பா - கே
ஒரு மாலை வேளை...
சென்னை மேடவாக்கத்தில் உள்ள தினமலர் நாளிதழ் அச்சாகும் பிரின்டிங் பிரிவுக்கு செல்ல வேண்டியிருந்தது. அண்ணாசாலை பேருந்து நிறுத்தத்திலிருந்து, பஸ்சில் கிளம்பினேன்.
சென்னையின் வழக்கமான மாலை நேர போக்குவரத்து நெரிசலில் மெதுவாக சென்றது, பஸ்.
கிண்டி தாண்டி, ஜி.எஸ்.டி., சாலையில் செல்லும்போது, வாகன நெரிசல் இன்னும் அதிகமானது. பல்லாவரம் அடுத்து, குரோம்பேட்டை மேம்பாலத்தின் கீழ் பஸ் சென்றபோது, வாகன நெரிசலில் நகர முடியாமல் அப்படியே நின்றது.
பாலத்தின் கீழ் பிரதான சாலையை ஒட்டி அமைந்திருக்கும் சர்வீஸ் சாலை ஓரம் சில வியாபார நிறுவனங்கள் விளக்கொளியில் மின்னிக் கொண்டிருந்தன.
அந்நிறுவனங் களுக்கு செல்ல வேண்டி மேம்பாலத்தின் கீழ், இரு துாண்களுக்கு இடையே வழி ஏற்படுத்தியிருக்க, இரும்பு சென்டர் மீடியன் தடுப்புகளை சாலையின் குறுக்காக நிறுத்தியிருந்தனர்.
ஏற்கனவே, நெரிசலில் சிக்கி, கியர் மாற்றி மாற்றியும், பிரேக் அடித்தும் ஏக கடுப்பிலிருந்த பஸ் டிரைவர், இதைப் பார்த்ததும் மேலும் கடுப்பானார்.
அப்போது, பின்புறம், 108 ஆம்புலன்ஸ் ஒன்று வழி கேட்டு அலறியது. பார்த்தார் டிரைவர், வழியை மறித்து இருந்த இரும்பு தடுப்பின் மீது மோதி, சிறிது துாரத்துக்கு இழுத்துச் சென்றார். தரையோடு இரும்பு உரசியதில் ஏற்பட்ட நாராசமான சத்தம் கேட்ட, மற்ற வாகன ஓட்டிகள் சற்று அதிர்ந்து, திரும்பி பார்த்தபடி முன்னேறிச் சென்றனர்.
அதுவரை கண்ணுக்கு எட்டிய துாரம் வரை தென்படாத போக்குவரத்து காவலரின் ஜீப் ஒன்று, 'உய்... உய்...' என்று சத்தம் எழுப்பியபடி இண்டு இடுக்குகளில் நுழைந்து, பஸ்சின் முன் வந்து நின்றது.
இதற்கிடையில், பஸ்சின் கண்டக்டர், டிரைவரிடம் வந்து, 'ஏம்பா, வம்பை விலைக்கு வாங்கற... வலதுபுறம் சற்று ஒடித்து வரக்கூடாது. இப்பப்பாரு நாட்டாமைக்காரங்க வந்துட்டாங்க...' என்று அங்கலாய்த்தார்.
'நீ சும்மா இரு --- (பெயர்) நான் பார்த்துக்கறேன். அவனவன் அல்லாடிட்டு வர்றான், வந்துட்டாங்க --- ----' கெட்ட வார்த்தை உதிர்த்தவாறு பஸ்சை நிறுத்தினார்.
சட்டையின் முதல் பட்டனை கழட்டி, காலரை துாக்கி முதுகு பக்கம் தள்ளி, ஒரு கையை, 'ஸ்டியரிங்' மீது ஊன்றி, மற்றொரு கையை தன் சீட்டின் பின்புறம் போட்டபடி, 'கெத்' ஆக போஸ் கொடுத்து அமர்ந்தார், டிரைவர்.
ஜீப்பிலிருந்து இறங்கி வந்த அதிகாரி போலிருந்த ஒரு காவலர், 'ஏம்பா... பஸ் ஓட்டறியா அல்லது விமானம் ஓட்டறதா நினைப்பா... தடுப்பை இடித்ததோடு, நீ பாட்டுக்கு நிற்காம அதை இழுத்துட்டு வேற போற...' என்று அதிகார தொனியில் கேட்டதும், டிரைவரின் கோபம் உச்சத்துக்கு சென்றது.
'நீயே பார்க்கற இல்ல... இது செம, 'டிராபிக்' ஆன இடம். சாலையின் இடது புறம் இங்க திரும்பவே கூடாது. துாணுக்கு இடையில் வழி ஏற்படுத்தியதோடு, தடுப்பை வேற வைத்துள்ளனர். சர்வீஸ் சாலைக்கு செல்ல, அரை கி.மீ., துாரம் சென்று சிக்னலை சுற்றி திரும்பி வரவேண்டியது தானே. நேராக செல்ல இருப்பவர்கள் ஒதுங்கி இடம் கொடுக்கணுமோ!
'இரண்டாவது... ஆம்புலன்ஸ் வரும்போது, இடது பக்கம் ஓரம் கட்டினால் தானே அவங்க போக முடியும். ஆம்புலன்ஸ் அலறியது உமக்கு காதில் விழல; தடுப்பை இழுத்த சத்தம் மட்டும் கேட்டதோ!
'இத பாரு... நீயும் கவர்மென்ட் ஆளு, நானும் அதேதான். நீ எங்க போய் புகார் செய்யணுமோ செய்துக்க. இப்பவே லேட்டாயிடுச்சு... முன்னாடி நிறுத்தியிருக்கிற ஜீப்ப எடுக்க சொல்றியா, இல்லை அதையும் மோதி துாக்கட்டுமா?' என்று ஏகத்துக்கு எகிறினார், டிரைவர்.
எதுவும் பேச முடியாமல் முணுமுணுத்தவாறு அங்கிருந்து நகர்ந்தார், அந்த அதிகாரி.
'டிராபிக்கை கிளியர் பண்ண வக்கில்ல... வந்துட்டானுங்க மாதிரி...' என்று கூறியபடி, கியர் மாற்றி, உருமலுடன் பஸ்சை, 'ஸ்டார்ட்' செய்தார். ஒரு குலுங்கு குலுங்கியபடி பஸ் கிளம்பியது.
'அப்பாடா...' என்று பெருமூச்சு விட்டபடி, 'தலைநகரில் எத்தனை மேம்பாலங்கள், சுரங்க பாதைகள் அமைத்தாலும், போக்குவரத்து நெரிசல் மட்டும் குறைய மாட்டேங்குதே...' என்று நினைத்துக் கொண்டேன்.
ப
கார்த்திகேயன் என்பவர் எழுதிய, அருட்செல்வர் ஏ.பி.என்., என்ற நுாலை, முன்பு எப்போதோ சினிமா பொன்னையா என்னிடம் படிக்க கொடுத்திருந்தார். அதில் ஒரு பகுதி:
திரைப்படத்தில், தான் நடிக்கும் பாத்திரத்துக்கு ஏற்ப, முழு ஈடுபாட்டுடன் நடிக்கக் கூடியவர், சிவாஜி கணேசன். அதில், அவர் சிறிதும் கவுரவம் பார்க்க மாட்டார். தான் பெரிய நடிகர் என்ற தோரணையும் அவருக்கு கிடையாது.
திருமால் பெருமை திரைப்படத்தில், திருமங்கை மன்னனாக நடிப்பார், சிவாஜி கணேசன். அவர், திருமாலுக்கு கோவில் கட்டும் திருப்பணியை மேற்கொண்டிருப்பார்.
கோவில் கட்டுவதற்கு போதிய பொருளில்லாததால், கொள்ளைக்காரனாக மாறி, கொள்ளை அடிப்பார். அவரை சோதனை செய்வதற்காக, திருமாலே மணமகனாக மகாலட்சுமியுடன் வருவார்.
திருமங்கை மன்னனான சிவாஜி கணேசன், அவரிடமுள்ள பொருட்களை எல்லாம் கொள்ளை அடிப்பார். இறுதியாக, அவரது காலிலுள்ள மிஞ்சியை கழட்டிக் கொடுக்கச் சொல்வார்.
அப்போது, மணமகன் வடிவில் வந்திருக்கும் திருமால், 'மிஞ்சியிருக்கும் அந்த மிஞ்சியையும் நீயே கழட்டிக் கொள்...' என்று சொல்வார். அதன்படியே, திருமங்கை மன்னன் அந்த மிஞ்சியை காலிலிருந்து கழட்ட முயற்சிப்பார்; கழட்ட முடியாது.
அந்த காட்சியில், சிவாஜி கணேசன், திருமாலாக நடிக்கும் சிவகுமார் காலின் விரலை, அவரது வாயில் வைத்து பல்லால் கடித்து கழட்ட வேண்டும். சிவகுமார் கால் விரலை கடிப்பது போல் சிவாஜி நடிப்பாரா என்ற சந்தேகம் இயக்குனருக்கு வந்தது.
ஒருவேளை, சிவாஜி, சிவகுமாரின் கால் விரலை கடிக்க மாட்டேன் என்றால், கையிலுள்ள ஆபரணத்தை கழட்டுவது போல் அக்காட்சியை படம் பிடிக்கலாம் என்றும் யோசித்து வைத்திருந்தார்.
காட்சியை பற்றி சிவாஜியிடம் சொன்னதும், உடனே, ஒப்புக் கொண்டார். அதுமட்டுமின்றி, அந்த படப்பிடிப்பு நடக்குமிடம் திருவடீஸ்வரம் என்ற பெருமாள் கோவில் அமைந்த மலை கிராமம். அவ்வளவு சுத்தமாகவும் இல்லாமல் இருந்தது.
சிவகுமாரை அழைத்து, 'கவுண்டரே, காலில் எதையும் மிதிச்சுட்டு வந்திடாதே, சுத்தமா வைச்சுக்கோ. நான், உன் காலை வாய் வைத்து கடிக்கணும்...' என்றார், சிவாஜி.
அதன்படி, திருமங்கை மன்னன், மணமகனான திருமாலின் காலிலுள்ள மிஞ்சியை கடிப்பது போல் படம் பிடிக்கப்பட்டது.