விஜய் சேதுபதியின், கதை இலாகா!
கோலிவுட் சினிமாவில், சிறிய கேரக்டர்களில் நடித்து, குறுகிய காலத்தில் முன்னணி, 'ஹீரோ' ஆனவர், விஜய் சேதுபதி. ஆனால், தமிழ் தவிர மற்ற மொழிகளிலும் நடிக்கத் துவங்கியவுடன், கதைகளில் அவர் சரியானபடி கவனம் செலுத்தாததோடு, தன் உடல் எடை அதிகரிப்பதைப் பற்றியும் கவலைப்படாமல் நடித்து வந்தார். தற்போது சில படங்கள் அடுத்தடுத்து சறுக்கி விட்டதையடுத்து, வித்தியாசமான கதை தேர்வையும், எடை குறைத்து, 'ஸ்லிம்'மாகும் முயற்சியிலும் இறங்கியுள்ளார். அதோடு மாறுபட்ட கதைகளை தேர்வு செய்வதற்காக, ஒரு கதை இலாகாவையும் நியமித்துள்ளார்.
— சினிமா பொன்னையா
ஆண்ட்ரியா, 'ஹாட் நியூஸ்!'
சமீபகாலமாக நடிகையரின் வேடந்தாங்கலான மாலத்தீவுக்கும் அடிக்கடி, 'விசிட்' அடிக்கிறார், ஆண்ட்ரியா. அப்படி செல்பவர், சினிமாவை மிஞ்சும் செக்ஸியான புகைப்படங்களை எடுத்து, அங்கிருந்தபடியே சுடச்சுட ரசிகர்களுக்கு வலைதளத்தில் விருந்து படைக்கிறார். மேலும், ஹாலிவுட் நடிகையரை மிஞ்சும் வகையில், 'ஜிகுஜிகு' உடையில், 'ஜில்'லென, 'போஸ்' கொடுக்கும் ஆண்ட்ரியா, 'வரும் காலங்களில், சினிமாவில் என் இன்னொரு முகத்தை பார்க்கப் போகிறீர்கள். அதற்கான ஒத்திகை தான் மாலத்தீவில் நடக்கிறது...' என்று, ரசிகர்களுக்கு,
'ஹாட் நியூஸ்' வெளியிட்டு, எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளார். இன்னும் இன்னும் இருக்கிறது, தேருக்குள் சிங்காரம்!
— எலீசா
'சரக்கு பார்ட்டி இல்லை!'- ரைசா வில்சன்!
ரைசா வில்சனின் கண்கள் எப்போதுமே போதை ஏற்றும் வகையில் இருப்பதால், அவர் சதா சரக்கிலேயே மிதப்பது போன்று, ரசிகர் வட்டாரத்தில் செய்தி பரவிக் கிடக்கிறது. ஆனால், இந்த சேதி, ரைசாவின் கவனத்துக்கு சென்றதை அடுத்து, தடாலடியாக மறுத்து, 'சரக்கடிக்கும் பழக்கமே எனக்கு கிடையாது. என் கண்களுக்கு போதை ஏற்றுவது போன்ற ஒரு வசீகரத்தன்மை உண்டு. அது, இயற்கை கொடுத்த வரம். அதனால், என்னை 'சரக்கு பார்ட்டி' என்று, யாரும் தவறாக கருத வேண்டாம்...' என்று, விளக்கம் கொடுத்துள்ளார். பார்க்கிற கண்ணுக்குக் கேட்கிற செவி பொல்லாதது!
- எலீசா
நாய் சேகர் படக்கதை கசிந்தது!
நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தில், ஐந்து நாய்களுடன், வடிவேலு, 'போஸ்' கொடுக்கும், 'பர்ஸ்ட் லுக்' போஸ்டர் வெளியானதை அடுத்து, இப்போது அப்படத்தின் கதை குறித்த ஒரு தகவலும் கசிந்துள்ளது. அதாவது, இந்த
படத்தில் பணக்காரர்களின் வீடுகளில் வளர்த்து வரும் நாய்களை திருடி வந்து, மற்றவர்களுக்கு விற்பனை செய்வது போன்ற ஒரு வேடத்தில், வடிவேலு நடிப்பதாக தெரிய வந்துள்ளது. அந்த வகையில், இந்த படத்தில், ஏராளமான நாய்கள், வடிவேலுவுடன் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றன. அந்த நாய்களுடன் அவருக்கு ஒரு பாடலும் உள்ளதாம்.
— சி.பொ.,
மிரட்டி சம்பாதிக்கும், ராகவா லாரன்ஸ்!
தொடர்ச்சியாக, 'ஹாரர்' கதைகளாக நடித்து வரும், ராகவா லாரன்சிடம், 'தொடர்ந்து ஒரே மாதிரியாக நடித்தால், ரசிகர்களுக்கு போரடித்து விடாதா?' என்று கேட்டனர். அதற்கு, 'தொடர்ந்து ஒரே மாதிரியான கதைகளை கொடுத்தால் தான் போரடிக்கும். ஆனால், 'ஹாரர்' என்ற, 'ட்ராக்'கில் மாறுபட்ட கதைகளாக கொடுத்தால், ஒருநாளும் போரடிக்காது. இப்போது கூட, விட்டலாச்சாரியார் காலத்து கதைகளை, நவீன தொழில் நுட்பத்தில் கொடுத்தாலும், மக்கள் ரசிக்கத்தான் செய்வர். பேய், பிசாசு குறித்த பயம் மக்களிடத்தில் இருக்கும் வரை, 'ஹாரர்' கதைகளுக்கு மவுசு இருந்து கொண்டே தான் இருக்கும். படத்துக்குப் படம், அவர்களை மிரட்டியே சம்பாதிக்கலாம்...' என்கிறார், லாரன்ஸ்.
- சினிமா பொன்னையா
சினி துளிகள்!
* கடந்த, 40 ஆண்டுகளாக சினிமாவில் காமெடி, குணசித்ர வேடங்களில் நடித்து வரும் கோவை சரளா, பிரபு சாலமன் இயக்கும் படத்தில், பாட்டி வேடத்தில் கதையின் நாயகியாக நடிக்கப் போகிறார்.
* ஜோதிகா, நயன்தாரா போன்ற நடிகையர் தயாரிப்பாளராகவும் களமிறங்கியுள்ள நிலையில், அமலாபாலும், காடவர் என்ற படத்தை தானே தயாரித்து, நடித்து வருகிறார்.
அவ்ளோதான்!