பயனர்கள், தங்களுடைய பதிவில் இசையை கோர்த்து பகிரும் வசதியை 'இன்ஸ்டாகிராம்' வழங்க உள்ளது. முதல் கட்டமாக இதற்கான சோதனை முயற்சிகள் இந்தியா, பிரேசில், துருக்கி ஆகிய நாடுகளில் மேற்கொள்ளப்பட உள்ளதாக, இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மக்கள் தங்கள் விருப்பங்களை பகிரவும், இணைக்கவும், வெளிப்படுத்தவும் இசை என்பது முக்கிய பங்கு வகிக்கிறது என்பதால், அந்த வசதியை வழங்க இருப்பதாக தெரிவித்துள்ளது.
இந்த பரிசோதனையின் வாயிலாக, இன்ஸ்டாகிராம், அதன் வாடிக்கையாளர்களுக்கு தங்களுடைய புகைப்படங்களில் ஒலிப்பதிவைச் சேர்ப்பதற்கான வாய்ப்பை வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது 'மெட்டா' என அழைக்கப்படும் 'பேஸ்புக்', பல முயற்சிகளை இந்தியாவில் முதலில் அறிமுகம் செய்துள்ளது.
கடந்த ஆண்டு, 'ரீல்ஸ்' எனும் புதிய பார்மெட்டை அறிமுகம் செய்தது. இதன் வாயிலாக, பயனர்கள் சிறிய வீடியோக்களை பகிரலாம். இந்த வசதி முதலில் அறிமுகம் ஆன நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இதேபோல 'கொலாப்' எனும் புதிய வசதியையும் இந்தியாவில் பரிசோதித்து வருவதாக தெரிவித்திருந்தது.
இசை கோர்ப்புக்கான புதிய முயற்சியில், பயனர்கள் ஒரு பாடலை கிளிக் செய்தால், அது ஒரு ஆடியோ பக்கத்துக்கு எடுத்து செல்லும். அங்கே இந்த பாடலை பயன்படுத்தி பகிரப்பட்ட பதிவுகள் அனைத்தையும் காணலாம். சோதனை முயற்சியில் இருக்கும் இந்த புதிய வசதி, விரைவில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.