எளியாரை வலியார் அடித்தால் வலியாரை தெய்வம் அடிக்கும்!
வெயில் கொளுத்தியது.'மனதுள் தான் புகைச்சல் என்றால் இயற்கையும் அதை பிரதிபலிக்கிறதே...' என எண்ணியபடி, நெற்றி வியர்வையைத் துடைத்தபடி அந்த ஓட்டு வீட்டில் நுழைந்தார், மகாதேவன்.கை, கால் கழுவி, சட்டைப் பையிலிருந்து நாலைந்து மருந்து பொட்டலங்களை எடுத்து, படுக்கையிலிருந்த மங்களத்தின் அருகில் வந்தார்.''இந்தா, நாலு நாளைக்கு மருந்து கொடுத்திருக்கார், டாக்டர். ஊருக்குப் போயிட்டு அடுத்த வாரம் தான் வருவாராம். பஸ் புடிச்சு டவுனுக்குப் போயிட்டு வரதுக்குள்ள பெரும் பாடு...'' என அலுத்துக் கொண்டார்.சிரமப்பட்டு படுக்கையில் எழுந்து அமர்ந்தாள், மங்களம். கைகள் நடுங்க மாத்திரைகளை வாங்கி விழுங்கி, தண்ணீர் குடிக்கக் குடிக்க, வாயோரத்தில் தண்ணீர் வழிந்தது.தன் மேல் துண்டால் துடைத்தார், மகாதேவன். துடைத்த கரங்களைப் பிடித்து, ''என்னால் உங்களுக்கு எத்தனை கஷ்டம்?''''பரஸ்பரம் நாம ரெண்டு பெருமே சொல்லிக்க வேண்டிய வாசகங்கள். உனக்கு, நான் துணை; எனக்கு நீ துணை.''''உங்களுக்குக் கோபமே வராதா?''''எதுக்கு வரணும்? நம் விதி; அனுபவிக்கறோம். இதுலே, யாரை யார் குற்றம் சொல்றது?''''அந்தத் தெய்வத்துக்கு தெரியாதா?''''இதோ பார் தெய்வத்தோட பட்டியல் ரொம்பப் பெரிசு... ஒவ்வொரு பேப்பராத்தானே பார்க்கணும்?''''அரிவாளை எடுத்து வெட்டணும்ன்னு உங்களுக்கு கோபம் வரலியா?''''எனக்கு அரிவாளையே எடுக்கத் தெரியாதே... யாரை யார் வெட்டறது; யாருக்கு யார் தண்டனை தரது... நீதி சாவதில்லை.''''ஆமா, அந்த நீதி தேவதையே கண்ணைக் கட்டிட்டு நிக்குது. அதுக்கு நல்லது கெட்டது தெரியவாப் போகுது?''''நீதி தேவதை கண்ணைக் கட்டிட்டாலும், ஒரு பழமொழி தெரியுமா? 'எளியாரை வலியார் அடித்தால் வலியாரை தெய்வம் அடிக்கும்'ன்னு சொல்லுவாங்க.''''அப்படி அடிக்கிறதானா அன்னிக்கே அடிச்சிருக்கணுமே... உங்க பாஸ் திடீர்ன்னு, 'வேலையை விட்டுப் போ'ன்னு சொன்னவுடனேயே, மறுப்பு ஏதும் சொல்லாம ஆபீஸ் சாவி, பைல் பேப்பர்களை எல்லாம் அப்படியே விட்டுட்டு வந்துடுவீங்களா?''கஷ்ட ஜீவனம், கடன் வாழ்க்கை, கல்லுாரி படிப்பிலிருக்கும் பெண்... இந்த வேலை ஒண்ணு தான் வாழ்வாதாரம்ன்னு வாய் திறந்து, நியாயம் கேட்க மாட்டீங்களா?''''என்ன பண்றது மங்களம்... மனைவியோட நச்சரிப்பு, அவரோட மச்சானுக்கு வேலை வேணும்... புது வேலையை அமைத்துக் கொடுக்க முடியாத சூழ்நிலை.''அதனால, ஊருக்கு இளைச்சவன் பிள்ளையார் கோவில் ஆண்டிங்கிற கதையா, என்னை மாதிரி சில அப்பாவிகள் தலையிலே கை வச்சுட்டாங்க... மாற்றம் வரும் காத்திருப்போம்,'' என்றார்.''நீங்க சொல்ற மாற்றமெல்லாம் சினிமாவிலே தான் வரும்... 'எங்களுக்கும் காலம் வரும்'ன்னு பாட்டுப் பாடி, பொம்மை பண்ணிட்டு இருந்தா பாட்டு முடியறதுக்குள்ளே அவங்க பணக்காரனாகி காரும், பங்களாவும், ஆட்களுமாக காட்சியே மாறிப் போயிருக்கும்.''இது, வாழ்க்கை... சைக்கிள் சக்கரத்தை சுத்தினா மாற, மாயாஜால சினிமா கதை இல்லை. நம்மால அந்த மாதிரி கனவு கூட காண முடியாது.'' ''உனக்கொரு கதை தெரியுமா மங்களம்?''''வேறென்ன... இந்த வியாதியிலே நான் கேட்டது கதை மட்டும் தான்.''''இதையும் கேட்டு வை. இது, ஒரு நாடோடி கதை... தான் சேர்த்து வைத்த பணத்தை ஒரு செட்டியாரிடம் வியாபாரத்திற்காக தந்தது, நீர்ப் பறவை. கடல் கடந்து வணிகம் செய்து வட்டியுடன் பணத்தைத் திருப்பித் தருவதாக சொன்னார், அந்த வியாபாரி.''பறவையும் நம்பியது; தினமும் கடற்கரைக்கு வந்து காத்திருந்தது. கடலில் கப்பல் வரவே இல்லை. இருந்தும் மனம் தளராமல் கடற்கரையில் காத்திருக்கும், அந்தப் பறவை.''கடலைப் பார்த்து, 'கப்பல் செட்டி கொடு கொடு' என்று பாடுகிறது. இந்த பறவை மாதிரி தான் நாமும். கப்பல் வரும் என்று பறவை நம்புவதைப் போல் நல்ல காலம் வரும் என்று நாமும் நம்புவோம்,'' என்றார்.இவர் கதையை முடித்தபோது, உறங்கிப் போயிருந்தாள், மங்களம்.இத்தனை நாட்களில் கிடைத்த ப்ராவிடண்ட் பணம், சம்பளப் பணம் எல்லாம் செலவாகி போனது. மகள் படிப்பு பாதி, மங்களம் வியாதி பாதி.நாற்பது ஆண்டு காலம் உழைத்தும், 'உன் பணி தேவையில்லை' என்று ஒதுக்கியது, நிர்வாகம். பிறகு, இந்த வயதில் இவருக்கு எப்படி வேறு இடத்தில் வேலை கிடைக்கும்? புலம்பிப் புலம்பியே வாழ்வு கழிய வேண்டியதுதானா?
அன்று...மாலையும், இரவும் இணையும் நேரம். மின்சாரம் விடை பெற்றது. அலமாரிக்குள் சிறை இருந்த தெய்வப் படங்களின் முன், அணைந்து கிடந்த அகல் விளக்கை ஒளிர்வித்தார், மகாதேவன்.மங்கிய ஒளியில் மங்களம் படுத்திருந்தது நிழல் பிம்பமாகத் தெரிந்தது.''என் குடியைக் கெடுத்தவன் நாசமாப் போகணும்.''''மங்களம், விளக்கேத்தற நேரத்துலே சபிக்காதே... நல்லதை நினை, வியாதி குணமாகும்.''அப்போது, யாரோ ஓடி வரும் சத்தம். திடீரென்று கதவு தட்டும் ஓசை. நடுங்கியபடி கதவு திறந்தார், மகாதேவன். மின்சாரம் விடைபெற்ற அந்த நேரத்தில் அகல் விளக்கின் வெளிச்சத்தில்... ஒருவன் உடலெல்லாம் வெட்டுக் காயங்களுடன் ரத்தம் சிந்த, ''ஐயா, என்னைக் காப்பாத்துங்க,'' என்று கை கூப்பி கதறியபடி, இவர் காலடியில் வீழ்ந்தான்.மின்சாரம் வந்தது... விளக்கொளியில் அவனை பார்த்தார், மகாதேவன்.''ஐயா, வேறு ஜாதி பெண் மேலே கை வைச்சுட்டேன்... அவங்க ஆளுங்க என்னை வெட்ட வர்றாங்க... காப்பாத்துங்க, நீங்க என்ன கேட்டாலும் தரேன்,'' என்று கதறினான். சரத்குமார், முதலாளியின் மச்சான்... இவர் வேலை போகக் காரணமாக இருந்தவன்... பேரம் பேசியே பழக்கப்பட்டவர்கள்.கதறியபடியே தலை நிமிர்ந்தவன், இவரை அடையாளம் கண்டு, ''ஐயா, என்னைக் காப்பாத்துங்க... என்னால போன உங்க வேலையை திருப்பித் தர நான் ஏற்பாடு செய்றேன்,'' என, கை தொழுதான்.படுக்கையிலிருந்த மங்களம் எட்டிப் பார்த்தாள். எப்படிப்பட்ட வாய்ப்பு.இவனை வெட்ட, சமையல் அறை அரிவாள்மணை கூட வேண்டாம். இவனைக் காட்டிக் கொடுத்தாலே போதும். எழ முயன்றாள். நெஞ்சு வலித்தது.''இருப்பா பயப்படாதே... சமையல் அறையில் நெல் குதிர் இருக்கு. நெல் இல்லை, காலி தான்... அதுலே ஒளிஞ்சுக்கோ; நான் பார்த்துக்கறேன்,'' என்றார், மகாதேவன்.மரண பயத்துடன் ஓடினான். வாசற்கதவு தட்டப்பட, கதவு திறந்தார்.''இங்கே ஒரு களவாணிப்பய வந்தானே... வெட்டி பொலி போடணும்... எங்கே அவன்?''ஒருவன் கேட்க, இன்னொருவன் உள்ளே பார்த்தான்.''யாருமே வரலியேப்பா... உடம்பு சரியில்லாத மனைவியோட நான் திண்டாடிட்டு இருக்கேன்.''திடீரென்று, ''இதைப் பார்றா,'' என்று ஒருவன் சொல்ல... அனைவரும் அவன் கை காட்டிய திக்கில் பார்த்தனர்.வாயில் ரத்தம் வழிய நெஞ்சைப் பிடித்தபடி மரணித்திருந்தாள், மங்களம்.''ஐய்யய்யோ மங்களம்... எனக்கு நீ துணைன்னு சொன்னியே போயிட்டியா?'' அழுதார்.
இரண்டு மாதங்களுக்குப் பிறகு, ஒருநாள் பிரம்மாண்டமான கார் ஒன்று அந்த ஓட்டு வீட்டின் முன் வந்து நின்றது. அதிலிருந்து சரத்குமாரும், அவன் அத்தானும் வந்திறங்கினர். கையில் பரிசுப் பொருட்கள்.வீடு பூட்டி இருந்தது.'மகாதேவன் மனைவி காலமானவுடன், இறந்த தன் தாயைக் காண வந்த மகளுடன் அப்பாவும் அந்த இடத்தை காலி செய்து போய் விட்டார்...' என, விபரம் கூறினர், அங்கிருந்தோர்.வந்தவர்கள் வந்த வழி திரும்பினர்.காலம் கடந்த உதவிகள் பயன் தரா.'என்றோ ஒருநாள் அவர்களைத் தேடி கண்டுபிடிப்பேன். பறித்த வேலையை அவர் மகளுக்குத் தருவேன்...' தனக்குள் தீர்மானித்தான், சரத்குமார். சிந்து பைரவி