கோல்கட்டா பகுதி. வியாழக்கிழமை காலை, 11:00 மணி.
ரோஸ் கலர் ஸ்கூட்டியில், கடை வாசலில் வந்து இறங்கினாள், அர்ச்சனா. வயது: 24, அழகாக பின்னிய தலை முடி, நெற்றியில் குங்குமம், அகலமான கண்கள், மஞ்சள் சுடிதார். யாரும் மரியாதையுடன் பார்க்கக்கூடிய தோற்றத்தில் கலாசாரத்தை பின்பற்றுகிற பெண்ணாக தெரிந்தாள்.
எப்போதும் போல் கடையில் கூட்டம். மூன்று டின் ரசகுல்லாவுக்கு, 'பில்' போட வரிசையில் காத்திருந்த போது, அர்ச்சனாவின் உதடுகள், தியாகராஜ கீர்த்தனையை முணுமுணுத்துக் கொண்டிருந்தது.
பார்சலை வாங்கி வெளியே வந்து ஹெல்மெட்டை மாட்டி கிளம்பும் போது, ''டீச்சர்!'' என்று ஒரு பெண்ணின் குரல் கேட்டது.
அங்கே 32 வயது பெண்ணும், அவளுடன், 13 வயது பெண் குழந்தையும், அர்ச்சனாவை நோக்கி வந்தனர்.
''யாரு?''
''நீங்க அர்ச்சனா டீச்சர் தானே?''
''ஆமா!''
''இது காவ்யா, என் பொண்ணு.''
''ஹலோ காவ்யா.''
''ஹாய்!''
''என்ன விஷயம்?'' என்றாள், அர்ச்சனா.
''காவ்யாவுக்கு டான்ஸ்ல ரொம்ப ஆர்வம்.''
''வெரி குட்!''
''உங்க டான்ஸ் அகாடமியில் சேர்ந்து, டான்ஸ் கத்துக்கணும்ன்னு அவளுக்கு ஆசை.''
''உங்களுக்கு யார் சொன்னது?''
''உங்க ஸ்டுடன்ட் சிமியோட அம்மா ஷீலா, என் தோழி தான்.''
''ஓ... அது சரி, என்ன எப்படி அடையாளம் கண்டுபிடிச்சீங்க.''
''ஷீலா, எங்கள இங்க இறக்கிவிட்டுட்டு போனா. அவ தான் உங்களை அடையாளம் காட்டினா. அப்பதான் நீங்க கடைக்குள்ள போனீங்க. அதான் இங்க காத்திருந்தோம்.''
சிரித்துக் கொண்டாள், அர்ச்சனா.
''இப்போ எங்கிட்ட, 20 பேர் கத்துக்கறாங்க. வாரத்துல ஐந்து கிளாஸ்.''
''ஓ.கே., டீச்சர். நான் எல்லா கிளாசுக்கும் தவறாம வரேன்.''
காவ்யா சொன்னதைக் கேட்டு, அவள் கன்னத்தை தட்டி கொடுத்தாள், அர்ச்சனா.
''இதுக்கு முன்னாடி யார் கிட்டயாவது கத்துகிட்டாளா?''
''இல்லை. நீங்க தான் நல்ல குருவா இருந்து சொல்லி தரணும்,'' என்றாள், காவ்யாவின் அம்மா.
''சரி... நீங்க ஞாயிற்றுக்கிழமை போன் பண்ணுங்க.''
''ஓ.கே., டீச்சர்!''
ஹெல்மெட்டை மாட்டிக் கொண்டாள், அர்ச்சனா.
''நீங்க, ரொம்ப அழகா இருக்கீங்க டீச்சர்!'' என்றாள், காவ்யா.
சிரித்தபடி கட்டை விரலை உயர்த்தி காட்டிவிட்டு கிளம்பினாள், அர்ச்சனா.
கரியாவில் இருந்தது அந்த வீடு. போர்டிகோ, திண்ணை, சின்ன தோட்டம். அதில், மா மரம், வேப்ப மரம். அலுமினியம் கலர் கேட் என, பழங்கால வீடு.
வீட்டு சொந்தக்காரர் எத்திராஜ். வயது: 70; ஒண்டிக்கட்டை. தாத்தாவின் சொத்தை பங்கு போட்ட போது, இவருக்கு கிடைத்தது இந்த வீடு.
வீட்டுக்குள் மாடு வராமல் பார்த்துக் கொள்வது. தெருவில் கிரிக்கெட் விளையாடும் பையன்கள், வீட்டு கண்ணாடியை உடைத்தால், தெருமுனை வரை விரட்டி போய் திட்டுவது என, இதே வேலையாக இருப்பார்; கறார் பேர்வழி.
இரண்டு ஆண்டுகளுக்கு முன், எத்திராஜ் வீட்டு மாடியில் நடன வகுப்பு நடத்த, அர்ச்சனா கேட்ட போது, அவரால் தட்ட முடியவில்லை. அர்ச்சனாவின் அணுகுமுறை, அவள் அவருக்கு தந்த மரியாதை எல்லாம் சம்மதிக்க வைத்தது.
போர்டிகோவில் பழைய பேப்பர்களை அடுக்கி, சணல் கயிறால் கட்டிக்கொண்டிருந்தார், எத்திராஜ். மாடியிலிருந்து இறங்கி வந்த அர்ச்சனா, ரசகுல்லா டின்னை எத்திராஜிடம் தந்தாள்.
''எதுக்குமா?''
''உங்க இடத்துல நான் கிளாஸ் ஆரம்பிச்சு, இரண்டு ஆண்டுகள் ஆச்சு. அதுக்காக.''
''ரொம்ப சந்தோஷம்மா,'' என, வாங்கி வைத்துக் கொண்டார்.
''ஓ.கே., வரேன் அங்கிள்!'' என்று கிளம்பியவள் திரும்பி வந்து, ''அங்கிள்... நான் வந்த நாளிலிருந்து முதல் மாடி பூட்டியே இருந்தது. இன்னிக்கு திறந்திருக்கு... பெருக்கி, துடைச்சிருக்கு. என்ன... யாராவது வராங்களா?''
''ஆமா மா... காலியா இருக்குன்னு கேள்விப்பட்டு ஒருத்தர் வந்து கேட்டார். சரின்னு ஒத்துக்கிட்டேன்.''
''கரெக்ட் தான்... பேமிலியா, எத்தனை பேர்?''
''பேமிலிலாம் இல்லை மா... ஒரேயொரு பையன் தான். இன்னும் கல்யாணம் ஆகல. 30 வயசு இருக்கும். டாக்குமென்டரி சினிமா எடுக்கறவனாம்...
''வெவ்வேற ஊர்கள்ல போய் எடுப்பானாம்... மூணு மாசம் வேலை முடியற வரைக்கும் இருப்பானாம்... அட்வான்சம் கொடுத்துட்டான்; மரியாதை தெரிஞ்சவன்; திங்கட்கிழமை வந்திடுவான்.''
''நல்ல விஷயம் அங்கிள்... ஏதோ வாடகை வரட்டுமே...''
''அதானே.''
''சரி அங்கிள்... நான் கிளம்பறேன்.''
ஸ்கூட்டியில் ஏறி தெரு முனைக்கு போகும் வரை, எதிரில் இருந்த டீக்கடையில் இருந்து அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்; முதல் மாடிக்கு குடி வரப்போகும், விக்ரம்.

திங்கட்கிழமை...
செடிகளுக்கு தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்தார், எத்திராஜ்.
''குட் மார்னிங் அங்கிள்!'' மெயின் கேட்டை திறந்து, உள்ளே வந்தான், விக்ரம்.
நிமிர்ந்து பார்த்த எத்திராஜ், ''ஏம்பா... லாரியில் சாமானெல்லாம் எடுத்துகிட்டு வருவேன்னு பார்த்தா, ப்ளைட்ல போற மாதிரி ஒரேயொரு பெரிய சூட்கேஸ், ஒரு பைன்னு சிம்பிளா வந்திருக்க?'' என்றார்.
''மூணு மாசத்துக்கு தானே அங்கிள்... அதான் கம்மி லக்கேஜ்!''
''கதவு, குழாய் எல்லாம், 'ரிப்பேர்' பண்ணி, வீட்டுக்கும் சுண்ணாம்பு அடிச்சாச்சு. வேற எதாவது வேணும்னாலும் கேளுப்பா.''
''ஷுயூர் அங்கிள்... வரேன்,'' என்று போனவன் திரும்பி, ''ஏன் அங்கிள்... ரெண்டாவது மாடியிலயும் யாராவது குடித்தனம் இருக்காங்களா?'' என்றான், தெரியாத மாதிரி.
''ஆமாப்பா... அங்க டான்ஸ் கிளாஸ் நடக்கும்.''
''ஓ... சரி அங்கிள் வரேன்.''
'ரொம்ப பக்கத்துல வந்திட்டேன் அர்ச்சனா...' என, மனதில் சொல்லிக் கொண்டே, படி ஏறினான்.
வெள்ளை அடித்த வாசனை இன்னும் போகாமல் இருந்தது. குளித்து வந்த விக்ரம், கோல்கட்டாவில் இருக்கும் தகவலை ராஜேஷுக்கு குறுஞ்செய்தியில் தெரிவித்தான். 'ஆல் தி பெஸ்ட்' என, பதில் அனுப்பினான், ராஜேஷ்.
அந்த மொபைலை தனியாக வைத்துவிட்டு, மும்பை மொபைலில் அம்பிகாவுக்கு போன் செய்தான்.
இரண்டாவது, 'ரிங்'கிலேயே எடுத்தாள்.
''என்னை ஞாபகம் இருக்கா?'' கொஞ்சம் கோபமாக கேட்டாள், அம்பிகா.
''ஏய்... என்ன உளர்றே? நான் தான் கண்டிப்பா கூப்பிடுவேன்னு சொன்னேன்ல.''
''எங்க இருக்க?''
''டில்லி!'' கூச்சம் இல்லாமல் பொய் சொன்னான்.
''வார விடுமுறையிலாவது இங்கே வரலாம்ல... இல்லை, நான் அங்கே வரட்டுமா... என்ன சொல்ற?''
''அம்பிகா... நான் என்னிக்கு எங்க இருப்பேன்னே தெரியாதே... 'வெயிட்' பண்ணு.''
''எனக்கு உன் ஞாபகமாவே இருக்கு. துாக்கம் வரல. எதுலயும், 'இன்ட்ரஸ்ட்' இல்லை,'' அவள் குரல் தழுதழுத்தது.
'இதான் எனக்கு வேணும்...' என, மனதில் நினைத்தபடி, ''கவலைப்படாத அம்பிகா... கூடிய சீக்கிரம் வரேன்,'' என்றவன், மும்பை மொபைலை தனியாக வைத்தான். வாங்கி வந்த வாழைப்பழத்தை சாப்பிட்டு, அசதியில் படுத்து துாங்கி விட்டான்.

தொடரும்.
கோபு பாபு

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

 We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X