மங்களா நிவாஸ்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 நவ
2021
00:00

ஒரு வழியாக பூர்வா, விக்னேஷ் இருவரையும் பள்ளி பேருந்தில் ஏற்றி பெருமூச்சு விட்டாள், சரஸ்வதி. ஒரு நாளின் மிகப்பெரிய சுமையை இறக்கி வைத்த உணர்வு.
குழந்தைகள் இருவரையும் விடிகாலையில் எழுப்புவதில் சிரமம் இல்லை; குளிக்க வைத்து பாலைக் குடிக்க மன்றாடும்போது கூட அவ்வளவு அயர்வு தெரிவதில்லை. ஆனால், பஸ் டிரைவர் பொறுமையில்லாமல், 'ஹார்ன்' அடிக்கும் முன், அவர்களை நிறுத்துவதுதான் சரஸ்வதிக்கு அதிக கடினமாகத் தெரிந்தது.
பிரைவேட் கம்பெனியில் இன்ஜினியராக இருக்கும் கணவர் சீதாராமனுக்கு இங்கு மாற்றலாகி ஒரு மாதம் கூட ஆகவில்லை. இனிமேல் பிரமோஷனில் வேறு இடத்திற்குப் போவதில்லை என்பதால், ஒதுக்குப்புறத்தில் ஒரு பெரிய வீட்டையும் வாங்கிப் போட்டனர். மிகவும் கஷ்டப்பட்டு இரண்டு குழந்தைகளையும் ஒரே பள்ளிக்கூடத்தில் சேர்த்திருந்தனர். கொஞ்சம் துாரம் தான்.
சீதாராமன் ஆபீஸ் வேலையாக வெளியூர் சென்றிருந்தான். மாதத்திற்கு, 10 நாளாவது வெளியூர் பயணம் இருக்கும். சரஸ்வதியின் வயதான பெற்றோர் இங்கு வர சம்மதிக்கவில்லை. மாமனார் - மாமியார் உயிரோடு இல்லை.
வங்கியில் வேலை செய்து வந்த சரஸ்வதி, எவ்வளவு நாட்கள்தான் விடுப்பில் கழிக்க முடியும்... கொஞ்ச நாட்கள் பார்த்துவிட்டு, வேலையை விட்டு விடுவதே உசிதம் என்று தோன்றியது.
காலையில் குழந்தைகளுக்கு சமைத்ததே போதும் என்று தோன்றவே, வீட்டை ஒழிக்கத் துவங்கினாள்.
ஸ்டோர் ரூமில்தான் குப்பை அதிகம். வீட்டை விற்றவர் பாதி சாமான்களை அங்கு விட்டுச் சென்றிருந்தார். அவர்கள் குடும்பத்தின் பழைய புகைப்படங்கள், மங்களா நிவாஸ் என்ற பெயர் பலகை... ஒருவேளை அந்த வீட்டிற்கு பெயர் வைக்க நினைத்திருக்கலாம். அந்த பலகையை வாசற் கதவில் பதிப்பதற்கு முன்பே வீட்டை விற்று விட்டனரோ...
அழைப்பு மணி ஒலித்தது. வெளியே எட்டிப் பார்த்தாள். செக்யூரிடிக்கு ஆள் சொல்லியிருந்தனர். ஏஜென்சி லெட்டரை காண்பித்தான், வந்தவன். நல்லவேளை, சரஸ்வதிக்கு கொஞ்சம் மூச்சு வந்தது. அவன் உட்கார வாசலில் ஒரு ஸ்டூலை வைத்தாள்.
சுகந்த காற்று வீசியது. மழைக்காலம்.
மாடிக்கு சென்று பால்கனியில் அமர்ந்தாள். அக்கம் பக்கத்தில் அதிக வீடுகள் இல்லை. தோட்டம் போடுவதற்கு நிறைய இடம் இருந்தது. தண்ணீர் பிரச்னை இருக்குமா என்று தெரியவில்லை. சரஸ்வதியின் எண்ணம் போல அவள் பார்வையும் நாலாபுறமும் சுழன்று கொண்டிருந்தது.
சற்று தொலைவில், ஒரு அடர்ந்த மரம். அதன் நிழலில் ஒரு வயதான பெண்மணி நின்று கொண்டிருந்தார். முதலில் சாதாரணமாகத்தான் தெரிந்தது. பார்வையை வேறுபுறம் திருப்பி மறுபடியும் அந்த மரத்தடியை நோக்கினாள், சரஸ்வதி. அந்த முதியவள் பார்வை சரஸ்வதி வீட்டில், அதுவும் பால்கனி பக்கமே நிலைத்திருந்தது. வயது, 70 இருக்கலாம்.
எழுந்து விரைவாக சென்று பால்கனி கதவை மூடினாள். ஜன்னல் வழியே தெரியாதபடி நின்று பார்த்தாள். அந்த பெண்மணி தன் பார்வையை அகற்றவே இல்லை.
லாரியிலிருந்து பொருட்களை இறக்கி வைக்கும்போதும் தெருக்கோடியிலிருந்து ஓரிருவர் பார்த்துக் கொண்டிருந்தனர். அந்த ஒரு சிலரில் இந்த பெண்மணியையும் பார்த்த நினைவு இப்போது சரஸ்வதிக்கு வந்தது.
கீழே வந்து அமர்ந்தாள். கணவன் வரும் வரை மேலே போகாமல் இருப்பதே நல்லது என்று தோன்றியது. மாலையில், பஸ் ஸ்டாப்பிலிருந்து குழந்தைகளை வாட்ச்மேனே அழைத்து வந்து விட்டான்.
இரண்டு நாட்களில் கணவன் சீதாராமன் திரும்பியதும், மூச்சு விடாமல் அந்தக் கிழவியை பற்றி ஒப்பித்தாள், சரஸ்வதி.
சீதாராமனுக்கும் கவலை தொற்றியது.
''இரண்டொரு நாள் பார்ப்போம். அவள் திரும்பவும் வந்து நின்றால், போலீசுக்கு சொல்லி விடலாம்,'' என்றான்.
ஞாயிற்றுக் கிழமை -
பால்கனியில் அமர்ந்து பேப்பர் படித்துக் கொண்டிருந்தான், சீதாராமன். காபி டம்ளரை கணவன் முன் வைத்த சரஸ்வதியின் பார்வை, அவளை அறியாமல் முக்கிலிருந்த மரம் அருகே சென்றது. அந்த கிழவி, அவர்கள் பால்கனியைப் பார்த்தபடி நின்று கொண்டிருந்தாள்.
ஈனஸ்வரத்தில், ''என்னங்க?'' என்றாள், சரஸ்வதி.
உடனடியாகப் புரிந்து கொண்டான், சீதாராமன்.
''விடிகாலையிலேயே வந்து விட்டாளா... இரு, நேரவே போய் கேட்கறேன்,'' சட்டையை மாட்டிய கணவனிடம், ''வாட்ச்மேனையும் அழைச்சுகிட்டு போங்க,'' என்றாள்.
தெருக்கோடியில் அவர்கள் அந்த பெண்மணிடம் ஏதோ பேசிக் கொண்டிருப்பது தெரிந்தது. பால்கனியில் நின்று பதைபதைப்புடன் பார்த்துக் கொண்டிருந்தாள், சரஸ்வதி.
சிறிது நேரத்தில் அந்த பெண்மணியை வீட்டுக்கு அழைத்து வந்தனர்.
சரஸ்வதிக்குப் பொறுக்கவில்லை.
அந்த பெண்மணியை வெளியிலேயே நிறுத்தி, உள்ளே வந்தான், சீதாராமன்.
''சரஸ்வதி... அந்த அம்மா வேற யாரும் இல்லை; இந்த வீட்டு பழைய சொந்தக்காரரோட பெண்டாட்டி தான்.''
சரஸ்வதிக்கு அதிர்ச்சியாக இருந்தது.
''ஆனா, யாரோ சந்தானம் என்பவர்கிட்டதானே பத்திரப்பதிவு செஞ்சோம். சின்ன வயசா இருந்துதே?''
''சந்தானம் இவங்களோட பையனாம்... வீட்டை தன் பெயருக்கு மாத்தி எழுதி வாங்கிட்டான். கொஞ்சம் பணம், பென்ஷனோட பக்கத்திலிருக்கிற முதியோர் இல்லத்தில் இவங்கள விட்டுட்டு, வெளிநாடு போய் விட்டானாம்.''
''கேட்பதற்கே அதிர்ச்சியாக இருக்கு. என்னங்க, இப்ப வீட்டை நம்மகிட்டேர்ந்து திருப்பி வாங்க வரலியே?'' என்றாள், சரஸ்வதி.
''சே சே... அவங்களுக்கு அந்த எண்ணம் இல்லை. பண தேவையும் இருக்காது. பையன் தந்த அதிர்ச்சியில், அவங்களோட புருஷன் இறந்து போயிட்டாராம். அவரோட உயிர், நம் பால்கனிக்குப் பக்கத்தில இருக்கிற அறையில தான் பிரிஞ்சுதாம்...
''இன்னிக்கு, அவரோட நினைவு நாள். அந்த அறையில் ஒரு சின்ன தீபம் வச்சு பிரார்த்திக்கணுமாம்... அதை எப்படி கேட்கறதுன்னு தெரியாம தயங்கி நின்னுகிட்டு இருந்தாங்களாம். வேற வழியில்லாம இன்னிக்கு எப்படியும் கேட்கணும்ன்னு விடிகாலையிலேயே எழுந்திரிச்சு வந்துருக்காங்க,'' என்றான், சீதாராமன்.
''பாவம், அவங்கள உள்ள கூப்பிடுங்க... பிரார்த்தனைதானே, பண்ணிட்டுப் போயிடட்டும்.''
கையைத் துாக்கி ஆசிர்வாதித்தபடியே வந்த பெண்மணிக்கு, சரஸ்வதியும் வணக்கம் சொன்னாள்.
மலர்ந்த முகம். அகன்ற கண்கள். கழுத்தில் ஒரு மெல்லிய தங்க செயின். சிவந்த வதனம். ஒருகாலத்தில் செல்வச் செழிப்புடன் விளங்கிய அத்தனை அடையாளங்களும் அந்தப் பெண்மணியிடம் இருந்தன. அந்த முகம் பரிட்சயமானதாக இருந்தது.
ஸ்டோர் ரூமில் பார்த்த புகைப்படத்தில் அந்த பெண்மணி இருந்தார்.
விரக்தி புன்னகையுடன், ''பெயர் மங்களாதேவி,'' என்றார்.
ஸ்டோர் ரூமில் பார்த்த பெயர் பலகையும் நினைவிற்கு வந்தது, சரஸ்வதிக்கு.
மங்களா தேவியை உள்ளே அழைத்துச் சென்றாள், சரஸ்வதி.
பால்கனிக்கு அருகேயிருந்த அறையில், ஒரு அகல் விளக்கை ஏற்றினார்; மவுனமாக தியானத்தில் அமர்ந்தார், மங்களா தேவி.
''இந்த வீட்டுக்கு மருமகளாய் சின்ன பெண்ணாய் வந்தேன். என்னோட உயிரும் இங்கேதான் பிரியணும்ன்னு நெனைச்சேன்... கடவுளோட சித்தம் வேற மாதிரி இருக்கு,'' பெருமூச்சுடன் சொன்னாள், மங்களா தேவி.
அவர், தன் மகனைப் பற்றி எந்தக் குறையும் சொல்லாததை, சரஸ்வதி கவனிக்காமல் இல்லை.
கிளம்ப எத்தனித்தார்.
''அம்மா, ஒரு நிமிஷம் இருங்க... மொதல் தடவையா வந்திருக்கீங்க... ஒரு கப் காபி சாப்பிட்டுப் போங்க,'' அவசரமாக சமையலறையில் நுழைந்து, கணவனையும் சைகையால் அழைத்தாள், சரஸ்வதி.
''என்னங்க, அந்தம்மா நம்மளோடயே இருந்துட்டுப் போகட்டுமே,'' எனக் கூற, சீதாராமனுக்கு தன் செவிகளை நம்ப முடியவில்லை.
''நல்ல குடும்பத்தில இருந்து கொஞ்சம் நொடிஞ்சு போனவங்க... அவ்வளவுதான்.''
''புரியுதுங்க... அவங்கள வேலைக்காரியா வச்சுக்க இல்ல. நாம் இல்லாதப்ப, வீட்டையும், குழந்தைகளையும் பார்த்துக்கற வீட்டு ஆள் மாதிரிதான் வச்சுக்கப் போறோம்... எல்லா வேலைக்கும், வேலைக்காரங்கள வைக்கப் போறோம்... அதையும் சொல்லிடலாம்,'' என்றாள்.
''நீ கேட்டுப் பாரு... அவங்க ஒத்துப்பாங்கன்னு எனக்கு நம்பிக்கையில்ல.''
காபி டம்ளரை அவர் முன் வைத்துவிட்டு, ''தனியா முதியோர் இல்லத்தில இருக்கறத விட, எங்க குழந்தைகளோட இங்க இருந்தா, பொழுது நல்ல முறையில் கழியும். பால்கனி அறையிலேயே நீங்க தங்கிக் கொள்ளலாம்,'' என்றாள், சரஸ்வதி.
முக்கியமாக, அந்த அறையை சரஸ்வதி குறிப்பிட்டவுடனேயே, மங்களா தேவியின் கண்கள் அகல விரிந்ததை கவனிக்காமல் இல்லை.
தான் வேலைக்குப் போவதற்கும், அவர் இருப்பது உதவியாக இருக்கும் என்பதையும் சரஸ்வதி மறைக்கவில்லை.
ஒரு வழியாக ஒத்துக் கொண்டார், மங்களா தேவி.
மங்களா தேவி, அவர்களுடன் தங்கி இரண்டு மாதங்கள் ஆகிவிட்டன. சரஸ்வதியும் வேலைக்குப் போகத் துவங்கினாள். கூட வந்து நின்றாலும், மங்களா தேவியை எந்த வேலையையும் செய்யாமல் கவனமாகப் பார்த்துக் கொண்டாள், சரஸ்வதி.
அவர் இருப்பதன் அருமை, பூர்வா, விக்னேஷ் இருவரின் உடலிலும் சற்று ஆரோக்கியம் தெரிந்தது. மதியம் அவர்கள் சாப்பாட்டை, அவர் கவனிப்பது புலப்பட்டது.
முன்பெல்லாம் குழந்தைகள் வீடு திரும்பியதும் பள்ளி பைகளும், காலணிகளும் மூலைக்கு ஒன்றாய் கிடக்கும். இப்போது அவை தத்தம் இடத்தில் இருக்கின்றன.
இரவில் அவர்களை சாப்பிடக் கூப்பிட்டால், சரஸ்வதி சத்தம் போடுவதற்கு முன் தானாகவே கை கழுவி வந்தனர். 'டிவி'யில் ராமாயண, மகாபாரத தொடர்களை நாட்டத்துடன் கவனித்தனர்.
ஒருநாள், மங்களா தேவி மடியில் குழந்தை விக்னேஷ் படுத்து உறங்குவதை, ஆபீசிலிருந்து திரும்பியதும் கவனித்தாள், சரஸ்வதி.
அவன் தலையை வாஞ்சையுடன் வருடிக் கொண்டிருந்தார், மங்களா தேவி.
வீட்டை விட்டு தன்னை நகரக் கூடாது என்று சொல்லி, குழந்தைகளை பஸ் ஸ்டாப்பிலிருந்து கூட்டி வர மங்களா தேவியே தினம் போவதை விவரித்தான், வாட்ச்மேன்.
மறுநாள் சரஸ்வதியின் பிறந்த நாள். ஆபீசிலிருந்து சீக்கிரமாகவே வந்து, குழந்தைகளை வெளியில் அழைத்துப் போக தீர்மானித்திருந்தனர்.
பலுான்கள், வண்ண வண்ண தோரணங்கள், மேஜையில் ஒரு பெரிய கேக். சரஸ்வதி வெட்டத் தயாராக இருந்தது.
அவள் வீட்டினுள் நுழைந்ததுமே, 'ஹேப்பி பர்த்டே!' சொல்லி குழந்தைகள் வரவேற்றன. அவள் தலையில் கை வைத்து ஆசிர்வாதம் செய்தாள், மங்களா தேவி.
இவை எல்லாம் வாட்மேன் உதவியுடன், ஏற்பாடு செய்திருந்தாள், மங்களா தேவி.
''நான் உனக்காக செஞ்சேன்ம்மா,'' என்று சொல்லி, சரஸ்வதியிடம் ஒரு டம்ளர் பால் பாயசத்தைத் தந்தார்.
அப்படி ஒரு ருசி. ஏலக்காய், பச்சைக் கற்பூர நறுமணம், சரஸ்வதியை எங்கேயோ அழைத்துச் சென்றது. அம்மா வீட்டில் இல்லாமல் வேலைக்குச் செல்கிறாள் என்ற எண்ணமே இல்லாத நிலையைக் காண்பித்தது, குழந்தைகளின் குதுாகலம்.
தயங்கித் தயங்கி, சரஸ்வதி அருகே வந்து ஒரு சின்ன காகிதப் பொட்டலத்தை நீட்டி, ''பிறந்த நாள் பரிசு. உனக்கு என்னோட அன்பளிப்பும்மா வாங்கிக்கோ,'' என்றார், மங்களாதேவி.
''கோவில் பிரசாதாமா?''
வாங்கி பிரித்தாள், சரஸ்வதி. தங்கச் சங்கிலி பளபளத்தது.
சரஸ்வதியின் கண்களில் ஈரம். ஏதோ நினைவிற்கு வர, மங்களா தேவியின் கழுத்தை கவனித்தாள்.
''எதுக்கும்மா இதெல்லாம்?''
''எங்கிட்ட இருந்தது பழைய நகைம்மா... இரண்டு நாள் முன்ன பாலிஷ் போட்டு வாங்கிட்டு வந்தேன். எனக்கு இது இப்ப உபயோகமில்ல. ஒரு பெண் குழந்தையில்லையேங்கிற குறை இருந்தது. அது உன்னால நீங்கியாச்சு... இதை மறுக்காம ஏத்துக்கோ.''
மங்களாதேவியின் காலில் விழுந்த சரஸ்வதி, எழுந்து அவரை அணைத்து கொண்டாள்.
முதுமை ஒரு வரம். முதியோர் கூட இருப்பது ஒரு பெரும் பாக்கியம். ஸ்டோர் ரூம் பக்கம் விரைந்தாள், சரஸ்வதி.
புருவத்தை நெறித்தபடி பார்த்துக் கொண்டிருந்தான், சீதாராமன்.
சரஸ்வதி திரும்பியபோது, அவள் கரங்களில் பழைய பெயர் பலகை. நன்றாக கழுவித் துடைத்து, காய வைத்தாள்.
சுத்தியலும், ஆணியும் தந்து, வாட்ச்மேனை உடனே அடிக்கச் சொன்னாள்.
'மங்களா நிவாஸ்' பெயர்ப் பலகையை கண்களில் ஈரம் பொங்க கவனித்துக் கொண்டிருந்தார், அந்த முதிய பெண்மணி.

ஜி.குமார்
மின்னணு பொறியியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றவர். பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். மத்திய பிரதேசம் போபால் நகரில் வசிப்பவர். சிறுகதைகள் மற்றும் ஆன்மிக கட்டுரைகள் எழுதுவது இவரது பொழுதுபோக்கு.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (7)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankar - chennai,இந்தியா
23-நவ-202101:34:44 IST Report Abuse
sankar சிறந்த சிறுகதை, இறுதியில் என் கண்ணும் கலங்கியது. அதுவே கதையாசிரியரின் வெற்றி எனலாம் . வாழ்த்துக்கள் திரு குமார்
Rate this:
Cancel
Girija - Chennai,இந்தியா
22-நவ-202120:52:36 IST Report Abuse
Girija கதையில் வரும் கரரெக்டர்களை மட்டும் எடுத்து கொள்ளுங்கள், ஒரு வயதான அம்மா அந்த வீட்டை மங்களமாக மாற்றுகிறாள். இதுதான் கூட்டு குடும்பதின் மாமனார், மாமியார் பலன். அவர்கள் அன்புடனும் அதிகாரத்துடனும் நல்லது செய்வதை பொறுத்துக்கொள்ள முடியாமல், உணரமுடியாமல் அவர்களை இழிவாக பேசியும் ஒதுக்கியும் தள்ளுகின்றனர் ஆரம்பத்தில். ஆனால் அவர்கள் நம் கூட இருந்து, நமக்கு 40 வயது ஆகும்போது தான் அவர்கள் அருமை புரியும். கதைகளில் வரும் அம்மாவை போல் அவர்கள் அமைதியாக இருக்கமாட்டார்கள் தான் ஆனால் நமக்காக பாடுபடும் தெய்வங்கள் அவர்கள். வீட்டில் எல்லாம் சரிவர நடக்கிறதா என்பதை உறுதி செய்துகொண்டே இருப்பார்கள். அவரவர் வெளியே போனால் நேரத்திற்கு வீட்டிற்கு வரவேண்டும், நைட் ஷோவிற்கு நோ, சுற்றுலா , மற்றும் நண்பர்கள் வீட்டு வெளியூர் திருமணதிற்கு போவதற்கு ஆயிரம் யோசனை செய்தபின்தான் அனுமதி என்று பிள்ளையையும் மருமகளையும் கண்டிப்புடன் நடத்துவார்கள். அபோது புரியாது அவர்களை ஒதுக்கிவிட்டால் , பின்னாளில் அவர்கள் நம்முடனேயே இருந்திருந்தால் இப்பொழுது வாழ்க்கை எவ்வளவு எளிதாக இருந்திருக்கும் என்று இப்போது வருந்துவர்கள் பலர்.
Rate this:
Cancel
M Selvaraaj Prabu - Gaborone,போஸ்ட்வானா
22-நவ-202117:15:31 IST Report Abuse
M Selvaraaj Prabu எப்பொழுதோ ஒரு முறைதான் இது போன்ற கதைகள் வருகின்றன. எழுத்தாளருக்கு வணக்கங்களும், வாழ்த்துக்களும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X