அம்பிகா - அர்ச்சனா - ஆராதனா! (9)
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 நவ
2021
00:00

முன்கதை சுருக்கம்: தன் வீட்டிலேயே ஒரு அறையை விக்ரமுக்கு ஒதுக்கி கொடுத்தாள், அர்ச்சனா. அவள் மனதில் காதலை உருவாக்கி, வேலை விஷயமாக வெளியூர் செல்வதாக கிளம்பினான். பெட்டியிலிருந்து அவன் எடுத்து பார்த்த புகைப்படத்தில், 'ஆராதனா' என எழுதப்பட்டிருந்தது -

பைக்கில் வந்து கொண்டிருந்த ராஜேஷின் மொபைல் ஒலித்தது. வண்டியை ஓரமாக நிறுத்தி, மொபைலை எடுத்து பார்த்தான். விக்ரம் அழைக்கவே, ''சொல்லுடா,'' என்றான்.
''ஓ ராஜேஷா! எந்தா சுகந்தன்னே... வளர சந்தோஷம்,'' என்று விக்ரம் பேசியதும், ''டேய் டேய்... நீ திருவனந்தபுரம் வந்துட்டேன்னு தெரியுது... அரைகுறையா மலையாளத்துல பேசி கொல்லாதே,'' என்றதும் இருவரும் சிரித்துக் கொண்டனர்.
''கேரளா ரொம்ப ரம்மியமா இருக்கு டா.''
''கேரளாவுக்கு, 'டூர்' போன மாதிரி பேசுறியேடா... போன வேலைல கவனம் இருக்கட்டும்.''
''ஓ.கே., ஓ.கே., படபடன்னு செய்யற வேலை இல்லையே இது... மண்ணை குழைச்சு நிதானமா பானையாக மாற்றணும்.''
''புரியுது; அப்பப்போ,
'டெவலப் மென்டை' சொல்லு. வேற
என்ன விஷயம்?''
''இங்க அரிசி பெருசு பெருசா இருக்கு டா.''
''ரொம்ப முக்கியம். ஊருக்கு வா கொல்றேன் உன்னை,'' என்றான், ராஜேஷ்.

தம்பனுார் பஸ் நிலையம் அருகில் அமைந்திருந்தது, அந்த நட்சத்திர ஹோட்டல். கீழ் தளத்தில் கட்சிக் கூட்டம், முதல் மாடியில் திருமண நிகழ்ச்சி என, வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக இருந்தது.
இனிமையான நாதஸ்வர இசை, ஹோட்டல் வரவேற்பறையில் பரவி இருந்தது. வேலை செய்பவர்கள் எல்லாரும் ஸ்டார் ஹோட்டலுக்கு உண்டான சிரித்த முகத்துடன் பரபரப்பாக இருந்தனர்.
அந்த ஹோட்டலின், 'எக்ஸிக்யுடிவ் ஹவுஸ்கீப்பர்' ஆக இருந்தாள், ஆராதனா. அதிக பொறுப்புகள் நிறைந்த வேலை. 'ஹோட்டல் மேனேஜ்மென்ட்' படிப்பு முடித்து, கிடைத்த முதல் வேலை. தமிழ், ஹிந்தி தவிர மலையாளமும் தெரிந்திருந்ததால் வேலையும் சுலபமாக இருந்தது; ஊரும் பிடித்திருந்தது.
நான்காம் மாடி வராண்டா வழியே நடந்து, சுத்தம் செய்யும் அறைகளை பார்த்துக் கொண்டே வந்தாள், ஆராதனா. அப்போது, அவள் மொபைல் ஒலித்தது.
'ஏன் பாட்டி கூப்பிடறாங்க...' என நினைத்தபடி, ''ஹலோ பாட்டி,'' என்றாள்.
''ஆராதனா... தாத்தா கீழே விழுந்துட்டார்மா... ஆஸ்பத்திரியில் சேர்த்திருக்கு.''
''ஐயையோ... எந்த ஆஸ்பத்திரி பாட்டி?'' என்றாள் பதட்டமாக.
அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் வேறு உடை மாற்றி, வேகமாக படிகளில் இறங்கி, 'கார் பார்க்கிங்' நோக்கி ஓடினாள்.
'பேஸ்மென்ட் பார்க்கிங்' முழுவதும் கட்சிக்காரர்கள் வண்டிகள். தன் காரை வெளியே எடுப்பதற்குள் வியர்த்து விறுவிறுத்து விட்டது. மனம் போன வேகத்தில் கார் போக முடியவில்லை. கடும் போக்குவரத்து நெரிசல்.

புட்டு, கடலை, கட்டஞ்சாயா, ஜன்னல் வழியே வெளியே பார்ப்பது என, 10 நாளாக ஒரு சராசரி ஹோட்டலில் சிங்கிள் அறை எடுத்து, அமைதியாக ஓய்வெடுத்தான், விக்ரம்.
அடுத்தநாள், 'ஆராதனாவை சந்திக்க வேண்டும். பேச வேண்டும். என்ன வழி? அவள் மொபைல் நம்பர் இருக்கிறது. ஆனால், அறிமுகம் இல்லாமல் எப்படி பேசுவது...' என, யோசித்தபடி நடந்தவன் மீது வேகமாக வந்த ஆட்டோ உரசி போனது.
''ஏய்,'' என்று விக்ரம் கத்த, நிறுத்தாமல் போன ஆட்டோக்காரன் கையை மட்டும் வெளியே நீட்டி மலையாளத்தில் எச்சரித்தபடி போனான்.
விக்ரமின் கையில் லேசாக தோல் பிய்ந்து ரத்தம் வந்தது. முதலுதவி செய்து கொள்ள அருகில் இருந்த மருந்து கடைக்கு சென்றான். கடை அருகே போகும்போது, அவன் மேல் இடிப்பது போல் ஒரு கார் வேகமாக வந்து, மருந்துக்கடை பக்கத்தில் இருந்த ஆஸ்பத்திரிக்குள் திரும்பியது.
'ஏன் எல்லாரும் என் மேலேயே இடிக்க வர்றாங்க. இறங்கட்டும் திட்டலாம்...' என விக்ரம் பார்த்திருக்கும் போது, காரிலிருந்து அவசரமாக இறங்கி உள்ளே ஓடினாள், ஆராதனா.
'நான் சந்திக்க நினைத்த ஆராதனா...'
என்று எண்ணியபடி, ஆஸ்பத்திரிக்குள் போனான். அவளை பார்த்த சந்தோஷத்தில் முழங்கை எரிச்சல் கூட குறைந்தது போல் இருந்தது.
''கிருஷ்ணன் குட்டி எந்த அறையில் இருக்கார்?'' வரவேற்பறையில் விசாரித்தாள், ஆராதனா.
''அறை எண் 32, மூணாவது மாடி, வலது பக்கம்.''
உதவியாளர் முடிப்பதற்குள் ஓடினாள், ஆராதனா. அவள் விசாரித்தது, விக்ரம் காதில் விழுந்தாலும், மீண்டும் ஒருமுறை வரவேற்பறையில் விசாரித்து, வேகமாக மாடிக்கு ஓடினான். 30, 31, 32 என, பார்த்துக் கொண்டே வந்த போது, பின்னாலிருந்து, ''என்ன வேணும்?'' என்று விசாரித்தாள், ஒரு நர்ஸ்.
''அது வந்து... கையில் சின்ன காயம், 'க்ளீன்' பண்ண,'' என்றபடி, 32 நம்பர் அறையை பார்த்தான்.
அதே வரிசையில் இருந்த முதலுதவி அறைக்கு அவனை கூட்டி போய் பஞ்சால் துடைத்து சுத்தம் செய்து, 'டிஞ்சர்' போட்டாள். அவன் இருப்பு கொள்ளாமல் எட்டி எட்டி பார்த்துக் கொண்டிருந்தான்.
''ஓ.கே.,'' என்றாள், நர்ஸ்.
''எனக்கு ஒண்ணுமே இல்லைமா... கால் வழுக்கிச்சு, உட்கார்ந்துட்டேன். பாட்டி கலாட்டா பண்ணிட்டா,'' என்றார், தாத்தா.
''எதுக்கு நீங்க மொட்டை மாடிக்கு போகணும், விழணும்... பாதி வேலையிலேயே ஓடி வரேன்.''
''ஆராதனா... ஒருநாள் ஓய்வு எடுத்துட்டு வீட்டுக்கு போகலாம். ஒண்ணும் பிரச்னை இல்லைன்னு டாக்டரே சொல்லிட்டார். போதுமா?''
''சரி... நான் கீழே போய் பழம், ஹார்லிக்ஸ் எல்லாம் வாங்கிட்டு வரேன்,'' ஆறுதலாக தாத்தாவின் கையை தடவிக் கொடுத்தபடி சொன்னாள்.
''அதெல்லாம் நர்ஸ்கிட்ட கேட்டு நாங்க வாங்கிக்கறோம். ஒரு முக்கியமான விஷயம். நான் சொன்னேனே. துரைராஜ் பையன் வினோத்துக்கு உன்னை பேசலாம்ன்னு...''
அவர் முடிக்கும் முன், ''தாத்தா... அந்த பேச்சை இப்போ எடுக்காதீங்க. சும்மா இருங்க,'' என்றாள்.
''இல்லைம்மா. அந்த பையன் ஏதோ வேலையா இங்க வர்றானாம். உன்னை பார்த்து பேசணும்ன்னு சொன்னானாம்.''
அவள் கிண்டலாக ''வெரி குட்... ஹோட்டல் பேர், என்னோட வேலை, ஆபீஸ் நேரம், எல்லாத்தையும் அவனுக்கு சொல்லுங்க. என் மானம் போகட்டும். என்ன தாத்தா நீங்க... இத பாருங்க, என் கல்யாணத்த நானே முடிவு பண்ணிப்பேன்; நீங்க சிரமப்பட வேண்டாம். புரியுதா?''
தாத்தா எதுவும் பேசவில்லை.
''முதல்ல டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு வர வழி பாருங்க. நான் வேலையை முடிச்சிட்டு சாயங்காலம் வரேன். பாட்டி பாத்துக்குங்க,'' என்று கிளம்பினாள்.
அதே அறையின் வாசலில்
மொபைலில் எதையோ பார்ப்பது போல பாவனை செய்து கொண்டிருந்த விக்ரம், இவர்கள் பேசியதை ஒன்று விடாமல் கவனித்துக் கொண்டான்; எல்லாமே தனக்கு சாதகமாக அமைகிறது என, சிரித்துக் கொண்டான்.
- தொடரும்

கோபு பாபு

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X