விஜய் வைத்த கோரிக்கை!
ஹிந்தியில், அக்சய்குமாரை வைத்து பிரபுதேவா இயக்கிய, ரவுடிரத்தோர் படத்தில், பிரபுதேவாவின் வற்புறுத்தலுக்காக, ஒரு பாடலுக்கு நடனமாடினார், விஜய். இப்போது தெலுங்கில், 'என்ட்ரி' கொடுப்பதால், தனக்கான இரண்டு பாடல்களுக்கு, நடன மாஸ்டராக பணியாற்றுமாறு, பிரபுதேவாவை கேட்டுக் கொண்டுள்ளார், விஜய். அதிலும், 'டோலிவுட்டில் எனக்கு முதல், 'என்ட்ரி' என்பதால், தெறிக்க விடும் வகையில் வித்தியாசமான நடன அசைவுகளுடன், 'கம்போஸ்' செய்யுங்கள்...' என்று, பிரபுதேவாவை பிரத்யேகமாக கேட்டுக் கொண்டுள்ளார்.
— சினிமா பொன்னையா
'கெட் அவுட்' சொல்லும், ஸ்ருதிஹாசன்!
சினிமாவில் நடிக்கத் துவங்கியதில் இருந்தே, 'டூபீஸ், பிகினி' துவங்கி அசைவ காட்சிகளில் புகுந்து விளையாடியவர்தான், ஸ்ருதிஹாசன். ஆனால், 'இனிமேல் அப்படி நடிக்கப் போவதில்லையாம். கமலின் பெயரை காப்பாற்றும் வகையில், தன் திறமைக்கு சவால் விடக்கூடிய வேடங்களை தேர்ந்தெடுத்து நடிக்கப் போகிறாராம். அதனால், பழைய ஞாபகத்தில் அரைகுறை ஆடை அணியும் கதாநாயகி வேடங்களுக்கு தன்னை, 'புக்' பண்ண வரும் இயக்குனர்கள், கமர்ஷியல் கதை என்று சொன்னதுமே, 'கெட் அவுட்...' சொல்லி, அவர்களை கழுத்தை பிடித்து தள்ளாத குறையாய், விரட்டுகிறார்.
- எலீசா
ரசிகர்களின் துாக்கத்தை கெடுக்கும், தமன்னா!
கோலிவுட் சினிமா, தமன்னாவை புறக்கணித்து விட்டபோதும், அவர் பின்வாங்குவதாக இல்லை. தொடர்ந்து சில அபிமான இயக்குனர்களை துரத்தி வருகிறார். அதோடு, புதுவரவு நடிகையரின் படையெடுப்பால் தன்னை ரசிகர்கள் மறந்துவிடக் கூடாது என்பதற்காக, 'சோஷியல் மீடியா'வில், சினிமாவையே மிஞ்சும் புகைப்படங்களை வெளியிட்டு, இளசுகளின் துாக்கத்தை கெடுத்து வருகிறார். இதனால், தமன்னாவின், 'சோஷியல் மீடியா' பக்கத்திற்குள் ரசிகர்களின் படையெடுப்பு அதிகரித்து, 'டிராபிக் ஜாம்' ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. இதை அபிமான இயக்குனர்களிடம் சுட்டிக்காட்டி, 'ரசிகர்களின் இந்த ஆதரவுக்காகவாவது, என்னை நீங்கள் ஆதரிக்க வேண்டும்...' என்று, பட வாய்ப்பு கேட்டு, நெருக்கடி கொடுக்கிறார், தமன்னா. அலை மோதும்போதே கடலாட வேண்டும்!
- எலீசா
விஜயகாந்த் பாணியில், விஷால்!
'என் படங்களில், ஒவ்வொரு, 'ஆக் ஷன்' காட்சியும், வித்தியாசமாக இருக்க வேண்டும். அதோடு சண்டை காட்சிகளுக்காக, எத்தனை உயரமான பகுதிகளாக இருந்தாலும், 'ரிஸ்க்' எடுத்து நடிக்க, நான் தயாராக இருக்கிறேன். அதனால், படத்தை பார்க்க வரும் ரசிகர்களுக்கு, வெறியை ஏற்றும் வகையில், 'ஆக் ஷன்' காட்சியை படமாக்குங்கள்...' என்கிறார், விஷல். மேலும், விஜயகாந்த் நடித்த படங்களில் இடம்பெற்ற சில அதிரடியான சண்டை காட்சிகளை சுட்டிக்காட்டி, 'அதே பாணியில், புதிய தொழில் நுட்பத்துடன், 'ஆக் ஷன்' காட்சிகளை உருவாக்குங்கள்...' என்கிறார்.
— சினிமா பொன்னையா
சினி துளிகள்!
* சமீபகாலமாக அம்மா நடிகையாகி விட்டார், ராதிகா. அதோடு, கிராமத்து அம்மா வேடங்களில், சில காட்சிகளில் இயக்குனர்கள் சொன்ன வசனங்கள், அந்த காட்சிக்கு தத்ரூபமாக இருக்காது என்று தோன்றினால், மனதில் தோன்றும் வசனங்களை பேசி அசத்தி விடுகிறார். இதனால், அம்மா வேடங்களில், ராதிகா நடிக்கவில்லை. நிஜமாலுமே வாழ்ந்து கொண்டிருப்பதாக, அவரை கொண்டாடி வருகின்றனர், இளவட்ட இயக்குனர்கள்.
* 'பெயரளவிற்கு மட்டுமே அரசியலில் இருந்து கொண்டு, சினிமாவில் மீண்டும் விட்ட இடத்தை பிடிக்கப் போகிறேன்...' என்கிறார், குஷ்பு.
அவ்ளோதான்!