டில்லி கேரட் அல்வா!
தேவையான பொருட்கள்: டில்லி கேரட் - இரண்டு, பால் - 250 மி.லி, முந்திரி, பாதாம் பொடித்தது - தலா, 2 தேக்கரண்டி, ஏலக்காய் துாள் சிறிதளவு, சர்க்கரை - 200 கிராம், நெய் - 4 தேக்கரண்டி.
செய்முறை: கேரட்டை தோல் சீவி மிக்சியில் நைசாக அரைத்து, வாணலியில் போட்டு நெய் விட்டு வதக்கி, கேரட் சிறிது வெந்ததும், பால் சேர்த்து கொதிக்க விடவும். கெட்டியானதும், பொடித்த முந்திரி, பாதாம் பொடியை சேர்த்து, சர்க்கரையையும் மிக்சியில் பொடித்து போட்டு, ஏலக்காய் சேர்த்து, நெய் விட்டு நன்றாக கிளறி இறக்கவும்.
குறிப்பு: கேரட், முந்திரி, பால், பாதாம் கலவையுடன் அருமையான அல்வாவை செய்வதும் சுலபம்.
ஈஸி மதுரா பேடா!
தேவையான பொருட்கள்: இனிப்பில்லாத கோவா - ஒரு கப், பொடித்த சர்க்கரை - அரை கப், ஏலக்காய் துாள் - ஒரு சிட்டிகை, நெய் - 3 தேக்கரண்டி.
இனிப்பில்லாத கோவா செய்ய: பால் பவுடர் - ஒரு கப், தேவையான அளவு தண்ணீர்.
அலங்கரிக்க: நீளவாக்கில் நறுக்கிய பாதாம், பிஸ்தா - தலா ஒரு தேக்கரண்டி.
செய்முறை: பால் பவுடருடன் தண்ணீர் சேர்த்து நன்கு பிசையவும். இதை பாத்திரத்தில் போட்டு மூடவும்; குக்கரில் இந்த பாத்திரத்தை வைத்து நான்கு விசில் விட்டு இறக்கவும். இதுவே இனிப்பில்லாத கோவா.
அடி கனமான வாணலியில் நெய் விட்டு உருக்கி, கோவாவை சேர்த்து கைவிடாமல் கிளறவும். கலவை பிரவுன் நிறமாகியதும், இறக்கி ஆற விடவும். கை பொறுக்கும் சூட்டில், சர்க்கரை, ஏலக்காய் துாள் சேர்த்து கலக்கி, மாவை சிறிய உருண்டைகளாக்கி, பேடா வடிவத்துக்கு தட்டவும். நடுவே கட்டை விரலால் சிறிய பள்ளம் செய்து, பாதாம், பிஸ்தா துாவி அழுத்தி பரிமாறவும்.
பட்சண டிப்ஸ்!
* தேங்காய் பர்பி சில சமயங்களில், பதம் தவறி முறுகி விடும். அப்போது, அதை பாலில் ஊற வைத்து மறுபடியும் கிளறி, நெய்யில் வறுத்த கடலை மாவை துாவி இறக்கலாம். இதனால், பர்பியானது கெட்டியாகவும், சரியான பதத்திலும் இருக்கும்
* காராபூந்தி செய்யும்போது மிளகாய் பொடிக்கு பதிலாக, மிளகு துாள் சேர்க்கலாம். சுவையும் வித்தியாசமாக இருக்கும்
* பலகாரங்களில் வெண்ணெய் சேர்க்கும்போது நன்றாக கலந்த பிறகே தண்ணீர் ஊற்றி பிசைய வேண்டும். இப்படி செய்வதால் மாவில் எல்லா பக்கமும் வெண்ணெய் சீராக பரவி, மொறு மொறுப்பு கூடும்
* வீட்டில் செய்யும் அனைத்து இனிப்புகளின் மீதும், குங்கும பூவை சிறிது துாவி அலங்கரிக்கலாம். பார்ப்பதற்கு அழகாகவும், 'ரிச்'சாகவும் இருக்கும்.