ப
இந்த வாரம், புத்தகங்களில் படித்தது மற்றும் வாசகர்கள் அனுப்பிய தகவலின் தொகுப்பு:
துாய மனதைப் பெற இதோ சில எளிமையான வழிமுறைகள்:
* எதிர்பாராமல் ஒரு நெருங்கிய நண்பருக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு உங்கள் உணர்வுகளை பரிமாறிக் கொள்ளுங்கள்
* நல்ல புத்தகம் ஒன்றை எப்போதும் கைவசம் வைத்திருங்கள்
* உங்களுக்கு பிடித்த விளையாட்டில் ஈடுபடுங்கள் அல்லது நீண்ட துாரம் நடை பயிற்சி செய்யுங்கள்
* உங்களுக்கு பிடித்த இசைக் கருவியை இயக்கி பாடுங்கள்
* உங்களுடைய அறையெங்கும் மெல்லிய இசையை பரவச் செய்து ரசியுங்கள்
* இதுவரை போகாத ஒரு ஹோட்டலுக்கு சென்று உணவை ருசித்து சாப்பிடுங்கள்
* கஷ்டப்படும் நண்பர் ஒருவருக்கு கடிதம் எழுதுங்கள்
* நோயுற்றிருக்கும் நண்பரை நேரில் சந்தித்து, நலம் விசாரியுங்கள்
* மூச்சுப் பயிற்சியை தொடர்ந்து செய்யுங்கள்
* உங்களுக்கு கிடைத்த புகழ் மாலைகளை நினைவுக்கு கொண்டு வாருங்கள்.
இந்த பயிற்சிகளெல்லாம் உங்கள் மனச்சோர்வை போக்கி, மனதை புதிய பாதையில் புத்துணர்வுடன் நடக்க செய்யும். திறந்த மனம்தான் வளர்ச்சியின் அறிகுறி.
ரேஷன் கடையில், வியர்வை வடிய வடிய பணிபுரியும் பெண்ணிடம், 'சுகர் இருக்கா...' என்று கேட்டார், ஒருவர்.
'எனக்கு, 380 உள்ளது...' என்றார், கடையில் பணிபுரியும் பெண் .
வந்தவரோ விழித்தார்.
'எனக்கு, ரெண்டு கிலோ தான் வேண்டும்...' என்றார்.
'கடையில் சர்க்கரை போடுறீங்களா என, விபரமா கேட்கணும்...' என்று எரிச்சலுடன் பதிலுரைத்தார், அந்த பெண்.
இதைக் கேட்டு நான் உட்பட அங்கிருந்தவர்கள், 'கொல்' என சிரித்து விட்டோம்.
தமிழுக்கும் அமுதென்று பேர் என்னை நேராக பார்த்தாலும், தலைகீழாக பார்த்தாலும் என்றும் தன் நிலை மாற மாட்டேன். இதுதான் தமிழின் சிறப்பு. வேறு எந்த மொழிக்கும் கிடையாது.
திசை பொறுத்து காற்றின் பெயர்கள்:
* தெற்கிலிருந்து வீசுவது தென்றல் காற்று
* வடக்கிலிருந்து வீசுவது வாடைக் காற்று
* கிழக்கிலிருந்து வீசுவது கொண்டல் காற்று
* மேற்கிலிருந்து வீசுவது மேலை காற்று
காற்று வீசும் வேகம் பொறுத்து பெயர்கள்:
* 6 கி.மீ., வேகத்தில் வீசுவது மென் காற்று
* 6 - 11 கி.மீ., வேகத்தில் வீசுவது இளந்தென்றல்
* 12 - 19 கி.மீ., வேகத்தில் வீசுவது தென்றல்
* 20 - 29 கி.மீ., வேகத்தில் வீசுவது புழுதிக் காற்று
* 30 - 39 கி.மீ., வேகத்தில் வீசுவது ஆடிக்காற்று
* 100 கி.மீ., வேகத்தில் வீசுவது கடுங்காற்று
* 101 - 120 கி.மீ., வேகத்தில் வீசுவது புயல் காற்று
* 120 கி.மீ., மேல் வேகமாக வீசுவது சூறாவளி காற்று.
ரயிலில் மட்டும், நீங்கள் விரும்பும் இருக்கையை ஏன் தேர்வு செய்ய முடியாது எனத் தெரியுமா?
இதற்கு பின் இயற்பியல் காரணம் ஒன்று உள்ளது.
திரையரங்கில், எந்த இருக்கை வேண்டுமானாலும் நம் விருப்பத்தின்படி, 'புக்' செய்யலாம். 'ஹவுஸ்புல்' ஆனாலும், ஓரிரு இருக்கைகள், 'புக்' ஆனாலும் எந்த பாதிப்பும் இல்லை. ஏனெனில், இது நகர்வு தன்மை அற்ற இடம்.
ஆனால், ரயில் அதிக வேகத்தில் பயணிக்க கூடிய நகர்வு பொருள். இங்கே நம் விருப்பதின்படி இருக்கை, 'புக்' செய்யும்போது, விபத்து உண்டாக வாய்ப்பு உள்ளது.
பொதுவாக ரயில்களில், எஸ்1, எஸ்2, எஸ்3... என, பல கோச்கள் இருக்கும். ஒவ்வொரு கோச்சிலும், 72 இருக்கைகள் இருக்கும். மேலும், கீழ், மத்திய, மேல் படுக்கை அமைப்பும் கொண்டிருக்கும்.
நீங்கள் டிக்கெட் பதிவு செய்யும்போது, ஒவ்வொரு கோச்சிலும், மத்திய பகுதியில் இருக்கும் இருக்கைகள் தான் முதலில் பதிவு செய்யப்படும். அதாவது, 30 - 40 என்ற எண்களுக்குள் இருக்கும் இருக்கைகளை தான் பதிவு செய்வர். எல்லா கோச்சிலும் இந்த மத்திய இருக்கைகள் பதிவான பிறகு, அதற்கடுத்த இருக்கைகள் சீரான முறையில் பதிவு செய்யப்படும்.
படுக்கை பதிவுகளும் இப்படி தான்; முதலில் கீழ் படுக்கை, பிறகு மத்தியில், அடுத்த மேல் படுக்கைகள் பதிவுகள் செய்யப்படும்.
ரயிலில் இப்படி பிரித்து டிக்கெட் பதிவு செய்தால்தான் ரயில் ஓடும்போது, அதன் புவியீர்ப்பு மையமும், அதன் சமநிலை பாதிப்படையாமலும் இருக்கும்.
கடைசி நேரத்தில், யாராவது, 'டிக்கெட் கேன்சல்' செய்து, உங்களுக்கு இருக்கை கிடைத்தால், அது, 2, 3 அல்லது 71, 72 என்ற இருக்கையாக கிடைப்பதற்கு, இந்த முறை தான் காரணம்.
மேலும், 100 கி.மீ., வேகத்தில் சென்றுக் கொண்டிருக்கும் ரயிலில், எஸ்1, எஸ்2, எஸ்3 முழுவதும் நிரம்பியும், எஸ்4, எஸ்5, எஸ்6 காலியாக இருந்து, இதர கோச்கள் ஓரிரு இருக்கை மட்டும் பதிவாகியிருந்தால், கண்டிப்பாக ரயிலின் வேகத்தை கூட்டி, குறைத்து, 'ப்ரேக்' போடும்போது, விபத்துகள் நேர வாய்ப்பு உண்டு.
இதை தவிர்க்க தான் இந்த முறையில் டிக்கெட், 'புக்' செய்யப்படுகிறது.
சகல சாப்பாட்டு பிரியர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம்...
* பல் முளைக்கா பிஞ்சுகளுக்கு, பருப்பு சாதமே சொர்க்கம்
* மார்கழி மாத குளிரில் மணக்கும் வெண்பொங்கல்
* கார மிளகு தாளித்த பொங்கலுடன் கத்திரிக்காய் கொத்ஸ்து
* பரங்கிக்காய் சாம்பாருக்கு பீன்ஸ் பருப்புசிலி
* கதம்ப சாம்பாருக்கு பொடியிடிச்ச கத்திரிக்காய் கறி
* குடைமிளகாய் சாம்பாருக்கு கோஸ் - பட்டாணி கறி
* உலகிலுள்ள அத்தனை சாம்பாருக்கும் உருளைக் கார கறி
* வெந்தய குழம்பிற்கு வெண்டைக்காய் கறி
* சுண்டைக்காய் வத்த குழம்பிற்கு சுட்ட அப்பளம்
* பத்திய மிளகு குழம்பிற்கு பருப்பு துவையல்
* மதியான தயிர் சாதத்திற்கு மாவடு
* அடைக்கு வெல்லத்தோடு அவியல்
* மீந்து போன அடைமாவில் மிருதுவான குனுக்கு
* புளித்த தோசை மாவில் வெங்காயம் சேர்த்து செய்யும் ஊத்தப்பம்
* பசியில் துடிப்பவனுக்கு பழைய சோறு
* நோயில் வீழ்ந்தவனுக்கு நொய்க்கஞ்சி
பட்டினியோடு இருப்பவரை இனி காணாத நாள் தான், நம் அனைவருக்கும் சொர்க்கம்.