முன்கதை சுருக்கம்: கோல்கட்டா காளி கோவிலில் விக்ரமை பார்த்தாள், அர்ச்சனா. சலங்கை ஒலி பிடிக்காமல் போனதற்கான காரணத்தை கேட்க, அதற்கு ஒரு கதையை கூறினான், விக்ரம் -
ஆறுதலாக கையை பற்றிய அர்ச்சனாவை, ஓரக்கண்ணால் பார்த்தான், விக்ரம்.''கோர்ட் - கேஸ்ன்னு பல மாசம் ஓடிப்போச்சு. கொஞ்ச நாள்ல எங்க அப்பா, அம்மாவும் போயிட்டாங்க. அக்காவோட உடை, நகைகள், சலங்கை எல்லாத்தையும் ஒரு பெட்டியில போட்டு பரண் மேல வெச்சிட்டேன். அதை மறுபடியும் திறக்கவே பயம் எனக்கு.''சலங்கை சத்தம் எங்கேயாவது கேட்டா எனக்கு அக்காவை பத்தியும் அந்த விபத்தும் ஞாபகம் வந்துடும். முடிஞ்ச வரைக்கும் கட்டுப்பாடா இருப்பேன். அடக்க முடியாத போது உணர்ச்சி வசப்பட்டிடுவேன். அன்னிக்கு அப்படி தான் ஆகிட்டேன். ஸாரி... நீங்க கேட்டதால் சொன்னேன். இல்லைன்னா இதெல்லாம் என் மனசோட இருக்கும்.''அவனுடைய கைகளை தன் இரண்டு கைகளாலும் பிடித்துக் கொண்டாள், அர்ச்சனா.''போலாமா?'' எழுந்தான், விக்ரம். ''உங்களுக்கு ஆட்சேபனை இல்லைன்னா நீங்க என் வீட்டுல ஒரு அறையில தங்கிக்கலாம்; பெரிய வீடு. உங்க மனசுக்கு அமைதியா இருக்கும். எனக்கும் ஆறுதலா இருக்கும்,'' என்றாள், அர்ச்சனா.''உங்களுக்கு எதுக்கு சிரமம்?'' ''அதெல்லாம் ஒண்ணும் இல்லை.''''சரி,'' என, அரைகுறையாக சம்மதிப்பது போல் சொன்னான்.''நன்றி.''''நீங்க ஏன் மேடம் கோல்கட்டாவுல இருக்கீங்க?''''படிப்பு முடிஞ்சு வேலைக்காக வந்தேன். வந்த ஆறு மாசத்துல ரூட்டே மாறிப்போய் நடனம் கத்துக்குடுக்க ஆரம்பிச்சிட்டேன்.''''இன்னொரு விஷயம். நான் உங்க வீட்டுல தங்கறதுனால யாருக்காவது டிஸ்டர்பன்ஸா இருக்குமா?''''நான் மட்டும் தான் இங்க இருக்கேன். அப்பா - அம்மா சென்னையில் இருக்காங்க,'' என்றாள் சிரித்தபடி.''ஓஹோ,'' தெரியாத மாதிரி கேட்டுக் கொண்டான்.''நீங்க பேசும்போது நடுவுல மேடம்ன்னு கூப்பிட்டிங்களே, அது தேவையா?'' ''வேற எப்படி?'' ''அர்ச்சனான்னு கூப்பிடலாம்.''''அப்ப நீங்களும் அதே மாதிரி என்னை கூப்பிடணும்.''''அர்ச்சனான்னா?'' இருவரும் சிரித்தனர்.''என் பெயரை சொல்லி கூப்பிடணும்.''''உங்க பேர் என்னன்னு சொல்லலியே?''''விஜய்!''
மாடியில் இருந்த மூன்று படுக்கையறை கொண்ட அந்த வீட்டில், விக்ரமுக்கு ஒரு அறையை ஒதுக்கி தந்தாள்.மிகவும் மரியாதையாக, தான் உண்டு தன் வேலை உண்டு என்ற மாதிரி நடந்து கொண்டான்.கொஞ்சம் கொஞ்சமாக அவனை நெருங்கி போகிறோம் என அர்ச்சனாவுக்கு புரிந்தது.தேவைப்பட்டால் மட்டுமே பேசுவது, வரம்பு மீறாமல் நடந்து கொள்ளும் குணம், அறையிலேயே எழுதியபடி இருப்பது, வீடு துடைத்து தருவது, துணிமணிகள் மடித்து வைப்பது என, அவனுடைய செய்கைகள் அவளுக்கு அவனைப் பற்றி உயர்ந்த அபிப்பிராயத்தை ஏற்படுத்தியது.''ஆமாம். ரொம்ப நாள் நடனம் நடனம்னே இருந்துட்டேன். வாழ்க்கையில வேற சந்தோஷமான விஷயங்கள் இருக்குங்கறதை கவனிக்காம விட்டுட்டேன். அதனால இனிமே கொஞ்சம் சலங்கைக்கு ஓய்வு குடுக்க போறேன்,'' என்று வராண்டாவில் போனில் பேசிக் கொண்டிருந்த அர்ச்சனாவை ஓரக்கண்ணால் கவனித்தான், விக்ரம். காதில் விழுந்தாலும் கவனிக்காதது போல் வெளியே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான்.கிட்டத்தட்ட இரண்டு மாதம் அவனோடு கோவிலுக்கு போனாள்; 'ஷாப்பிங்' போனாள்; ஒரே குடையில் மழையில் நனைந்து வந்தாள். அவனோடு இருக்கும் ஒவ்வொரு கணமும் அவளுக்கு பெருமையாக இருந்தது.நீங்க, வாங்க என்பதெல்லாம் நீ, வா என ஆனது.
அன்று அர்ச்சனாவும், விக்ரமும் கால்டாக்ஸியில் வந்திறங்கியபோது, எதிர் வீட்டு ஆன்ட்டி பார்த்தாள்.''அர்ச்சனா!''''ஆன்ட்டி?''''அது யாரு, உன்னோட தங்கி இருக்கறது?'''இவளுக்கு எப்பவுமே வம்பு தான்...' என எண்ணியபடி, ''அது என்னோட லவ்வர்,'' என்றாள்.அர்ச்சனாவை திரும்பி பார்த்தான், விக்ரம்.''எப்ப கல்யாணம்?''''தெரியல ஆன்ட்டி. இப்போதைக்கு லிவிங் டுகெதர்!''உள்ளே போய் விட்டாள், ஆன்ட்டி. புரியாத மாதிரி திகைத்து நிற்கும் விக்ரமை பார்த்து கடகடவென சிரித்தாள், அர்ச்சனா.வீட்டுக்குள் போனதும், ''பாவம் அந்த ஆன்ட்டி... அவங்ககிட்ட ஏன் பொய் சொன்ன?'' என்றான்.''நான் பொய் சொல்லலியே,'' என்றாள்.எதுவும் பேசாமல் இருவரும் ஒருவரையொருவர் பார்த்து கொண்டிருந்தனர்.அவள் மனதில் சிம்மாசனம் போட்டு உட்கார்ந்து விட்டான், விக்ரம். இவ்வளவு நாள் உயிர் மூச்சாக இருந்த நடனத்தை விட, இவன் மீதிருக்கும் காதல் அவளுக்கு பல மடங்கு அதிகமாக இருந்தது.ஒருநாள், ஹடிபகன் மார்க்கெட்டில் அர்ச்சனாவும், விக்ரமும், 'ஷாப்பிங்' செய்து கொண்டிருந்த போது, பழைய வீட்டு உரிமையாளர் எத்திராஜ் நடந்து போய்க் கொண்டிருந்தார்.''அர்ச்சனா... அங்க பாரு யாருன்னு?''அவள் கவனித்து விட்டு, ''அங்கிள்!'' என்றாள். அவர் நின்றார். விக்ரமை இழுத்து அவர் இருக்கும் பக்கம் ஓடினாள், அர்ச்சனா.''அர்ச்சனா... எப்படிம்மா இருக்க?''''நல்லா இருக்கேன் அங்கிள்.''''உங்களுக்கு தெரியாது இல்லை. அங்கிள், நாங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்க போறோம்,'' என்று விக்ரம் தோள் மீது கையை போட்டாள்.ஒரு கணம் அவருக்கு பேச்சு வரவில்லை.''ஆமா... தேதி குறிச்சிட்டு சொல்றோம். நீங்க அவசியம் வரணும்,'' என்றான், விக்ரம்''ஆங்... கண்டிப்பா வரேன்.''அர்ச்சனாவும் விக்ரமும் சிரித்துக் கொண்டே கிளம்பினர். 'சின்ன வயசு பசங்களை நம்பி பஞ்சாயத்து பண்றேன்னு போகக் கூடாது. நம்ப மூஞ்சில கரிய பூசிடுவாங்க...' என்று நினைத்தபடி, அவர்களை திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டே போனார், எத்திராஜ்.
விக்ரம் தான், தன் உலகம் என்ற நினைப்பை அர்ச்சனா மனதில் ஏற்றிய பின் ஒருநாள்...தன்னுடைய துணிமணிகளை எடுத்து பெட்டியில் வைத்துக் கொண்டிருந்தான். கோபமாக உட்கார்ந்திருந்தாள், அர்ச்சனா.''இப்போ எதுக்கு கோவிச்சுக்கிட்டிருக்க? நான் தான் சொன்னேன்ல, என் வேலையை பத்தி.''''அதுக்காக திடுதிப்னு இப்படியா கிளம்புவ... ஒவ்வொரு நிமிஷமும் உன் கூடவே இருந்துட்டு இனிமே எப்படி நான் தனியா இருப்பேன்?''அழுகையும், கோபமுமாக எழுந்து வந்து அவன் நெஞ்சில் குத்தினாள். ''நான் ஏன் உன்னை பார்த்தேன். நாம் சந்திக்காமலேயே இருந்திருக்க கூடாதா?''அவளை தேற்றியவன், ''எப்போ வேணும்னாலும் போன்ல பேசிக்கிட்டே இருப்போம்,'' என்றான், விக்ரம்.கண்களை துடைத்து, ''ம்... சரி வா, 'செல்பி' எடுத்துப்போம்,'' என்றாள்.''அர்ச்சனா... ப்ரியா சம்பவத்துக்கு அப்பறம் போட்டோ, 'செல்பி' எதுவுமே கிடையாது.'' ''ஸாரி விஜய்! என்னை மறந்திடாதே! நீ இல்லைன்னா நான் இருக்கறதுல அர்த்தம் இல்லாம போயிடும்.'''சபாஷ்...' என மனதிற்குள் நினைத்தபடி, அவள் கண்களை துடைத்தான்.
அர்ச்சனாவிடமிருந்து விடைபெற்று டாக்ஸியில் ஷாலிமார் ரயில்வே ஸ்டேஷனை நோக்கி போனான்.நள்ளிரவில் புறப்பட்ட வண்டி, 40 மணி நேரம் கழித்து தான் விக்ரம் போக வேண்டிய இடத்தை சென்றடையும்.'அடுத்த விஷயமும் சுமுகமா முடியணும்...' என்று நினைத்தபடி பெட்டியிலிருந்து ஒரு புகைப்படத்தை எடுத்தான்.சுருட்டை முடி, அழகான குண்டு முகம், கன்னத்தில் குழி விழ சிரித்தபடி ஒரு பெண்.புகைப்படத்தின் பின் பக்கம். 'ஆராதனா...' என எழுதியிருந்தது.- தொடரும்கோபு பாபு