அன்புள்ள அம்மா -
என் வயது 28; தனியார் கல்லுாரியில் மகப்பேறு மருத்துவம் படித்து முடித்தவள். முதுநிலை படிக்கும் போதே மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்தனர்.
முதுநிலை புற்றுநோய் மருத்துவம் படித்துவிட்டு கிளினிக் நடத்திக் கொண்டிருக்கும் வரனை காண்பித்த தரகர், 'திருமணத்திற்கு பின் மணமகள் தொடர்ந்து, 'பிராக்டிஸ்' பண்ண வேண்டும் எந்த காரணத்தை முன்னிட்டும் கிளினிக் போவதை நிறுத்தக் கூடாது...' என, மாப்பிள்ளை நிபந்தனை போடுவதாக கூறினார்.
மாப்பிள்ளை குடும்பம் ஏழ்மையானது. அப்பா இல்லாததால், வீட்டு வேலை செய்து அம்மாதான் படிக்க வைத்திருந்தாள். மாப்பிள்ளைக்கு இரண்டு தங்கைகள். மாப்பிள்ளையின் நிபந்தனைக்கு, ஓ.கே., சொல்லி, திருமணத்தை ஆடம்பரமாக நடத்தி முடித்தனர், பெற்றோர்.
ஏற்கனவே ஒரு மகப்பேறு மருத்துவமனை நடத்தி, முதுமை காரணமாக விற்றுவிட முன் வந்தார், ஒரு மருத்துவர். அதை விலைக்கு வாங்க சொன்னார், கணவர். என் பெற்றோர் வாங்கினர். அதை புதுப்பித்து என் வருகைக்காக காத்திருந்தார், கணவர்.
என் பெற்றோருக்கு தெரியாமல், எனக்கு, 'காப்பர் டி' எனும் கருத்தடை சாதனத்தை பொருத்தி விட்டார், கணவர்.
'மூன்று ஆண்டுகளுக்கு கர்ப்பம் தரிக்காது கிளினிக்கை கவனி...' என்றார். எங்கள் குடும்பத்து பெண்கள் பலருக்கு, குழந்தை பாக்கியம் இல்லாமல் கருத்தரிப்பு மையத்தை நாடியிருந்ததால், எனக்கும் குழந்தை பாக்கியம் தாமதமாகி விடக்கூடாது என்கிற பயம் இருந்தது.
புதிதாக கணவர் ஆரம்பித்து கொடுத்த கிளினிக்கு, 15 நாள் போனேன். பின், கணவருக்கு தெரியாமல், 'காப்பர் டி'யை அகற்றி, உடனடியாக கர்ப்பமுற்றேன்.
நான் கர்ப்பமுற்ற தகவலை தெரிவித்தவுடன் மகிழ்ச்சியடையாமல், 'தாம்துாம்' என்று குதித்தார். 'அபார்ஷன் செய்' என, அடம் பிடித்தார்; மறுத்தேன்.
'கர்ப்பமுற்றால் என்ன, பிரசவம் வரை கிளினிக்கை கவனி. குழந்தை பிறந்த ஒரு மாதம் கழித்து கிளினிக்கை கவனிக்க மீண்டும் ஆரம்பி...' என்றார். முதலில் சம்மதிப்பது மாதிரி நடித்தேன். பின், வீட்டிலேயே படுத்து ஓய்வெடுக்க ஆரம்பித்தேன். பணத்தாசை பிடித்த கணவர் பேயாட்டம் ஆடினார்.
கோடி ரூபாய் செலவழித்து வாங்கிய அடிமை, கணவர். மேலும் என்னை வைத்து பணம் சம்பாதிக்க ஆசைப்படுகிறார். ஒரு கர்ப்பிணியின் அவஸ்வதையை கணவருக்கு யார் புரிய வைப்பது...
ஒரு மகப்பேறு மருத்துவராய் பணிபுரிவது லேசுபட்ட காரியமா... வெறும் மருந்து மாத்திரை எழுதி கொடுத்து ஒப்பேத்த முடியுமா... ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் ஐந்து சுகப்பிரசவம், சிசேரியன்களை பார்க்க வேண்டும்.
குழந்தை பிறந்து மூன்று வயதாகும் வரை, நான் கிளினிக் போக மாட்டேன். என் உடல் நலமும், குழந்தை நலமுமே எனக்கு பிரதானம்.
என்னை விவாகரத்து செய்து விடுவதாக மிரட்டுகிறார், கணவர்.
'டெலிவரிக்கு ஒரு மாதம் முன்வரை கிளினிக் நடத்து; அதன்பின் ஒரு மாதம் கழித்து மீண்டும் கிளினிக்குக்கு போ. சம்பளத்துக்கு ஆள் போட்டு, குழந்தையை பார்த்து கொள்ளலாம்...' என்கிறார், என் அம்மா.
அம்மாவின் யோசனையிலும் எனக்கு உடன்பாடில்லை. நீங்கள் தான் எனக்கு தகுந்த ஆலோசனை வழங்க வேண்டும் அம்மா.
- இப்படிக்கு,
அன்பு மகள்.
அன்பு மகளுக்கு -
உனக்கு நகை நட்டு போட்டு சீர் செனத்தி செய்து, ஆடம்பரமாய் திருமணம் செய்து வைத்தலில், ஒரு கோடி ரூபாய் வரை செலவு செய்திருப்பர், உன் பெற்றோர். வரதட்சணை கொடுப்பதும் குற்றம், வாங்குவதும் குற்றம்.
வரதட்சணை கொடுத்து கெடுத்து விட்டீர்கள். வாங்கிய பணம் செரித்த பின், எந்த ஆண் அடிமையாக இருப்பான்... பரம ஏழையாக இருந்து பணம் சம்பாதிக்க ஆரம்பித்தவர்களின் பணத்தாசைக்கு முடிவே இல்லை.
நவீன மைதாஸ் அவர்கள். அவர்களுக்கு தொட்டதும் ஏன், தொடாததும் கூட தங்கமாய் மாற வேண்டும்.
கணவரின் பணத்தாசை வன்மையாக கண்டிக்கதக்கது. அதேநேரம் உன் நடத்தையும் கண்டிக்கத்தக்கதே.
12 + 5 + 3 ஆண்டுகள் படித்து, பல லட்சங்களை செலவழித்து மகப்பேறு மருத்துவர் ஆகியிருக்கிறாய்.
உனக்கு பிறக்கபோகும் குழந்தைக்காக மூன்றே முக்கால் ஆண்டு, கர்ப்பிணி பெண்களுக்கு சேவை செய்ய மாட்டேன் என, அடம் பிடிக்கிறாய். இனி, நீ செய்ய வேண்டியவைகளை பார்ப்போம்.
* நீ ஒரு மகப்பேறு மருத்துவர். உனக்கு சொல்லியா தரவேண்டும்... மாதா மாதம் மகப்பேறு மருத்துவரிடம், 'செக் - அப்'புக்கு போ. போட வேண்டிய தடுப்பூசிகளை போடு.
சத்தான உணவுகளை சாப்பிடு. தினமும் கிளினிக் போய் பிரசவங்களை பார். ஏழை பெண்களுக்கு பிரசவம் இலவசம் என அறிவி
* சம்பாதிக்கும் பணத்தை எல்லாம் கணவரிடம் கொடுக்காதே. உன் வங்கிக்கணக்கில் போடு
* கிளினிக் போன நேரம் தவிர, மீதி நேரம் எல்லாம் குழந்தையுடன் செலவழி. குழந்தையை கவனித்துக் கொள்ள ஒரு தாதியை பணியமர்த்து. சி.சி.டி.வி., பொருத்தி, தாதியின் செயல்பாட்டை கிளினிக்கில் இருந்தே கண்காணி
* பணவெறி பிடித்த கணவருக்கு தகுந்த அறிவுரைகள் கூறு. மருத்துவ பணிக்கு இடையே சிறுசிறு சந்தோஷங்களை அனுபவிக்க கற்றுக்கொடு. குழந்தையுடன் அவரும் தினம் சில மணிநேரம் செலவழிக்க கட்டாயப்படுத்து
* இரண்டாவது குழந்தை பிறப்பதை மூன்று ஆண்டுகள் தள்ளிப்போடு
* நீ ஒரு பணங்காய்ச்சி மரம். உன்னை ஒரு நாளும் விவாகரத்து பண்ண மாட்டார், கணவர். அவரது நிபந்தனைகளும், மிரட்டல்களும் பலவீனமானவை.
ஒரு கோட்டை கிழித்து நீ தாண்டி விட்டால், அரை கி.மீ., துாரத்தில் இன்னொரு புதிய கோட்டை போடுவார், கணவர்.
குழந்தை வளர்ப்பில் உதவ அம்மாவும், மாமியாரும் முன் வந்தால், தயங்காமல் ஏற்றுக் கொள்.
-- என்றென்றும் தாய்மையுடன்,
சகுந்தலா கோபிநாத்.