கார்த்திகை முதல், தை வரை, சபரிமலை அய்யப்பனுக்குரிய தாரக மந்திரமான, 'சுவாமியே சரணம் அய்யப்பா' கோஷம் எங்கும் எதிரொலிக்கும்.
இந்த சரணம் என்ற வார்த்தை எப்படி பிறந்தது, இதன் பொருள் என்ன என்பதை உணர்ந்து சொன்னால், ஒவ்வொரு பக்தனின் உள்ளமும் பக்தி என்னும் நெய்யில் ஊறி, உருகிப் போகும்.
அய்யப்பனின் வளர்ப்பு தந்தை ராஜசேகரன், பந்தள ராஜாவாக இருந்தார். அய்யப்பன், 12 வயது வரை அவரிடம் வளர்ந்து, அந்தர்மியாகும் (விடைபெறும்) சமயம் வந்தது. அழுதார், ராஜா.
அவரைத் தேற்றிய மணிகண்டன், 'தந்தையே, மரணத்துக்கு வயது இல்லை. நான் தெய்வப் பிறவியாயினும், மனிதனாகப் பிறந்து விட்டேன். மனிதராய் பிறந்தவர் மாள்வது நிச்சயம். அதுபற்றி கவலை கொள்ளாதீர்கள். அதேநேரம், நான் உங்கள் ஆட்சிக்குட்பட்ட சபரிமலையில் குடியிருக்க விரும்புகிறேன்.
'எனக்கு ஒரு கோவில் எழுப்புங்கள். இந்தப் பணியில் தங்களுக்கு தடங்கல் ஏற்படலாம். அதைத் தகர்க்க, உங்கள் உடலில் யாரும் அறியாவண்ணம் சுரிகை எனும் இந்த ஆயுதத்தை பொருத்துகிறேன். அது தடையைத் தகர்க்கும்...' என்று சொல்லி மறைந்தார்.
ராஜசேகர மன்னனும் பணியைத் துவங்கினார். தேவலோக அரசன் இந்திரன் இதைக் கேள்விப்பட்டு, பூலோகத்தில் இப்படி ஒரு கோவில் எழுமானால், தேவலோகத்தை அனைவரும் மறந்து விடுவர். அதன் சிறப்பு குறைந்து விடும் என கருதி, பூலோகம் வந்து பணியை நிறுத்தும்படி சொன்னான்.
பணிவுடன் அதை மறுத்து விட்டார், ராஜசேகரன். கோபமடைந்த இந்திரன், வஜ்ராயுதத்தை மன்னர் மீது ஏவ, அவர் கைகளை தலைக்கு மேலே துாக்கி, 'சுவாமியே சரணம் அய்யப்பா' என்று, அந்த அய்யப்பனிடமே சரண் அடைந்தார். சரணம் என்றால், 'உம்மையே சரணடைகிறேன்' என்று பொருள்.
மன்னர் கையை உயர்த்தும் போது, அவரது சுண்டு விரல், சுரிகை மீது பட, அது நெருப்பை உமிழ்ந்தபடி, வஜ்ராயுதத்தை நோக்கி பாய்ந்து அழித்தது. தொடர்ந்து சுரிகை இந்திரனை விரட்ட, அவன் மும்மூர்த்திகளை சரணடைந்தான்.
தங்களால் ஏதும் செய்ய இயலாதென, அவர்கள் கைவிரித்ததும், அய்யப்பனிடம் சரணடைந்து, 'சுவாமியே சரணம் அய்யப்பா' எனக் கூவினான், இந்திரன்.
'அந்த ஆயுதம் இப்போது என் கட்டுப்பாட்டில் இல்லை. அதை நான் பந்தள மன்னருக்கு தானம் செய்து விட்டேன். அவரையே அணுகுங்கள்...' என, சொல்லி விட்டார், அய்யப்பன்.
இந்திரனும், பந்தள மன்னரை சரணடைய, ஆயுதத்தை திரும்பப் பெற்றார், ராஜா. பின்னர் தேவலோக சிற்பி மயனை வரவழைத்த இந்திரன், அய்யப்பனுக்கு கோவில் கட்டும் பணியில் உதவும்படி உத்தரவிட்டான்.
நமக்கு துன்பம் வரும் போது, சுவாமி அய்யப்பனிடம் சரணடைந்து விட வேண்டும். அந்த சரண கோஷம், நாட்டையும், நம்மையும் காக்கும் என்பதில் ஐயமில்லை.
தி. செல்லப்பா