அன்புள்ள அம்மா -
எனக்கு வயது: 29. திருமணமாகி நான்கு ஆண்டுகள் ஆகின்றன. நான் எம்.எஸ்சி., - பி.எட்., படித்தவள். கணவரின் வற்புறுத்தலுக்காக வேலைக்கு போகாமல் இருக்கிறேன். ஓவிய ஆசிரியராக பணியாற்றுகிறார், கணவர்.
எங்களுடையது பாதி காதல் திருமணம். திருமணத்திற்கு முன் கணவருக்கு குடி பழக்கமில்லை. கடந்த இரண்டு ஆண்டுகளாக குடிக்கிறார். முதலில் கொஞ்சமாக குடித்தவர், இப்போது அதில் மூழ்கி தத்தளிக்கிறார்.
குடித்து விட்டு வரும் கணவரை பல வகைகளில் கண்டித்து பார்த்து, தோற்றுப் போனேன். குடிக்காத போது சாந்தமூர்த்தியாக இருப்பவர், குடித்தவுடன் ருத்ரமூர்த்தியாக மாறி விடுகிறார்.
உலகத்திலுள்ள எல்லா கெட்ட வார்த்தைகளையும் பேசுகிறார். ஆடைகளை கழற்றி போட்டு நிர்வாணமாய் ஆடுகிறார். என்னை அடிக்கிறார். வீட்டிலுள்ள பண்டபாத்திரங்களை போட்டு உடைக்கிறார். வீட்டில் கண்ட இடங்களில் வாந்தி எடுக்கிறார். ஊரை சுற்றி கடன்.
குழந்தை பிறக்காததற்கு நான் தான் காரணம் என சாடுகிறார். நகைகளை எல்லாம் விற்று விட்டார். பொறுத்துப் பார்த்தேன்; இவரை மிரட்டி திருத்துவதற்காக காவல் நிலையத்தில் புகார் கொடுத்தேன்.
காவல் நிலையத்தின் உதவி ஆய்வாளருக்கு வயது 40 இருக்கும். கணவரை கூப்பிட்டு கண்டித்தார். என் மொபைல் எண்ணை வாங்கியவர், என்னுடன் அடிக்கடி பேச ஆரம்பித்தார்.
'அந்த குடிகாரப் பயலை பத்தி இனி கவலைப்படாதே. அவனை, உன் வாழ்க்கையிலிருந்து அடிச்சு நிரந்தரமா விரட்டி விடறேன். இனி, உனக்கு அனுசரனையா நான் இருப்பேன். நீ இம்னு ஒரு வார்த்தை சொல்லு, நாம சேர்ந்து வாழலாம். உன்னை ராணி மாதிரி வச்சு காப்பாத்துறேன்'னு பேசுகிறார்.
'என்னை விட்ருங்க சார்... நீங்க நினைக்கிற மாதிரி பொண்ணு நானில்லை. கணவன் இல்லாத வாழ்க்கையை என்னால கனவில் கூட நினைச்சு பார்க்க முடியாது. இனிமே என் கூட பேசாதீங்க சார்'ன்னு கண்டிப்பாக சொல்லிட்டேன்.
ஆனாலும், தொடர்ந்து பேசுகிறார்.
குடிப்பழக்கத்தை வெகுவாக குறைத்து விட்ட கணவர், 'நான் திருந்திட்டேன். இனி குடிக்க மாட்டேன். அந்த போலீஸ்காரனோட பசப்பு வார்த்தையை நம்பி ஏமாந்திராதே.
'எதுக்கு போலீஸ் ஸ்டேஷனுக்கு போன... நீயே என்னை நாலு அறை அறைஞ்சு குடிக்காதடான்னு சொல்லி இருக்கலாமே...' என, காலில் விழுந்து கதறுகிறார்.
கணவருக்கு போன் செய்து, 'மரியாதையா உன் பொண்டாட்டிய விட்டுட்டு ஓடி போய்டு. இல்லேன்னா நாலு சந்தேக கேஸ்ல உன் பேரை சேர்த்து, கம்பி எண்ண வச்சு, வாழ்க்கையை நாசம் பண்ணிடுவேன்...' என, மிரட்டுகிறார், உதவி ஆய்வாளர்.
அதன்பின் நான்கைந்து தடவை, கணவர் வீட்டில் இல்லாதபோது, என் வீட்டுக்கு வந்து போய் விட்டார், உதவி ஆய்வாளர்.
'என் ஆசைக்கு இணங்கலைன்னா உங்க ரெண்டு பேர் வாழ்க்கையையும் நாசம் பண்ணி விடுவேன்...' என மிரட்டுகிறார்.
தற்கொலை செய்து கொள்ள மனம் துாபமிடுகிறது. உதவி ஆய்வாளர் விஷயத்தில் நான் என்ன செய்ய வேண்டும் என, தகுந்த ஆலோசனை கூறுங்கள் அம்மா.
- இப்படிக்கு,
அன்பு மகள்.
அன்பு மகளுக்கு -
ஒரு மனிதனின் உண்மையான சுயரூபம் தெரிய வேண்டும் என்றால், அவனிடம் அதிகாரத்தை கொடு என்பர். சட்டத்தை பரிபாலனம் செய்யும் அதிகாரத்தை அரசு, ஒரு மிருகத்திடம் கொடுத்து விட்டது. அந்த மிருகம் உடலிச்சையை தீர்த்துக்கொள்ள பதவியை பயன்படுத்துகிறது.
'நரிக்கு நாட்டாமை கொடுத்தால் கிடைக்கு இரண்டு ஆடு கேட்குமாம்' என்ற கதையாய் இருக்கிறது, காவல்துறை உதவி ஆய்வாளரின் நடவடிக்கைகள்.
இனி நீ எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை பட்டியலிடுகிறேன்...
* நீ இப்போது இருக்கும் வீட்டை காலி செய்து, கணவன் வேலை செய்யும் பள்ளியில் இருக்கும் குடியிருப்புக்கோ அல்லது பள்ளிக்கூடம் அருகில் இருக்கும் வாடகை வீட்டுக்கோ குடிபெயர்
* காவல்துறை உதவி ஆய்வாளர், உன் வீட்டுக்கு வந்து பாலியல் தொல்லை தருவதை அக்கம்பக்கத்தினருக்கு தெரிவி. உதவி ஆய்வாளர் பேசுவதை வீடியோ எடு. அந்த வெறி நாயை அக்கம்பக்கத்து வீட்டினர் மிரட்டி, அடித்து விரட்டுவர்
* காவல்துறை உதவி ஆய்வாளரிடம், 'நீ, இனி என் வீட்டுக்கு வரக்கூடாது. வந்தால் உனக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் எடுப்பேன். உன் சீருடையை கழற்றுவதோடு மூன்று ஆண்டுகள் ஜெயிலில் களி திங்க வைப்பேன்...' என, எச்சரி
* உன் எச்சரிக்கைக்கு பின்னும், அந்த தெரு நாய் உன்னை தொந்தரவு செய்தால், கணவருடன் சென்று, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் கொடு. குறைந்தபட்ச தண்டனையாக உதவி ஆய்வாளரை ஆயுதபடைக்கு மாற்றுவார், காவல்துறை கண்காணிப்பாளர்
* உன் மாவட்டத்தில் மகளிர் காவல்நிலையம் இருந்தால், அங்கு உதவி ஆய்வாளரின் துர் நடத்தையை புகார் செய்
* காவல்துறை கண்காணிப்பாளர் எந்த நடவடிக்கையும் எடுக்கா விட்டால், நேரடியாக, 'சிஎம் செல்'லுக்கு புகார் செய்
* தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையம், சேப்பாக்கம் சென்னை - 5 முகவரிக்கு, புகார் மனுவை அனுப்பு. அவர்கள் கடுமையான நடவடிக்கை எடுப்பர்.
* தமிழக சட்ட உதவி ஹெல்ப்லைன் எண் 1800 425 2411. இந்த எண்ணுக்கு பேசி, சட்ட உதவி பெறலாம். தமிழக அரசின் பெண்கள் அவசர உதவி எண்கள் 1091, 044 23452365 முதலியவற்றை தொடர்பு கொண்டும் உதவி பெறலாம்
* இபிகோ 509ன் படி, அந்த உதவி ஆய்வாளர் பதவியை இழந்து மூன்று ஆண்டு தண்டனையும் பெறுவார். உன் சட்ட போராட்டத்தை செய்திதாள் மூலம் அறிந்து, தாமாக நீதிமன்றமே வழக்கு பதிந்து, உதவி ஆய்வாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வாய்ப்பிருக்கிறது.
நவீன கண்ணகி தனக்கு மனைவியாக வாய்த்துள்ளாள் என்பதை, கணவன் உணர்ந்து குடியிலிருந்து முழுமையாக விலகட்டும்.
- என்றென்றும் தாய்மையுடன்,
சகுந்தலா கோபிநாத்.