மானாவாரி நிலங்களில் கரிசல் மண் பூமியில் நவம்பரில் கொத்துமல்லி சாகுபடி நடைபெறுவது வழக்கம்.
கொத்துமல்லி விதைகளில் 'லினலுால்' எனப்படும் ரசாயனம் இருப்பதால் முளைப்புத் திறனை பாதிக்கிறது. இதனால் விதைகள் முளைப்பது தாமதமாகிறது. உடைக்காத முழு விதையிலிருந்து இரண்டு செடி இருக்கும். சொரசொரப்பான கட்டையைக் கொண்டு உரசி உடைத்து விதைக்கும் போது செடிகளுக்கு இடையே இடைவெளி கூடும். மகசூல் அதிகரிப்பதோடு விதையும் திரட்சியாக இருக்கும். உடைத்து விதை துாவுவது நல்லது. முழு விதையோ உடைத்த விதையோ துாவுவதற்கு முதல் நாள் சாக்கில் கட்டி தண்ணீர்த் தொட்டியில் 12 மணிநேரம் வரை அமிழ்த்த வேண்டும். நீரில் ஊறும் போது விதைகளில் உள்ள ரசாயனம் நீங்கி முளைப்புத்திறன் அதிகரிக்கும். மறுநாள் காலையில் உலர வைத்து விதைக்க வேண்டும்.
கொத்துமல்லி செடி அதிக ஈரப்பதத்தை தாங்காது. அதிக மழை பெய்து நிலத்தின் மேற்பரப்பு இறுகி விட்டால் செடியானது முளைத்து வெளியே வராமல் சிதைந்து விடும். எனவே நவம்பர் இரண்டாம் வாரத்திற்கு மேல் மழை ஓய்ந்த பின்னர் விதைப்பது நல்லது. நாள்பட்ட கொத்துமல்லி விதைகள் முளைக்காது என்பதால் விதைப் பரிசோதனை செய்தபின் விதைப்பது நல்லது.
ராமசாமி, சரண்யா,
வேளாண்மை அலுவலர்கள் விதைப்பரிசோதனை நிலையம்,
விருதுநகர்
99528 88963