வணக்கம்; நான் தமயந்தி நாராயணசாமி. கடலுார் மாவட்டம் விருத்தாச்சலம், கொட்டாரகுப்பம் ஆர்.கே. பூராசாமி நினைவு ஆரம்ப பள்ளியின் முன்னாள் தலைமை ஆசிரியை; நான் ஓய்வு பெற்று 17 ஆண்டுகள் ஆயிருச்சு!
அன்று...
அது 1970 காலகட்டம்; செவிவழி கல்வியை விட விழிவழி கல்விக்கு அதிக முக்கியத்துவம் இருந்தது! நெல் விளைச்சலை வயல்ல பார்த்து மாணவர்கள் கத்துக்கிட்டாங்க; பணிவோட பெருமையை நெற்கதிர் புரிய வைச்சது. இந்த தலைமுறைக்கு இப்படியான கற்றல் வாய்ப்புகள் இல்லை!
நல்லாசிரியர்
'குளத்துல நம்ம சங்கர் மூழ்கிட்டான் டீச்சர்'னு ஒரு மாணவன் ஓடி வந்தான். அதுவொரு விடுமுறை நாள். பதற்றத்தோட கிளம்பினேன்; எல்லாருமா சேர்ந்து அவனை காப்பாத்திட்டோம். இன்னைக்கு, 'உங்க பிள்ளை சிங்கப்பூர்ல நல்லா இருக்கான் டீச்சர்'னு அவங்க அம்மா சொல்றப்போ விருது வாங்குற மாதிரி இருக்கு!
தெரியாது = பலம்
'ஆசிரியர்னா எல்லாம் தெரிஞ்சிருக்கணும்'னு அவசியமில்லை; ஆனா, தெரியாததை தெரியாதுன்னு ஒத்துக்க பழகியிருக்கணும். இந்த குணத்தை மாணவர்கள் ரசிப்பாங்க; நாமும் வளர்த்துக்கணும்னு ஆசைப்படுவாங்க! இது என் அனுபவம் மட்டுமில்லை... ஆழமான உண்மை!
புதிய ஜன்னல்
ஆசிரியர் பணியில இருக்குற எல்லாரும் ஓய்வு நேரத்துல ஏதாவது புதுசா வாசிச்சுட்டே இருக்கணும்; ஆசிரியர்களோட இந்த அறிவு, மாணவர்கள் உலகத்தை பார்க்கிறதுக்கான புது ஜன்னல்!
அரசியல் படி
அன்றாட செய்திகளை மாணவர்கள் தெரிஞ்சுக்கணும்; சம்பவங்களோட பின்னணியை சந்தேகப்படணும்; அரசியல்வாதிகளோட வார்த்தைகளை நம்பாம செயல்பாடுகளை ஆராயணும்; 'நேர்மையான அரசியல்'ங்கிறது செயல்தான்!
குற்றவாளி
'மாணவர் - ஆசிரியர்' சம்பந்தப்பட்டது மட்டுமில்லை கல்வி; பெற்றோருக்கும் இதுல முக்கிய பங்கிருக்கு. இந்த ஊரடங்கு காலத்துல தங்களோட பெயர்களை பிழையில்லாம எழுதுறதைக் கூட குழந்தைகள் மறந்திருக்காங்கன்னா இந்த குற்றத்துல பெற்றோர்களுக்கும் பங்கிருக்கு!
கொடும் வலி
'கணவன் இல்லை; மகன் வேலைக்குப் போனாத்தான் வீட்டுச்சூழலை சரி பண்ண முடியும்'னு நல்லா படிச்சிட்டிருந்த ஒரு பையனை அவன் அம்மா பள்ளியில இருந்து கூட்டிட்டுப் போனப்போ, தடுக்க முயற்சி பண்ணினேன்; ஆனா, 'நீ விட்டிருக்கக் கூடாது தமயந்தி'ன்னு இன்னமும் மனசு உறுத்திட்டே இருக்கு!
எச்சரிக்கிறேன்
அனுபவம்தான் வாழத் துாண்டும்; இந்த அனுபவத்தை நட்புதான் தரும். இதுக்கு, நண்பர்களோட மனம் விட்டு நிறைய பேசணும். 'நீ என்ன கேம் விளையாடுறே; என்ன சீரிஸ் பார்க்குறே'ங்கிற பழகுதல்... படுகுழி; எச்சரிக்கிறேன்.