கிருஷ்ண பக்தர் ஒருவர், அருகில் உள்ள கண்ணன் கோவிலுக்கு தினமும் சென்று வழிபாடு செய்வார். பக்தருக்கு ஒரு மகள் இருந்தாள். '350 ரூபாய் இருந்தால், மகளின் திருமணத்தை நடத்தி விடலாம்...' என்றாள், பக்தரின் மனைவி. அந்தக் காலத்தில், 350 ரூபாயில் விமரிசையாகக் கல்யாணம் செய்யலாம்.'சரி, கண்ணனிடம் கேட்கிறேன்...' என்று சொல்லி, கோவிலுக்கு சென்றார், பக்தர்.வழிபாட்டை முடித்து, 'கண்ணா பிரபுவே... மகளுக்கு திருமணம் செய்ய, அடியேனுக்கு, 350 ரூபாய் தேவை. தாங்கள் தான் தந்து உதவ வேண்டும்...' என்று ஒரு தாளில் எழுதி, கண்ணனின் திருவடிகளில் வைத்து, கோவில் வாசலை அடைந்தார். 'இந்தாருங்கள், உங்கள் பெண் கல்யாணத்திற்காக பகவான் கொடுத்த பணம்...' என்று சொல்லி, சிறு பையைத் தந்து சென்றார், பெரியவர் ஒருவர். அதில், 500 ரூபாய் இருந்தது. 350 ரூபாயில் திருமணத்தை முடித்து, மீதி, 150 ரூபாய் இருந்தது.'கண்ணா, உன்னருளால் கல்யாணம் நல்லபடியாக நடந்தது. மீதிப்பணத்தை அனுப்பியுள்ளேன். தயவுசெய்து பெற்றுக் கொள்ளவும்...' என, ஒரு கடிதம் எழுதினார். பணத்தையும், கடிதத்தையும் பையில் போட்டு, கோவிலில் கண்ணன் திருவடிகளில் வைத்து, வீடு திரும்பினார்.நாட்கள் சென்றன. அந்நாட்டு அரசர், பொக்கிஷ அறைக்குச் சென்று பார்வையிட்டார். பகவானுக்கு பக்தர் எழுதிய இரு கடிதங்களும் அங்கு இருந்தன.படித்துப் பார்த்த மன்னர், தன் அனுமதியில்லாமல் பொக்கிஷ அதிகாரி தான் கொடுத்திருக்கிறார் என்று நினைத்து, அவரை சிறையிலடைத்தார்; 'அந்த பக்தரை இழுத்து வாருங்கள்...' என்று சேவகர்களையும் அனுப்பினார்.இரு கடிதங்களையும் பக்தரிடம் காட்டிய அரசர், 'இந்தக் கடிதங்களை எழுதியது நீங்கள் தானா... பணம் கிடைத்ததா... உங்கள் பெண்ணின் கல்யாணம் நடந்ததா...' என்று கேட்டார்.'ஆம்... இரண்டு கடிதங்களும் நான் எழுதியது தான். பணம் கிடைத்தது; பெண்ணின் கல்யாணம் நடந்தது...' என்றார், பக்தர். கோபமடைந்த மன்னர், மேலே விசாரிக்காமல், 'இவரையும் சிறையிலடையுங்கள்...' என்று கூறி, அந்தப்புரம் சென்றார்.அப்போது, பக்தருக்குப் பணம் கொடுத்த பெரியவர் அங்கு தோன்றி, 'நான் அரசரை பார்த்து திரும்பும் வரை, இவரை இங்கேயே வைத்திருங்கள். சிறைக்கு அழைத்துச்செல்ல வேண்டாம்...' என்று சேவகர்களிடம் சொல்லி, அந்தப்புரம் சென்றார். 'மன்னா, நான், இந்த ஊர் கோவிலில் குடியிருக்கும் கண்ணன். பக்தன் எனக்கு தான் கடிதங்கள் எழுதினானே தவிர, உனக்கு எழுதவில்லை. 500 ரூபாயில் மீதி, 150 ரூபாயைத் திருப்பித் தந்து விட்டான். அவனுடைய துாய்மையான பக்தியை விளக்கவே, நான் இவ்வாறு செய்தேன்.'உடனே, அவனை விடுதலை செய்து, அவனுக்குத் தேவையான செல்வத்தை தந்து, மரியாதைகளுடன் அனுப்பு. பொக்கிஷ அதிகாரியையும் விடுதலை செய்...' என்று, பகவான் அசரீரியாக அறிவுறுத்த, உண்மையை உணர்ந்து, அப்படியே செயல்படுத்தினார், மன்னர்.அரச மரியாதைகளுடன் வீடு திரும்பிய பக்தரை பார்த்து, அனைவரும் வியந்தனர். தெய்வம் ஒருபோதும் தன் பக்தனை கைவிடாது; அருள் செய்தே தீரும் என்பதை விளக்கும் நிகழ்வு இது.
பி. என். பரசுராமன்
ஆன்மிக தகவல்கள்!கோவிலில் சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்யும்போது, கிழக்கு மற்றும் மேற்கு நோக்கிய கோவிலாக இருந்தால், வடக்கு நோக்கியும்; வடக்கு அல்லது தெற்கு நோக்கிய கோவிலாக இருந்தால், கிழக்கு நோக்கியும் விழுந்து வணங்க வேண்டும். கொடி மரம் மற்றும் பலி பீடம் அருகேதான் நமஸ்காரம் செய்ய வேண்டும்.