தெரிந்து கொள்வோமே!
கார் போன்ற நான்கு சக்கர வாகனங்கள் வைத்து இருப்பவர்கள், காரின் காப்பீட்டு பாலிசியை கவனமாக படித்து பாருங்கள். அதில், விபத்து இல்லாமல், நஷ்ட ஈடு எதுவும் வாங்கப்படாமல் இருக்கும் பட்சத்தில், 'நோ கிளைம் போனஸ்' கூடிக்கொண்டே வந்து, 50 சதவீதம் ஆனவுடன் நின்று விடும்.
அவ்வாறு விபத்து ஏதும் ஏற்படாமல், 'கிளைம்' ஏதும் வாங்காமல் இருக்கும் நிலையில், உங்கள் காரை விற்று, வேறு கார் வாங்க முடிவு செய்தால், விற்கப்போகும் காரின் இன்ஷுரன்ஸ் நிறுவனத்தை அணுகி, 'நோ கிளைம் போனஸ் சர்டிபிகேட்' வேண்டும் என்று, எழுத்துப்பூர்வமாக கேளுங்கள்.
அவர்கள் தரும், 'சர்டிபிகேட்'டை, புதிய கார் வாங்கும் போது ஏஜென்சியிடம் கொடுத்து, புதிதாக எடுக்கும் வாகன பிரீமியத்தில், பழைய காரின், 'நோ கிளைம் போனஸ்' தொகையை பெற்றுக்கொள்ள முடியும்.
மேலும், உங்களின் பழைய காரை வாங்குபவர் பெயரில், 'இன்ஷுரன்சை' மாற்றும்போது, உங்கள், 'நோ கிளைம் போனசை' அவர் பயன்படுத்த முடியாது,
எனவே, நீங்களும் பயன்படுத்தா விட்டால், அந்த, 'நோ கிளைம் போனஸ்' யாருக்கும் பயன் இல்லாமல் போய்விடும். 'நோ கிளைம் போனஸ்' என்பது, காருக்கு அல்ல; விபத்தில் சிக்காமல் காரை இயக்கி வந்த உரிமையாளருக்குதான் சொந்தம்.
புதிய வாகனம் எடுக்கும்போது, மறக்காமல், 'நோ கிளைம் போனசை' பயன்படுத்திக் கொள்ளுங்கள். இது போன்ற தகவல்களை எந்த காப்பீட்டு நிறுவனமும் விளம்பரம் செய்வதில்லை; நமக்கு தெரிவிப்பதுமில்லை.
ஜெ. கண்ணன், சென்னை.
சின்ன விஷயம்; பெரிய நன்மை!
தோழி வீட்டுக்கு சென்றிருந்தேன். அவள் மாமனார் வெளியில் கிளம்பினார்.
'மறந்துட்டீங்களே...' என்றபடி, கருப்பு கயிற்றில் விசிலை கட்டி கழுத்தில் போட்டு அனுப்பினாள்.
ஆர்வத்தில், 'விசில் எதுக்கு...' என்றேன்.
'வயசானவங்க வெளியில் போகும்போது, கீழே விழுந்துட்டாலோ அல்லது வேறு பிரச்னை என்றாலோ சட்டுன்னு குரல் கொடுத்து மற்றவர்களை அழைக்க முடியாது. ஆனால், விசிலை வாயில் வச்சு ஊதினா, மத்தவங்க கவனத்தை ஈர்க்கும்; உடனடியாக உதவி கிடைக்கும்.
'அதுக்காக, எப்ப வெளியில் போனாலும், பாதுகாப்புக்கு இதை மாட்டிகிட்டு போகச் சொல்வேன். வெளியில போகாதீங்கன்னும் சொல்ல முடியலை. அவங்களுக்கு ஒரு மாற்றம், வெளிக்காத்து, நண்பர்களோட பேச்சு எல்லாம் தேவைப்படுது...' என்றாள்.
நல்ல பயனுள்ள, 'டிப்ஸ்' என்று மனதில் பட்டது. உடனே, கடையில் ஒரு விசில் வாங்கி, என் செயினில் மாட்டிக் கொண்டேன். சின்ன பொருள்; ஆனால், மிகவும் தேவையானது.
ர. கிருஷ்ணவேணி, சென்னை.
குறுக்கு வழி நாடாதீர்!
அண்மையில், கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டுக்குச் சென்றிருந்தேன்.
அவருடைய நண்பர் ஒருவர், 'எங்கள் உறவினருடைய விவசாய நிலங்களில், அடுத்த ஆண்டு பயிர் செய்ய வேண்டாம். அதை வீட்டு மனைகளாக மாற்றி விற்றால் நிறைய லாபம் கிடைக்கும். ஒவ்வொரு ஆண்டும் கிடைக்கும் மகசூலை விட, 10 மடங்கு பணம் பார்த்து விடலாம்...' என்று, ஆசை காட்டி பேசிக் கொண்டிருந்தார்.
இடையில் குறுக்கிட்ட நான், 'விவசாய நிலங்கள் எல்லாவற்றையும் வீட்டு மனைகளாக மாற்றி விட்டால், உணவு பஞ்சம் ஏற்பட்டு, எதிர்கால சந்ததி பாதிக்கப்படும். மேலும், விவசாய நிலங்களை வீட்டு மனைகளாக மாற்றுவதற்கு தடைச் சட்டம் உள்ளது...' என்று, கூறினேன்.
அதற்கு அவர், அலட்சியமாக, 'விவசாய நிலங்களை, மூன்று ஆண்டுகள் பயிர் செய்யாமல் தரிசாக போட்டு, இது, தரிசு நிலம் என்று, வருவாய் துறையில் சான்றிதழ் வாங்கி விட்டால், அதற்கு அரசு அங்கீகாரம் பெற்று விடலாம்...' என்று, குறுக்கு வழியை கூறினார்.
கிராமத்தில் இருக்கும் நிலங்களெல்லாம் இவ்வாறு வீட்டு மனைகளாக மாறி விட்டால், உணவு பஞ்சம் தலை துாக்கி விடும். கிராம மக்கள், இதுகுறித்து விழிப்புணர்வு அடைய வேண்டும்.
உமா புருஷோத்தமன், ஆதிச்சபுரம், திருவாரூர்.