ஆர். பிரசன்னா எழுதிய, 'பிரபலங்கள் 10 சுவையான சம்பவங்கள் 100' நுாலிலிருந்து: புகழின் உச்சியில், ஜவஹர்லால் நேரு இருந்த காலம். அவரை எதிர்த்து பேச ஆளே கிடையாது.
இந்நிலையில், கோல்கட்டாவிலிருந்து வெளிவந்த ஆங்கில நாளிதழ் ஒன்றில், ஒரு எழுத்தாளர் துணிச்சலுடன், 'நேருவின் போக்கு சர்வாதிகாரத்தனமானது. நாளை அவர் சர்வாதிகாரியாக மாறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. தயவுசெய்து யாராவது அவரை தட்டிக் கேளுங்கள்...' என எழுதியிருந்தார்.
அதை எழுதியவர் யார் தெரியுமா, நேருவே தான். வேறொரு புனைப் பெயரில் அதை எழுதியிருந்தார்.
நேரு, லண்டனில் சட்டம் பயின்று கொண்டிருக்கையில், அவர் தந்தை மோதிலால் நேரு, வாரம் ஒருமுறை தன் மகனுக்கு பணம் அனுப்பிக் கொண்டிருந்தார்.
ஒருமுறை, 'செலவுக்கு மேலும் பணம் தேவை...' என்று கேட்டு கடிதம் எழுதியிருந்தார், நேரு.
'ஒரு வாரத்துக்குள் இரண்டாம் தடவையாக பணம் கேட்டு எழுதுகிறானே...' என்ற எண்ணத்தில், 'முதலில் அனுப்பிய பணத்திற்கு கணக்கு எழுதவும்...' என எழுதினார், மோதிலால் நேரு.
'என் மீது உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் கணக்கு கேட்க வேண்டிய அவசியம் இல்லை. நம்பிக்கை இல்லாத பட்சத்தில், நான் அனுப்பும் கணக்கினால் உங்களுக்கு ஒரு பயனும் இருக்காதே...'
மகனின் பதிலை கண்டதும், பதிலேதும் பேசாமல், பணம் அனுப்பி வைத்தார், மோதிலால் நேரு.
குழந்தைகள் என்றால் நேருவுக்கு அலாதி பிரியம். அவர் பிரதமராக இருந்தபோது, ஒருமுறை மதுரைக்கு வந்திருந்தார். மதுரையில் அதிகாரிகளுடன் காரில் சென்று கொண்டிருந்தபோது, ஒரு பெரியவர் பலுான் விற்றுக் கொண்டிருப்பதை கண்டார். உடனே காரை நிறுத்தச் சொல்லி, 25 ரூபாய்க்கு பலுான் வாங்கி அங்கிருந்த குழந்தைகளுக்கு கொடுத்ததோடு மட்டுமின்றி தானும் அவர்களோடு விளையாட ஆரம்பித்து விட்டார். பலுான்களை தன் வாயால் ஊதி சிறு பிள்ளையாகவே மாறி விட்டார்.
பிரதமராக நேரு இருந்தபோது, பார்லிமென்ட் உறுப்பினர்களின் மாத சம்பளம், 400 ரூபாய். இதை சற்று அதிகமாக்க அவர்கள் கோரியபோது, மேலே, 20 ரூபாய் படியாக போட்டு கொடுக்கப்பட்டது. ஆனால், உறுப்பினர்கள் முகம் சுளித்தனர்.
'எங்களுடைய சம்பளம் எவ்வளவு என்று யாராவது கேட்டால், 420 என்று சொல்வது அசிங்கமாக இருக்காதா...' என்றதும், நேருவே சிரித்து விட்டார்.
இந்திய குற்றவியல் சட்டப்படி, 420 எனும் பிரிவு, 'மோசடி'யை குறிப்பதாகும். உடனே, சம்பளத்தை, 421 ஆக ஆக்கி விட்டார், நேரு.
உறுப்பினர்கள் திருப்தியடைந்தனர்.
எப்போதும் சட்டை பட்டன் துவாரத்தில், ஒரு ரோஜா பூவை வைத்திருப்பார், நேரு. இந்த பழக்கத்தை ஏற்படுத்தி கொடுத்தவர், நரசிங் மேத்தா என்பவர். இவர், சுதந்திரா கட்சியின் எம்.பி.,
ஒருமுறை, ஆனந்தபவனுக்கு நேருவை காணச் சென்றிருந்தார், நரசிங் மேத்தா. அப்போது, சட்டையில் ஒரு ரோஜா பூ சொருகியுள்ளதை கவனித்து, ரசித்து பாராட்டினார், நேரு.
உடனே, அருகிலுள்ள ரோஜா செடியில் உள்ள ஒரு பூவை எடுத்து தானும், தன் சட்டை பட்டனுக்குள் சொருகிக் கொண்டார், நேரு. அதுவே பின்னாளில் அவரின் அடையாளமாகி விட்டது.
பிரதமராக நேரு இருந்தபோது, அவரது பெரும் முயற்சியால், பக்ராநங்கல் அணை கட்டி முடிக்கப்பட்டது. அதன் திறப்பு விழாவிற்கு நேருவை அழைத்திருந்தனர்.
விழாவுக்கு சென்ற நேரு, அந்த அணையை திறக்காமல், 'இந்த அணைக்கட்டின் மணல், சிமென்ட், கல் இவற்றுடன் இதை கட்டிய தொழிலாளர்களின் வியர்வையும் கலந்திருக்கிறது...' என்று கூறி, அணை கட்டும் பணியில் ஈடுபட்ட பெண் தொழிலாளி ஒருவரை அழைத்து, திறக்க வைத்தார்.
நடுத்தெரு நாராயணன்