ஒருநாள், எம்.ஜி.ஆர்., போன் செய்து, ராமச்சந்திரன் பேசுவதாக கூறவும், யார் என கேட்டார், வாணி.
எம்.ஜி.ராமச்சந்திரன் பேசுவதாக கூறியதும், பதறியபடி, 'சார்... தப்பா நினைச்சுக்காதீங்க... ஏதோ தெரியாம பேசிட்டேன்'ன்னு தடுமாறினார்.
அதை புரிந்து கொண்ட எம்.ஜி.ஆர்., 'இல்லம்மா உங்கள பத்தி எனக்கு நல்லா தெரியும். உங்க பேர்ல எனக்கு நிறைய மரியாதை உண்டு. 'விக்ராந்த்' கப்பல் இங்க சென்னை துறைமுகத்துக்கு வரப்போகுது. அப்போ, கலை நிகழ்ச்சி ஒன்றை தமிழக அரசு சார்பா நடத்தப் போறோம்.
'அந்த நிகழ்ச்சிக்கு, வட மாநிலத்திலிருந்து நிறைய பேர் வருவாங்க... அதனால, நீங்க அந்த நிகழ்ச்சியில் வந்து, 'பஜன்ஸ்' பாடினா ரொம்ப நல்லா இருக்கும்...' என்றார்.
'அதுக்கு என்ன சார்... கட்டாயம் வந்து பாடி கொடுக்கிறேன்...' என்று கூறியிருக்கிறார், வாணி.
அந்த நிகழ்ச்சி பிரமாதமாக நடந்ததுடன், அதில் பாடியதற்காக, எம்.ஜி.ஆரிடமிருந்து, நன்றி கடிதமும் வந்தது.
'ஆந்திரா முதல்வராக இருந்த, என்.டி.ஆர்., நடித்த நிறைய படங்களில் பாடினேன். அவர் எடுத்த சொந்த படங்களிலேயும் பாடினேன். மரியாதையான நல்ல மனிதர்...' என்று புகழ்பாடி, ஜெயலலிதா பற்றியும் பகிர்கிறார்:
ஜெயலலிதா அம்மா, முறையான சங்கீத பயிற்சி எடுத்துக்கிட்டவங்க. அவங்க சினிமாவுல மிகப்பெரிய, 'ஹீரோயினா' இருந்தப்போ, அவங்களோட பிரம்மாண்ட நாட்டிய நாடகம் ஒன்றை ஏற்பாடு பண்ணினாங்க. அந்த நாட்டிய நாடகத்தில் எல்லா பாடல்களையும் அவங்களுக்காக பாடினேன்.
அதுக்கப்புறம் பல ஆண்டுகளுக்கு பின், ஜெயலலிதா, தமிழக முதல்வரா இருந்தப்போ, எனக்கு வாழ்நாள் சாதனைக்கான, 'தியாகராஜ பாகவதர்' விருது கொடுத்தாங்க. மேடையில அவங்ககிட்டேருந்து அந்த விருதை வாங்கும்போது, அவங்களுக்கு நன்றி சொன்னேன்.
உடனே அவங்க, 'நீங்க, இதுக்கு முற்றிலும் தகுதியானவங்க. உங்களுக்கு இன்னும் எவ்வளவோ வரவேண்டியிருக்கு'ன்னு சிரிச்சுகிட்டே சொன்னாங்க.
அதே மாதிரி, 'நீங்க, எனக்காக பாடின, 'எங்கிருந்தோ ஒரு குரல் வந்தது' பாட்டு, எனக்கு ரொம்ப பிடிக்கும். நான் அந்த பாட்டை தினமும் கேட்பேன்...' என்று, ஜெயலலிதா கூறியதாக சொன்னார், வாணி.
ஒருமுறை, தமிழகத்திலிருந்து இரண்டு கலைஞர்களை ஒடிசா அரசும், ஒடிசாவிலிருந்து இரண்டு கலைஞர்களை தமிழக அரசும் தேர்ந்தெடுத்தது. சென்னை கலைவாணர் அரங்கத்தில், அப்போதிருந்த இரண்டு மாநில முதல்வர்களான ஜெயலலிதா, நவீன் பட்நாயக் ஆகியோர் முன்னிலையில் விருது வழங்கும் விழா நடந்தது.
அப்போது, தமிழகத்தை சேர்ந்த இரண்டு கலைஞர்களாக, வாணி ஜெயராம் மற்றும் இளையராஜாவை அந்த நிகழ்ச்சியில் கவுரவப்படுத்தினர்.
இசைஞானி இளையராஜா பற்றி வாணி பேசும்போது:
மிகப்பெரிய இசைஞானி அவர். நோட்ஸ் எல்லாம் ஏற்கனவே, தயார் பண்ணி வைச்சிருப்பார். அதை நாம கரெக்டா கத்துக்கிட்டு பாடிட்டா போதும், அந்த பாட்டு, 'சூப்பர் டூப்பர் ஹிட்' தான். அவருடைய இசையில் நான் பாடின பாடல்கள் எல்லாமே, 'சூப்பர் ஹிட்' தான்.
அதே மாதிரி, சங்கர் - கணேஷ் இசையமைப்பில் நான் நிறைய பாடல்கள் பாடியிருக்கேன். அவங்களுடைய, 'ரெக்கார்டிங்' போகும்போது ஏதோ, 'பிக்னிக்' போற மாதிரி ஜாலியா இருக்கும்.
சங்கர் சார் பாட்டு சொல்லிக் கொடுப்பார். கணேஷ் சார், ஆர்கெஸ்ட்ரா பார்த்துப்பாரு. ஒரு நேரத்துல தினமும் காலை, மதியம், சாயங்காலம் மூன்று வேளையும் அவங்களோட இசையில எனக்கு, 'ரெக்கார்டிங்' இருந்திருக்கு, என்றார்.
இந்தியாவின் முதல் பெண் ஆளுமை தன்மை கொண்ட முன்னாள் பிரதமர் இந்திரா பற்றி கூறும்போது:
கடந்த, 1969ல், அவங்க பிரதமரா இருந்த சமயத்துல, ஒரு கலாசார குழுவை அழைச்சுகிட்டு ஆப்கானிஸ்தான் போனாங்க. இப்பவெல்லாம் ஆப்கானிஸ்தான் போறதெல்லாம் நினைச்சுக் கூட பார்க்க முடியாது. அந்த கலாசார குழுவில ஒரு சிறந்த கதக் கலைஞருக்காக பாடறதுக்கு நான் போயிருந்தேன்.
அந்த கலைநிகழ்ச்சிகள் தொடர்ந்து சில நாட்கள் நடந்தது. நிகழ்ச்சி நடந்த ஒவ்வொரு நாளும், இரண்டு நாட்டு பிரதமர்களும் கலந்துகிட்டாங்க. அப்போ, தினமும் நான் பாடிட்டு வந்தவுடனேயே, இந்திரா அம்மையார் கிளம்பறதுக்கு முன், என்கிட்ட வந்து, 'உங்க குரல் ரொம்ப இனிமையா இருக்கு. ரொம்ப அழகா பாடினீங்க...' என்று, நாள் தவறாம சொல்வாங்க.
அதன்பின், சில ஆண்டுகள் கழிச்சு, 1983ல், 'விஷ்வ ஹிந்த் சம்மவுனம்'ன்னு டில்லியில ஒரு நிகழ்ச்சி நடந்தது; உலக ஹிந்தி மாநாடு. அதுக்கு, இறை வணக்கம் நீங்க தான் பாடணும்ன்னு, இந்திராஜி ரொம்பவும் பிரியப்படறதா சொல்லி கூப்பிட்டாங்க.
அந்த நிகழ்ச்சிக்கு போய், இறை வணக்க பாடலை பாடி முடிச்ச உடனேயே, ஸ்டேஜ்ல அவங்க பக்கத்திலேயே என்னை உட்கார்த்தி வச்சு, 'ஏன், நீங்க என்னை பார்க்கவே வரமாட்டேன்றீங்க'ன்னு ரொம்பவும் அன்போட கேட்டாங்க.
'மேடம், நீங்க பிரதமர்... உங்களை தொந்தரவு பண்ண கூடாதுன்னு நினைச்சேன்...' என்றேன். அவங்க உடனே, 'அதெல்லாம் ஒண்ணும் இல்ல... எல்லா ஆர்டிஸ்ட்டுமே வந்து என்னை பார்க்குறாங்க'ன்னு சொல்லி, அடுத்த நாளே எனக்கு, அவங்க வீட்டுல போய் பார்க்கறதுக்கு, காலை, 9:15 மணிக்கு, 'அப்பாயின்மென்ட்' கொடுத்தாங்க.
அப்புறம் என்ன, அவங்கள போய் பார்த்து, போட்டோ எடுத்துகிட்டு, அவங்க, 'ஆட்டோகிராப்'பை, என் மியூசிக் புத்தகத்தில் வாங்கிட்டு வந்ததாக சொல்லி, ஒரு குழந்தை போல குதுாகலித்தார், வாணி.
இந்திரா அம்மையார் மட்டுமல்ல, மேற்கு வங்க முதல்வராக இருந்த, ஜோதிபாசு மனைவி முன்னிலையில், அவரின் தாய்மொழியான வங்க மொழியிலும் பாடி, பாராட்டை பெற்றவர், வாணி.
தொடர்ந்து, 11 ஆண்டுகள் ஒடியா பாடல்களின் முடிசூடா ராணியாக இருந்திருக்கிறார், வாணி ஜெயராம். வாணி ஜெயராமின் குரலுக்காகவே ஒடியா திரைப்பட தயாரிப்பாளர்கள், சென்னைக்கு வந்து, பாடல்கள் பதிவு செய்திருக்கின்றனர். தமிழகத்தை சேர்ந்த வாணிக்கு, ஒடிசாவிலும், வங்காளத்திலும், அசாமிலும் கூட, ரசிகர்கள் இன்னும் இருக்கின்றனர்.
-தொடரும்
ஸ்ரீவித்யா தேசிகன்