ஆ.மாடக்கண்ணு, பாப்பான்குளம், தென்காசி மாவட்டம்: பெற்றோரை, முதியோர் காப்பகங்களில் சேர்க்கும் மகன்களுக்கு தாங்கள் சொல்ல விரும்புவது என்ன?
அவர்களுக்கும் இந்நிலை, தமது மகன் மூலமாக வரும் என்பதை எண்ணிப் பார்ப்பதில்லை!
* டி. கிரேஸ் ஜூலியட் மேரி, ஆஸ்திரேலியா: அரசியல் கட்சிகளின் வாரிசுகள் ஒன்று சேர்ந்து கூட்டணி அமைத்தால் வெல்ல முடியுமா?
ஒவ்வொருவருக்கும் வித்தியாசமான கொள்கை உள்ளதே... கூட்டணி சேர வாய்ப்பே இல்லை. ஒருவேளை, கொள்கைகளை துாக்கி வீசிவிட்டு ஒன்று சேர்ந்தாலும் வெற்றி வாய்ப்பு கிடையாது!
மா. அன்புச்செல்வன், தேனி: வாரமலர், சிறுவர்மலர், ஆன்மிக மலர் இதழ்களுக்கு கதைகள் அனுப்ப, சாதாரண வெள்ளைத் தாளில் ஒரு பக்கமே எழுத வேண்டுமா?
ஆமாம்... கதையை ஒரே பக்கத்தில் முடித்து விடக்கூடாது... நான்கு பக்கங்கள் எழுதலாம். மற்றும், 'இ - மெயிலில்' கூட அனுப்பலாம்!
* கே. முத்துசாமி, திருவாடனை: ஐ.டி., ஊழியர், அரசு ஊழியர் இருவருக்கும் என்ன வித்தியாசம்?
அரசு ஊழியருக்கு தினமும், பை, 'நிரம்பும்!' ஐ.டி., ஊழியருக்கு மாதம் முதல் தேதி மட்டுமே, வங்கியில் பணம், 'கிரெடிட்' ஆகும்!
எம். சுகந்தி, சென்னை: புத்தகம் வாசிப்பவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறதா?
நமது நாளிதழில் வெளியாகும் புத்தக மதிப்புரையை படிப்பதில்லை என நினைக்கிறேன். ஒவ்வொரு வெளியீட்டாளர்களும் புதிது புதிதாக புத்தகம் வெளியிட்டுக் கொண்டுதானே உள்ளனர்... வாசிப்பு குறைந்து விற்பனை குறைந்தால், புத்தகம் வெளியிடுவரா?
ப. காளிதாசன், நீர்விளங்குளம், புதுக்கோட்டை: வாசனை திரவியங்கள் பயன்படுத்துவது உண்டா?
ஓ... பிரான்ஸ் நாட்டின் தலைநகர், பாரீசில் தயாராகும், 'புரூட்'தான் பயன்படுத்துவேன். அக்குளில், 'பாடி ஸ்பிரே...' சட்டையில், அதே, 'புரூட்'டின் 'கிளாசிக் சென்ட்' பயன்படுத்துவேன்!
எம். மிக்கேல் ராஜ், சாத்துார், விருதுநகர்: 'புரட்சித் தாய்' என்ற பட்டம், சசிகலாவுக்கு பொருத்தமாக உள்ளதா?
இல்லை! 'புரட்சித் தாய்' என்பதற்கு முன், 'ஊழல்' என்ற வார்த்தையைச் சேர்த்துக் கொண்டால் பொருத்தமாக இருக்கும்!