மயிலு!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 நவ
2021
00:00

ஊரும் சதமல்ல உற்றாரும் சதமல்ல

படுக்கையிலிருக்கும் சாந்தம்மா, என்னைப் பார்க்க விரும்புவதாக செய்தி வந்ததும், திகைத்தேன்.
சாந்தம்மா, என்னைப் பெறாத தாய். அவர் கரங்களில் தான் வளர்ந்தேன். ராஜா என்று கரம் நீட்டி என்னை அணைத்துக் கொண்டவர்.
விதவையான என் தாய், புகுந்த வீட்டுக்காரர்களால் ஏமாற்றப்பட்டு, 'உனக்கு சொத்து கிடையாது...' என்று, ஐந்து வயதுச் சிறுவனான என்னையும் வெளியேற்றிய பின், அடைக்கலம் தந்தது, என் தாயின் நாத்தனார், சாந்தம்மாவின் வீடு தான். அதாவது, என் மாமாவின் வீடு.
வீடு முழுவதும் உறவினர்கள், நண்டும் சிண்டுமாக வீடு கொள்ளாக் குழந்தைகள் கூட்டம். சாந்தாம்மாவை, யாரும், அத்தை, சித்தி, பெரியம்மா உறவுமுறை சொல்லி அழைக்க மாட்டோம். அனைவருக்கும் அவர், சாந்தம்மா தான்.
சாந்தம்மா, பெரிய பணக்காரி. கிராமத்திலேயே மிகப்பெரிய வீடு, மாமாவுடையது. அந்தக் கால கட்டடம். கொல்லைப்புறம் போகவே, கூடத்தில் அரை மைல் நடக்க வேண்டும்; நடுவில் பாதுகாப்புக்காக, கிரில் போடப்பட்ட முற்றம். இந்த முற்றத்திலிருந்தபடி நாங்கள் கிரஹணம் பார்ப்போம், நிலாவைத் தரிசிப்போம்.
தோட்டத்தில், மா, பலா, தென்னை மரங்கள்; விதவிதமான பூச்செடிகள். வீடு முழுவதும், நெல்லு குத்த, இயந்திரத்தில் மாவரைக்க வேலைக்காரர்கள்.
வயலில் விளைந்த நெல்லை, மூட்டை மூட்டையாக, குத்தகைதாரர் கொண்டு வந்து தர, சாந்தம்மா அதை அரிசியாக்கி, பிறகு சில மூட்டை நெல்லை அவித்து புழுங்கரிசி ஆக்குவார். இது மட்டுமல்ல, ஆமணங்குக் கொட்டைகளை வேக வைத்து காய்ச்சி, விளக்கெண்ணை எடுப்பார்.
ஞாயிறு தோறும் நாங்கள் அனைவரும் வரிசையில் நின்று விளக்கெண்ணை அருந்த வேண்டும். அதன் பிறகு, குடல் சுத்தமாக, கடுக்காய் கஷாயம். பகல், 12:00 மணிக்கு தான் தயிர் சாதம் கிடைக்கும். அதற்கு முன் எத்தனை முறை வெளிக்குப் போனோம் என்கிற, 'ரிப்போர்ட்' தரவேண்டும்.
இந்தக் கண்டிப்பிலும் ஒரு தாயன்பு இருந்தது.
வீட்டுத் தொழுவத்தில் இரண்டு பசு மாடுகள். காலை - மாலை இரு வேளையும் வந்து, பால் கறப்பார்; பண்ணை ஆள். மாட்டின் காம்புகளுக்கு விளக்கெண்ணை தடவாமல் விட மாட்டார், சாந்தம்மா. கன்றுக் குட்டியை முதலில் நிறைய பால் குடிக்க அனுமதிப்பார். சீமாட்டுப் பாலை உபயோகிக்காமல், அக்கம் பக்கத்தினருக்கு தந்து விடுவார்.
வீட்டிலேயே ஒரு விவசாய அறை. அந்த அறையைத் திறந்தாலே, வயக்காட்டில் நுழைந்த வாசம் வரும்.
அனைவரையும் வரிசையாக அமரச் செய்து, ஒரு பெரிய போஸியில் கெட்டித் தயிர் சாதம் எடுத்து வருவார், சாந்தம்மா. ஆளுக்கு ஒரு கவளம், ஒவ்வொரு கவளத்திலும் வற்றல் குழம்பு, வடுமாங்காய் அல்லது நார்த்தங்காய் ஊறுகாய் வைத்துத் தருவார்.
அமிர்தமாக இருக்கும். எங்கள் முறைக்காகக் காத்திருப்போம். நீ, நான் என்று போட்டி போடுவோம். முன்புறம் வந்து விழும் நாகப்பாம்பு போன்ற பின்னலை பின்னே தள்ளி விட்டபடியே, அவர் எங்களுக்கு அமுது படைப்பார்.
இவை, என் இளமைக் கால நினைவுகள். சாந்தம்மாவிற்குக் குழந்தைகள் இல்லை. அது ஒன்று தான் சோகம். தன் புகுந்த வீட்டு உறவுகளுடன் முடங்கியவர்.
காலம் மாற, காட்சிகள் மாற, உறவுகள் விலக, என் மாமா இறந்த பிறகு முற்றிலுமாகத் தனிமையாகி போனார், சாந்தம்மா. என்னுடன் மட்டும் அவ்வப்போது மொபைலில் பேசுவார்.
'ராஜா, ஒரு தடவை இங்கே வாயேன்...' என்றார்.
போக ஆசை தான். ஆனால், பெரிய கார்ப்பரேட் கம்பெனியில் வேலை. நிறைய பொறுப்பு இருந்ததால், என் காலம் ஓடி விட்டது. கிட்டத்தட்ட, 40 வயதாகி விட்டது. திருமணம் செய்து கொள்ளவில்லை. அதற்கு அவசியம் ஏற்படவில்லை.
'பார்ட்டி'களில் பல விஷயங்கள் கிடைத்து விடுகின்றன. இதற்காக உறவுச் சிக்கலில் மாட்டி, பந்தம் பாசம் என்று, 'சென்டிமென்டாக' என்னை ஒரு கூட்டுக்குள் அடைத்துக் கொள்ளாமல் வாழப் பழகி விட்டேன். இது எனக்கு வசதி கூட. அவ்வப்போது சாந்தம்மா என் நினைவுகளில் வருவார். மன்னிப்பு கேட்டு, என் பணியைத் தொடர்வேன்.
இன்று...
சாந்தம்மாவிற்கு உடல்நலக் கோளாறு. 10 ஆண்டுகளுக்கு முன், என் தாய் இறந்தபோது, கொள்ளி போடப் போனதோடு சரி. மாமாவின் மரணத்துக்கு கூட போக முடியவில்லை. இன்று போயே ஆக வேண்டும். கிளம்பினேன்.
பல ஆண்டுகளுக்குப் பிறகு அந்தக் கிராமத்தில் காலடி எடுத்து வைத்தேன். ஊரே மாறி இருந்தாலும், எங்கள் வீடு மட்டும் மாறவில்லை. காரணம், சாந்தம்மாவின் மரணத்திற்குப் பிறகு தான் அந்த வீட்டைத் தொட முடியும். அதனால் தான், பழமை காப்பாற்றப்பட்டிருக்கிறது.
டாக்சியில் வந்து இறங்கிய என்னை, சில பழைய வேலையாட்கள் அடையாளம் கண்டு, கை கூப்பினர். புதியவர்கள் கேள்விக்குறியுடன் பார்த்தனர்.
உள்ளே நடந்தேன். இந்தக் கூடத்தில் தான் நானும், நண்பர்களும் ஓடிப் பிடித்து விளையாடுவோம். இந்த ரேழியில் தான், என் தாயைக் கிடத்தி இருந்தனர். ஒதுங்கி நடந்தேன். இந்த முற்றத்தில் தான் நிலா சோறு சாப்பிட்டிருக்கிறோம். இந்தத் துாண்களில் மறைந்து, 'நான் இங்கே இருக்கேன்...' என, கைத் தட்டி சாந்தம்மாவை அழைத்து, கண்ணாமூச்சி விளையாடி இருக்கிறேன்.
''வந்துட்டியா ராஜா?''
''இது... சாந்தம்மா தானா?'' திடுக்கிட்டேன்.
கட்டிலில் கிடந்த எலும்புக் கூட்டை கட்டிக் கொண்டு அழுதேன்.
என்ன கோலம் இது, 70 வயதில் இப்படி ஒரு அடையாள மாற்றமா?
''ராஜா, அன்னிக்கு உனக்கு சாதம் ஊட்டினேன். இப்ப எனக்கு கஞ்சி தர்றியா?''
''சாந்தம்மா, உன் அழகான தலைமுடி என்னாச்சு... ஏன் தலையை மழுங்க மொட்டையடிச்சிருக்கே... வெள்ளைப் புடவை, என்ன கோலம் இது... கிராமத்துக்காரங்க ஏதும் கட்டாயப்படுத்தினாங்களா?'' எதுவும் புரியாமல் புலம்பினேன்.
''இல்லப்பா, இது எனக்கு நானே தந்துகிட்ட தண்டனை... உங்க மாமா இறந்த பிறகு, நானே பண்ணின தீர்மானம்.''
''உன் கூந்தல் எத்தனை அழகு, சாந்தம்மா... நீ, எங்களுக்கு சாதம் போடும்போது, முன்னால வந்து விழற கூந்தலை ஒதுக்கிட்டு சோறு போடுவியே, அதை இழக்க எப்படி மனசு வந்தது?''
இதற்குள் வேலைக்கார அம்மா ஒரு போஸியில் கஞ்சி கொண்டு வர, ஸ்பூனில் நான் எடுத்து தந்ததைப் பருகியபடியே, ''உன் மாமா, என்னை, மயிலுன்னு கூப்பிடுவார். ஆண் மயிலுக்குத் தான் தோகை இருக்கும்; நீ, தோகையுள்ள பெண் மயிலுன்னு சொல்வார்...
''தோகை கனக்கறதேன்னு மயில் கண்ணீர் விடறதில்லை... ஆனா, நான் அழுதேன். ஒரு நல்ல நாள் பார்த்து, என் தலை முடியை எடுத்தேன். பாரம் குறைஞ்ச நிம்மதி,'' என்றார், சாந்தம்மா.
''சாந்தம்மா, உனக்கு ஒரு வாரிசு இல்லாமப் போயிட்டதே.''
''பிள்ளை இருந்தாத்தான் கொள்ளி போடுவானா... நீ போட மாட்டியா?''
''ஐயோ, அதுக்கில்லை சாந்தம்மா... ஒரு வாரிசு வேண்டாமா?''
சாந்தம்மா சிரித்தார்.
''எப்படி வாரிசு பிறக்கும், நான் தான் பெரியவளே ஆகலியே...''
அதிர்ந்தேன்.
''யாருக்குமே தெரியாது... எங்கம்மா, ஏமாத்தி கல்யாணம் கட்டிக் கொடுத்துட்டாங்க... விஷயம் தெரிஞ்சப்போ, மாமா கோபப்படலை. 'ஹார்மோன் டிரீட்மென்ட்' பயன் தரலை. 'நமக்குக் குழந்தையே வேண்டாம்; உனக்கு நான், எனக்கு நீ'ன்னு சொன்னவர், கடைசி வரை கல்யாணமே பண்ணிக்கலை.
''ஊரும் சதமல்ல உற்றாரும் சதமல்ல. பட்டினத்தார் பாடல் போல, குட்டியாடு தப்பி வந்தா, குள்ள நரிக்கு சொந்தம்... குள்ள நரி மாட்டிக்கிட்டா, குறவனுக்குச் சொந்தம். யாருக்கு யார் சொந்தம்? ஆறடி நிலம் தான் அனைவருக்கும் சொந்தம்,'' என்றார், சாந்தம்மா.
பொய்யுடலைப் பார்த்த நான், மெய்யுடலை தரிசித்த அந்த மேன்மக்கள் பார்வைகளின் கோணல்கள், கோணங்கள்...
மழித்த தலையும், வெள்ளைப் புடவையுடன் சலமனமற்றுக் கிடந்த சாந்தம்மாவைப் பார்த்து, அழுதேன். என் கைகளில், சாந்தம்மா கனக்கிறார். நான் ஒரு துாசு.
சமுத்திரத்தில் ஒரு அலை வற்றினால் சமுத்திரம் வற்றிவிடாது.
எங்கோ ஒரு தோகை மயில் அகவுகிறது.

மணிரங்கு

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (4)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Velu Mandhimuthiriyar - COIMBATORE,இந்தியா
23-நவ-202122:26:54 IST Report Abuse
Velu Mandhimuthiriyar குழந்தைகளை சீராட்டி வளர்த்த அம்மா, தான் தாயாக முடியாமல் போன சோகக் கதையை சொன்னது ரொம்பவும் சோகம்தான்.... ஆனாலும் இது ரொம்பவும் அரிது... இதை கொஞ்சம் இன்னும் நன்றாக வேறுமாதிரி சொல்லியிருக்கலாம்...
Rate this:
Cancel
M Selvaraaj Prabu - Gaborone,போஸ்ட்வானா
22-நவ-202117:03:27 IST Report Abuse
M Selvaraaj Prabu என்ன சொல்ல வருகிறார் என்றே தெரியவில்லை. (எழுத்தாளருக்கும்தானோ?) ஆமாம், //'பார்ட்டி'களில் பல விஷயங்கள் கிடைத்து விடுகின்றன// கார்போரேட்டில் என்ன நடக்கிறது என்று தெரிகிறதா? 40 வயது காரனுக்கு "எல்லாம்" பார்ட்டியில் கிடைக்குதாம்.
Rate this:
Cancel
S.K. Praba - Madurai,இந்தியா
22-நவ-202113:56:18 IST Report Abuse
S.K. Praba பெண்மை உணர்வோடு படித்தால் மயில் ஒரு ராஜ பறவை. கூட்டத்தோடு இருந்தாலும் அழகு தான். தன்னந்தனியாக இருந்தாலும் அழகு தான்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X