பலராமனின் அம்மா மீனாட்சி அம்மாளுக்கு அகவை, 100ஐ கடந்து, 101 ஆரம்பித்தது. அதற்காக, கனகாபிஷேகம் என்ற விழாவும் முடிந்து, 15 நாட்கள் பஞ்சாய்ப் பறந்து போய் விட்டது.
இரண்டு மகன், இரண்டு மகளை ஈன்றெடுத்தாலும் கூட, வயது முதிர்ந்த அம்மாவை காப்பாற்ற உள்ளூரில் மூத்த மகன் பலராமனிடம் பொறுப்பை ஒப்படைத்து, அவரவர் மும்பை, கோல்கட்டா மற்றும் அமெரிக்கா என, பறந்து விட்டனர்.
அந்த காலத்தில், பள்ளி இறுதி வகுப்பில் நல்ல மதிப்பெண் பெற்று தேறி, அரசாங்க உத்யோகத்தை திறம்பட நிறைவு செய்து, தற்போது, 75 வயதைக் கடந்த ஒரு மூத்த குடிமகன் தான், பலராமன். மூன்று ஆண்டுகளுக்கு முன், மனைவியை இழந்து தவிக்கும் ஓர் ஆண் விதவை.
தன் மகன், மகளை எல்லாரையும் போல முறையே அமெரிக்காவிற்கும், ஆஸ்திரேலியாவிற்கும் அனுப்பி வைத்து விட்டு, அம்மாவுடன் காலத்தைக் கழித்து வந்தார்.
துாக்கத்தைத் தொலைத்து பல ஆண்டுகள் ஆகிவிட்ட பலராமன் நினைவுகளில், கனகாபிஷேக நினைவுகள் மட்டும் ஒன்றன் பின் ஒன்றாக படை எடுத்து வந்து கொண்டிருந்தன.
'உன் அம்மா ரொம்ப கொடுத்து வச்சிருக்காப்பா... இந்த வயதில், அம்மாவை தாங்கு தாங்கு என்று தாங்க எந்தப் பிள்ளையால் முடியும்?'
'வயதான அம்மாவை தாங்கு தாங்கென்று தாங்குகிறாயே... உன்னை கோவில் கட்டி கொண்டாடத்தான் வேண்டுமப்பா... சொர்க்கத்தில் உனக்காக இப்போதே ஒரு இடம், 'ரிசர்வ்' ஆகி விட்டதப்பா... அந்த அளவுக்கு பித்ருக்களின் ஆசீர்வாதம் உனக்கு இருக்கிறதப்பா... இந்த வாய்ப்பு அவ்வளவு எளிதில் யாருக்கும் கிடைக்காதப்பா...'
கனகாபிஷேகத்திற்கு வந்திருந்த உற்றார் உறவினர்களில் சிலர் சாப்பாட்டை முடித்து, கை கழுவியபடியே பேசிய பேச்சுக்கள், அவர் காதுகளில் ரீங்காரமிட்டது.
இதற்கிடையில், 'சே... 60 வயதிற்குள் அவரவர்கள் போய் சேர வேண்டுமே தவிர, இப்படி தானும் கஷ்டப்பட்டு, கூட இருப்பவர்களையும் கஷ்டப்படுத்துவது கூடவே கூடாதப்பா...
'நுாறு வயதிற்கு மேல் வாழ்ந்து எதைத்தான் சாதிக்கப் போகிறதோ இந்தக் கிழம்... தன்னந்தனியாக பாத்ரூம் கூட போக முடியாத அளவுக்கு வாழ்ந்து மற்றவர்களுக்கு இம்சை கொடுப்பதை விட காலா காலத்தில் போய் சேருவதே நல்லது...' என்றது, ஒரு குரல்.
'நீ பலராமனின் அம்மாவைச் சொல்கிறாய். இந்த பலராமனுக்கும் வயது கொஞ்சமா ஆகிறது... 75 முடிந்து இன்னும் சில ஆண்டுகளில் சதாபிஷேகம் செய்ய வேண்டிய வயதே வந்து விடும். இந்த லட்சணத்தில் இந்த நுாத்துக் கிழவியையும் காப்பாத்தி ஆகணும். கருமம்டா அப்பா...' என்றது, இன்னொரு குரல்.
அத்தனையையும் ஒன்றன் பின் ஒன்றாக அசை போட்டார், பலராமன்.
அப்போது தான் அவரது மனதிற்குள் அந்த சைத்தான் புகுந்து, வேதம் ஓத ஆரம்பித்தது.
'இவர்கள் பேசுவதில் என்ன தவறு இருக்கிறது? முதுகு வலி, இடுப்பு வலி, கழுத்து வலி என, உடம்பு முழுக்க வியாதிகள். போவதோ அரசு ஆஸ்பத்திரி; வாங்குவதோ அரசு தரும் இலவச மருந்து; அதுவும் ஆடிக்கு ஒருநாள் அமாவாசைக்கு ஒருநாள்.
'எனக்கே இந்த கதி. இந்த லட்சணத்தில் அம்மாவைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு வேறு. இந்த அம்மாவும், 'ஏன்டா பலராமா... காது, தோட்டை பீரோவுக்குள் பூட்டித்தானே வைத்து இருக்கிறாய்... பேத்தி வளைகாப்புக்கு எல்லாரையும் கூப்பிட்டு விட்டோமேன்னு நீ ஒண்ணும் கவலைப்படாதே, நான் எல்லாருக்கும் சமைத்துப் போடுகிறேன்...' என, ஒன்று கிடக்க ஒன்று உளறிக் கொட்டுவதும்...
'காலை விடிந்ததோ இல்லையோ, 'ஏண்டா பலராமா... பால்காரன் இன்னுமா வரவில்லை' எனக் கேட்டு காபிக்கு அடிபோடுவதும்... 8:00 மணி ஆனவுடன், 'எதிர் வீட்டு மெஸ் மாமியிடமிருந்து டிபன் இன்னும் அரை மணியில் வந்து விடுமோன்னா?' என, தன் பசியை எனக்கு உணர்த்துவதும்...
'ஒரு வேளை என் அம்மா முதலில் போய் சேர்ந்து விட்டால், என் மிச்ச காலத்தை ஏதாவது ஓர் முதியோர் இல்லத்தில் கழித்து விடுவேன். ஒருவேளை, நான் முன்னே சென்று விட்டால், அம்மாவின் கதி என்னாகும்... ஐயோ, அம்மா உனக்கு அந்த நிலை வரவே கூடாது...'
இப்படி எல்லாம் புலம்பி தவித்த பலராமனுக்கு, 'நோய்வாய்பட்ட பசுவைக் கொல்வது ஒன்றும் பாவ காரியம் அல்ல' காந்திஜியின் தத்துவம் ஞாபகத்திற்கு வந்தது; கூடவே தான் வாங்கி வைத்திருந்த துாக்க மாத்திரையும் ஞாபகத்திற்கு வந்தது.
'ஒன்றுக்கு பத்தாக மாத்திரையை கொடுத்து, பெற்ற அம்மாவை கொன்று விட்டால் என்ன... பாவம் தான். ஆனால், அந்த பாவத்திற்கு பிராயச்சித்தமாக நானும், 10 -15 மாத்திரை உட்கொண்டு என்னையும் அழித்துக் கொண்டால்... யாருக்கும் எந்த கஷ்டமும் தராமல் இருவருமே போய் சேர்ந்து விடலாமே...
'வாழ்நாள் முழுவதும் கிடந்து அல்லாடிக் கொண்டிருப்பதற்கு பதில், இதுவே சரியான வழி. இன்று இரவே எங்கள் கதை முடிந்தாக வேண்டும்...' என, தீர்மானித்து விட்டார், பலராமன்.
சாவிற்கு முன், என்னென்ன ஏற்பாடுகள் செய்ய வேண்டுமோ அத்தனையும் செய்து முடித்தார். மாத்திரை பாட்டிலை கையோடு எடுத்து வைத்துக் கொண்டார்.
பகல், 1:00 மணி.
அம்மாவுக்கு சோற்றை ஊட்டி, தானும் சாப்பிட்டுவிட்டு, ஒரு தீர்மான முடிவில் மவுனமாக அமர்ந்திருந்தார், பலராமன்.
அப்போது, வாசலில் ஒரு கார் வந்து நின்றது.
யாராக இருக்கும் என, எட்டிப் பார்த்தார், பலராமன்.
அத்தை மகன், விஸ்வநாதன் வந்தார். ஒட்டிப்பிறந்த இரட்டையர் போல பழகியவர். சின்னஞ்சிறு வயதில் கிராமத்தில், 'ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்' என, கேலி செய்வர்.
'இத்தனை நாள் கழித்து, அதுவும் என் மனதில் இப்படி ஒரு குரூர எண்ணம் தோன்றிய சமயத்தில் ஏன் வருகிறான்?' என்று யோசித்தபடியே, ''வா... விசு,'' என வரவேற்றார்.
குசலம் விசாரித்து, அம்மாவின் காலைத் தொட்டு வணங்கினார். அதிகம் பேசாமல் உடனடியாக விஷயத்திற்கு வந்தார்.
''பாரின் சென்று அங்கேயே நிரந்தரமாக தங்க முடிவு செய்துள்ளேன். அதற்கு, 'கிரீன் கார்டு' தேவைப்படுகிறது. நான் பிறந்த கிராமத்தில் உயிரோடு இருக்கும் ஒருவரின் கை எழுத்தும், விரல் ரேகையும் தேவைப்படுகிறது.
''உன் அம்மா தான் தகுந்த ஆள் என முடிவு செய்து, உன்னைத் தேடி வந்துள்ளேன். இந்த உதவியை எனக்கு நீ செய்வாயா,'' என அன்புடன் கேட்டார், விஸ்வநாதன்.
''உனக்கு இல்லாத கையெழுத்தா,'' எனக் கூறி, விஸ்வநாதன் கொண்டு வந்த பத்திரத்தில், அம்மாவை கையெழுத்துப் போட சொல்லி, ரேகை பதிவு செய்து, கூடவே தன் அம்மாவின்ஆதார் கார்டு நகலையும் கொடுத்தார், பலராமன்.
வாங்கி கொண்ட விஸ்வநாதன், ''இதோ பார் பலராமா... நானும், என் குடும்பமும், உனக்கும் உன் குடும்பத்திற்கும் மிகவும் நன்றிக் கடன் பட்டிருக்கிறோம்... நான் சிறுவனாக இருக்கும்போதே என் அம்மா இறந்து விட்டாள்.
''உன் அம்மாதான் என்னை வளர்த்து ஆளாக்கி, பெரிய படிப்பெல்லாம் படிக்க வைத்தாள். என் மீது அளவு கடந்த அன்பு செலுத்தினாள். நீயும் எனக்கு பெரிய உதவி ஒன்றை செய்து இருக்கிறாய். சிறு வயதில், தஞ்சையில் நாம் இருவருமே ஒரே பள்ளியில் படித்த போது, ஆடி, 18ம் பெருக்கு அன்று, ஆற்றில் குளிக்க போனோம்.
''எனக்கு நீச்சல் தெரியாது. வெள்ளப் பெருக்கில் நான் அடித்து சென்றதும், நீச்சல் தெரிந்த நீ, உன் உயிரை துச்சமென மதித்து என்னை காப்பாற்றினாய். நீ மட்டும் அன்று இல்லையென்றால் நான் இன்று உயிரோடு இல்லை,'' என்றார்.
எல்லாவற்றையும் நிதானமாக கேட்ட பலராமன், ''சரி... விசு இதெல்லாம் இப்போது எதற்கு?'' என, அடக்கத்துடன் கேட்டார்.
''காரணம் இருக்கிறது பலராமா.''
''அப்படி என்ன அதிசய காரணம்?''
''அன்று முதல் இன்று வரை நான் உங்கள் குடும்பத்திடமிருந்து உதவியைத் தான் பெற்றுக் கொண்டிருக்கிறேனே தவிர, உன் குடும்பத்திற்கு எந்த நன்றி கடனும் செய்யவில்லை.''
''ச்சீ... இது என்ன பைத்தியக்காரப் பேச்சு.''
''பைத்தியக்காரத்தனப் பேச்சு இல்லை, பலராமா... இது, என் நெடு நாளைய ஆசை. இந்த சூழ்நிலையில் நான் உங்களுக்கு உதவவில்லை என்றால், நான் மனிதனே இல்லை. இது என் வாழ்நாள் மன உளைச்சலாக மாறிவிடும். முடிவோடுதான் இங்கே வந்திருக்கிறேன்.
''நான் சொல்வதை கொஞ்சம் கவனமாகக் கேள், ஆண்டவன் அருளால் நான் தற்போது வசதியாக இருக்கிறேன். வெளிநாட்டில் இருக்கும் நான் பெற்ற குழந்தை செல்வங்களும் என்னை அரவணைத்துக் காப்பாற்ற, நான், நீ என்று போட்டி போடுகின்றன. அவர்களுடன் சென்று தங்குவதற்கு எந்தத் தடையுமில்லை.
''கடைசியாக இருந்த ஒரு தடையும் உன் அம்மாவின் கையெழுத்து மூலமும், கைரேகை மூலமும் நீங்கி விட்டது. அடுத்த வாரமே நான் வெளிநாடு சென்று, நிம்மதியாக இருக்கப் போகிறேன். போவதற்கு முன், உங்களுக்கு ஒரு சிறு உதவியை செய்து போகலாம் என எண்ணி உள்ளேன்.
''இந்த வயதில், 100 வயதைத் தாண்டிய உன் அம்மாவை தன்னந்தனியாக வைத்துக் காப்பாற்றுவது என்பது யாராலும் இயலாத காரியம். எனவே, எனக்குத் தெரிந்த மிக நல்ல ஏஜென்ஸி மூலம் நடுத்தர வயதுடைய ஆயா ஒருவரை ஏற்பாடு செய்துள்ளேன்.
''அவர் காலை, 7:00 மணிக்கு வந்து, மாலை, 7:00 மணி வரை இங்கேயே தங்கி, உன் அம்மாவுக்கான பணிவிடை மற்றும் காலை டிபன் முதல் இரவு சாப்பாடு வரை அத்தனை வேலைகளையும் செய்வார். உங்களை கண்ணும் கருத்துமாகக் கவனித்துக் கொள்வார்.
''உன் அம்மாவைப் பற்றிய எந்த கவலையும் இனி, உனக்கு தேவையில்லை; எந்த பொருளுக்கும் பத்து பைசா நீ செலவு செய்யத் தேவையில்லை. இதை என் உரிமையாகவும், கடமையாகவும் நினைத்துச் செய்கிறேன். எனக்கும் அவர் அம்மா தான். கண்டிப்பாக இதை நீ ஏற்க வேண்டும்,'' என்றார், விஸ்வநாதன்.
இதைக் கேட்ட பலராமன் சற்றே கண் கலங்கினார். இப்படிப்பட்ட ஓர் உதவி அவருக்கு மிக மிக அவசியமாகவும் பட்டது. எந்தவித ஆட்சேபனையில்லாமல் ஏற்றுக் கொண்டார்.
விடைபெற்றுச் சென்றார், விஸ்வநாதன்.
'எப்பேர்ப்பட்ட தவறை நான் செய்ய துணிந்தேன். மரம் வைத்தவன் தண்ணீர் விடாமலா போவான். இறைவனால் நிச்சயிக்கக் கூடிய ஒரு மரணத்தை
நாமாகவா நிச்சயம் செய்வது?' என, எண்ணினார்.
துாக்க மாத்திரைப் பாட்டிலை எடுத்து, 'ஈரோப்பியன் கிளாசெட்'டில் கொட்டி இரண்டு மூன்று முறை, 'பிளஷ்' செய்தார். போதாக்குறைக்கு இரண்டு மூன்று பக்கெட் தண்ணீரையும் விட்டார்.
வெகு நேரம் கழித்து பாத்ரூமிலிருந்து வெளியே வந்தவரிடம், ''ஏன்டா பலராமா... லுாஸ் மோஷனா போறது,'' கவலையுடன் கேட்டாள், அம்மா.
யாரோ தார்க்குச்சியால் தன் இதயத்தைக் குத்துவது போலிருந்தது, பலராமனுக்கு.
ஐயோ இந்த அம்மாவையா கொலை செய்ய நினைத்தேன்.
மாலை, 5:00 மணி. 'டிவி'யை, 'ஆன்' செய்தார்.
'சுக்லாம் பரதரம் விஷ்ணும்
சசிவர்ணம் சதுர்புஜம், ப்ரஸன்ன வதனம்
த்யாயேத், ஸர்வ விக்னோப சாந்தயே...'
எம்.எஸ் சுப்புலட்சுமியின் விஷ்ணு சகஸ்ர நாமம் ஓங்காரமாக ஒலிக்க ஆரம்பித்தது.
அம்மாவின் முகத்தைப் பார்த்தார், பலராமன்.
அன்று மலர்ந்த தாமரைப் போல் சிரித்து, ரசித்துக் கேட்டுக் கொண்டிருந்தார். அப்படியே அம்மாவை அணைத்து முத்தம் இடவேண்டும் போல் தோன்றியது, பலராமனுக்கு.
ப. சிவராமன்
புனைப் பெயர்: ஷிவ்ராம்,
வயது: 76,
கல்வித்தகுதி: பி.யூ.சி.,
பீஹார் மாநிலத்தில், தனியார் கட்டுமான நிறுவனம் ஒன்றில், கணக்காளராக பணியாற்றி, ஓய்வு பெற்றவர். தற்சமயம் சென்னைவாசி.
தமிழில் பல்வேறு இதழ்களில் இவரது சிறுகதைகள் வெளியாகி உள்ளன. சிறுகதை போட்டிகள் பலவற்றிலும் பங்கேற்று, ஏராளமான பரிசுகள் பெற்றுள்ளார்.
வாரமலர் இதழில் தன்னுடைய படைப்பும் இடம்பெற வேண்டும் என்ற நீண்ட நாள் ஆசை இப்போது நிறைவேறியதில் மிகுந்த மகிழ்ச்சி அடைவதாக கூறியுள்ளார்.