ஒவ்வொரு நாட்டவரும் ஒவ்வொரு வகை தடிமனில் முருங்கைக்காய்களை விரும்பி வாங்குவர். அதற்கேற்ற பக்குவத்தில் எனது தோட்டத்திலும் மற்ற விவசாயிகளிடமும் வாங்கி வெளிநாடுகளுக்கு அனுப்புகிறேன் என்கிறார் மதுரை உசிலம்பட்டி குஞ்சாம்பட்டியைச் சேர்ந்த விவசாயி பாண்டியன். அவர் கூறியதாவது:
3 ஏக்கரில் முருங்கை, ஒன்றரை ஏக்கரில் மல்லிகை, தலா ஒரு ஏக்கரில் கத்தரி, வெண்டை, அரை ஏக்கரில் பச்சை மிளகாய் பயிர் செய்கிறேன். எங்கள் தோட்டத்தில் முருங்கை மரங்களாக வளர்க்கிறோம். மரத்து காய்கள் தான் ருசியாக இருக்கும். செடி காய்கள் அவ்வளவு ருசிக்காது. ஆரம்பத்தில் மற்ற வியாபாரிகளிடம் தான் காய்களை கொடுத்து விற்றோம். நாமே ஒன்று சேர்ந்தால் என்ன என்று யோசித்தேன். அருகிலுள்ள முருங்கை விவசாயிகளை ஒருங்கிணைத்தேன்.
தற்போது உசிலம்பட்டி முதல் வருஷநாடு வரையுள்ள 50 விவசாயிகளிடம் காய்களை வாங்குகிறேன். சீசன் போது தினமும் 20 - 40 டன் காய்கள் வரை கிடைக்கும். உள்ளூரில் மதுரை, ஒட்டன்சத்திரம், திருநெல்வேலி, கோயம்பேடு மார்க்கெட்டுக்கும், பெங்களூரு, மும்பை, விஜயவாடா, ஹைதராபாத், புனேவுக்கும் தினமும் அனுப்புகிறேன்.
ஒவ்வொரு ஊர்க்காரர்களுக்கும் காய் அனுப்புவது வேறுபடும். மதுரை மற்றும் கனடா நாட்டுக்காரர்கள் பெருவெட்டு காய்களை அதாவது சதைப்பிடிப்பான கட்டை விரல் தடிமனுள்ள காய்களையே விரும்புவர். சிலர் காம்புடன் காய்களை கேட்பார்கள். ஓலைப்பாய், சாக்குப்பை மற்றும் பெட்டிகளில் அனுப்புகிறேன். கோல்கட்டாவுக்கு சுண்டுவிரலை விட பிஞ்சாக உள்ள காய்களையே அனுப்புவோம். சப்பாத்தி கூட்டுக்கு இந்த காய்களை விரும்பி சமைப்பர்.
பெரும்பாலும் ஆண்டிப்பட்டி மரத்து முருங்கைக்காய்களை தான் அதிகம் விரும்பி வாங்குவர். ஏற்றுமதிக்கு இந்த ரக காய்களே விலைபோகும். ஜெயங்கொண்டம், பெரியகுளம் ரகங்கள் எல்லாம் செடி முருங்கைக்காய்கள்.
என்னதான் பயிரிட்டு பார்த்து பார்த்து வளர்த்து நல்ல விளைச்சல் கண்டாலும் அதிர்ஷ்டம் இருந்தால் தான் சந்தையில் விலைபோகும். சில நேரங்களில் கிலோ ரூ.75 - 100 வரை போகும். விளைச்சல் அதிகமானால் ரூ.15 - 20க்கு கேட்க கூட ஆளிருக்காது. இதுதான் விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பை தருகிறது. எனவே மதுரை, ஒட்டன்சத்திரம், நெல்லை, சென்னை மார்க்கெட் விலை நிலவரத்தை தினமும் பின்பற்றி அதற்கேற்ப விவசாயிகளிடம் விலை வைத்து வாங்கி அனுப்புகிறேன். இது விவசாயிகளாக செய்த முயற்சி.
காய்களை அன்றே பறித்து அன்றே அனுப்பி விடுவோம். சென்னைக்கு 7 மணி நேரத்தில், பெங்களூருக்கு 8 மணி நேரத்தில் சென்று விடும். விஜயவாடாவுக்கு 24 மணி நேரம், மும்பைக்கு 36 மணி நேரத்திற்குள் சென்று விடும். ஏற்றுமதிக்கு எனில் முதல்நாளே முன்பதிவு செய்து தயாராக இருப்போம். அதனால் ஒரே நாளில் காய்களை அனுப்ப முடிகிறது.
தினமும் ஒரு டன் காய்கள் சிங்கப்பூர், கனடாவுக்கு அனுப்புகிறேன். நேரடியாக ஏற்றுமதியில் ஈடுபடவில்லை. தற்போது ஏஜன்டாக செயல்படுகிறேன். படிப்பறிவு இல்லாததால் ஏற்றுமதி தொழில்நுட்பம் இன்னும் புரியவில்லை. மதுரையில் முருங்கைக்கான ஏற்றுமதி மண்டலம் அமைய இன்னும் ஒரு மாதமாகும். நன்றாக தெரிந்து கொண்டபின் விவசாயிகளை ஒருங்கிணைத்து குழுவாக்கி ஏற்றுமதியாளராக மாறுவேன். மற்ற விவசாயிகளையும் ஏற்றுமதியாளராக மாற்றுவேன் என்றார்.
தொடர்புக்கு: 98657 21255.
எம்.எம்.ஜெயலெட்சுமி மதுரை