அன்புள்ள அம்மா -
நான் 25 வயது பெண். ஹாலிவுட் கார்ட்டூன் படங்களுக்கு அனிமேஷன் செய்து தரும் இந்திய நிறுவனத்தில் அனிமேட்டராக பணிபுரிகிறேன். நான்கு மாதங்களுக்கு முன் எனக்கு காய்ச்சல் வந்தது; அதை தொடர்ந்து இருமல். ருசி தெரியவில்லை; வாசனை நுகர முடியவில்லை.
வெறும் காய்ச்சல் என கருதி, மருந்து மாத்திரைகளை சாப்பிட்டு, 15 நாட்கள் ஓட்டி விட்டேன். என் அம்மாவுக்கு சந்தேகம் வந்து, 'பிசிஆர் டெஸ்ட்' எடுக்கச் சொன்னாள்; எடுத்தோம். 'நெகடிவ்' என வந்தது. நெஞ்சுப்பகுதியை, 'ஸ்கேன்' செய்தோம். நுரையீரல், 45 சதவீதம் பாதிக்கப்பட்டிருந்தது.
அபாயகரமான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டேன். ரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவு வெகுவாய் குறைந்திருந்தது. 'கொரோனா' என்னை ஏறக்குறைய பாதி விழுங்கியிருந்தது.
மருத்துவமனையின் தலைமை மருத்துவருக்கு வயது: 50 இருக்கும். என்னை முழுமையாக குணமாக்க அவர் முழுவீச்சில் போராட ஆரம்பித்தார். தினமும் அரை மணிநேரம் என்னிடம் தன்னம்பிக்கை தரும் வார்த்தைகள் பேசினார். கொரோனா நோயாளிகள், 60 பேரில் என்னிடம் மட்டும் விசேஷ கவனம் செலுத்தினார்.
தொடர்ந்து, 58 நாட்கள் சிகிச்சைக்கு பின் மீண்டு வந்தேன்.
என்னை டிஸ்சார்ஜ் செய்யும்போது, எனக்கு பார்பி பொம்மை, போர்ட்டபிள் ஆக்ஸிஜன் சிலிண்டர் மற்றும் ஆக்ஸிலேட்டர் பரிசளித்தார், தலைமை மருத்துவர்.
தன் போன் நம்பரை கொடுத்து, 'ஆக்ஸிஜன் குறையும் போதெல்லாம் சிலிண்டரில் இருக்கும் ஆக்ஸிஜனை சுவாசி. எப்ப எதுனாலும் எனக்கு போன் பண்ணு...' என்றார். எனக்கான பில்லில், 75 சதவீதத்தை தள்ளுபடி செய்தார்.
'இதெல்லாம் ஏன் செய்றேன் தெரியுமா... உன் அழகில் மயங்கி அல்ல. நான், கார்ட்டூன் படங்களின் தாசானுதாசன். நீ ஒரு அனிமேட்டர் என்பதால், உன் மேல் எனக்கொரு அபிமானம். நீ அனிமேட்டராக வேலை செஞ்ச நான்கு ஹாலிவுட் படங்களை பார்த்து பிரமித்திருக்கிறேன்... இன்னும், 100 ஆண்டுகளுக்கு அனிமேட்டராக பணிபுரிய வாழ்த்துகள்...' என்றார்.
நெகிழ்ந்து போனேன்.
டிஸ்சார்ஜ் ஆகி வந்த பின், அந்த தலைமை மருத்துவரை பற்றி விசாரித்தேன். உலகின் தலைசிறந்த, 10 நுரையீரல் நோயியல் மருத்துவர்களில் அவரும் ஒருவர் என்றனர். அவர் மனைவி, 10 ஆண்டுகளுக்கு முன் கர்ப்பப்பை புற்றுநோயில் இறந்து விட்டார். அவர்களுக்கு குழந்தை இல்லை. மொத்தத்தில் தனிமையில் வாடுகிறார், மருத்துவர்.
என் உயிரை காப்பாற்றியவருக்கு வாழ்க்கையில் மறக்கவே முடியாத பரிசு அளிக்க வேண்டும் என, முடிவெடுத்தேன். அது, அவரை திருமணம் செய்து கொள்வது தான்.
அவரை திருமணம் செய்து கொள்ள விரும்புவது, அம்மாவுக்கு தெரிந்து என்னை தாளித்து கொட்டி விட்டார்.
'அவரின் மருத்துவமனைக்கு இரண்டு லட்சம் நிதி கொடுப்போம் அல்லது மருத்துவமனைக்கு இரண்டு ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் வாங்கித் தருவோம். ஆனால், கல்யாண யோசனை மட்டும் வேண்டவே வேண்டாம்...' என்றார்.
தலைமை மருத்துவரிடம் மொபைலில் பேசும்போது, 'என் உயிரை காப்பாற்றி கொடுத்த உங்களை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன்...' என்றேன்.
'வாட் நான்சென்ஸ் யூ ஆர் டாக்கிங்... போனை வை. நீ என் மகள் மாதிரி...'
என, கொதித்தார்.
நானும் விடாமல் அவரை வலியுறுத்தி வருகிறேன். என் முடிவிலிருந்து துளியும் நான் மாறுவதாய் இல்லை. என் முடிவு சரிதானே... சொல்லுங்கள் அம்மா!
— இப்படிக்கு,
அன்பு மகள்.
அன்பு மகளுக்கு -
'கொரோனா' நடத்தும் திருவிளையாடல் களில் ஒன்று, நன்றிக் கடனுக்காக,
50 வயது விதவனை நீ திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுவது.
கோவிட்19 எனும் வைரஸ், மரபியல் பிறழ்வு கண்டு, புதுப்புது அவதாரங்களை எடுத்துள்ளது.
தலைமை மருத்துவர் பார்த்துக் கொண்ட, ஆயிரம் நோயாளிகளில், 970 பேர் பிழைத்துக் கொண்டனர்; 30 பேர் இறந்து விட்டனர். ஆயிரம் பேரிடம் இருந்தும் மருத்துவம் பார்க்க பணம் வாங்கியிருக்கிறார், மருத்துவர். அவருடைய மருத்துவம், உன்னை பாதி குணப்படுத்தியது என்றால், உன்னுடைய நோய் எதிர்ப்பு சக்தி, மீதி குணப்படுத்தியது.
மருத்துவர் குணப்படுத்தியவர்களில் திருமணமாகாத இளம் பெண்களும் இருந்திருப்பர். அவர்களும் அவரை திருமணம் செய்ய முன் வந்தால், அவர் கதி அதோகதிதான். குணப்படுத்தியதால் அவரை மணந்து கொள்கிறாய் சரி; மீண்டும் உனக்கு கொரோனா வந்தால் அவரை விவாகரத்து செய்து விடுவாயா?
உனக்கு சிகிச்சை அளித்த மருத்துவர், 30 வயதை தாண்டாத பிரம்மசாரி. அவரும் உன் மீது காதல் வயப்பட்டு விட்டார். நீயும் அவர் மீது காதல் வயப்பட்டு விட்டாய். திருமணம் செய்து கொள்ளலாமா என கேட்டால், தாராளமாக திருமணம் செய்து கொள் என்பேன்.
உன் முடிவை ஆறு மாதங்களுக்கு பின் மறுபரிசீலனை செய். திருமண முடிவை கைவிட்டு விடுவாய்.
உனக்கு வயதிலும், பதவியிலும் சமமான வரனை பெற்றோரை பார்க்க சொல். உன் உயிரை காப்பாற்றிய மருத்துவர் தலைமையில் திருமணத்தை நடத்து. அதன் பின், மருத்துவரின் கால்களில் விழுந்து ஆசிர்வாதம் பெறு.
எக்காலத்திலும் உணர்ச்சிபூர்வமான முடிவுகளை எடுக்காதே; மாபெரும் தோல்விகளை சந்திப்பாய். அறிவுப்பூர்வமான முடிவுகளை எடு; நிரந்தர வெற்றிகளை குவிப்பாய்.
வாழ்த்துகள்!
— என்றென்றும் தாய்மையுடன்,
சகுந்தலா கோபிநாத்.