அந்துமணி பா.கே.ப.,
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 நவ
2021
00:00

பா - கே

நீண்ட நாட்களுக்கு பின், நண்பர்கள் அனைவரும், 'பீச்'சில் கூடியிருந்தோம். 'ஜில்'லென்ற குளிர்காற்றும், அங்கு கூடியிருந்த மக்களின் ஆரவாரமும் மனதிற்கு இதமாக இருந்தது.
'சூர்யா நடித்து சமீபத்தில் வெளியான, ஜெய் பீம் படத்தை பற்றி ஏகப்பட்ட விமர்சனங்கள் வெளி வருகிறதே...' என்று பேச்சை ஆரம்பித்தார், குப்பண்ணா.
'உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து படத்தை எடுத்துள்ளனர். நடந்ததை அப்படியே காட்டுவதற்கு அது என்ன, ஆவணப்படமா? 'கமர்ஷியல் வேல்யூ'காக சில, பல விஷயங்களை கூட்டுவதும், குறைப்பதும் சகஜம் தானே... இதையெல்லாம் பெரிசுபடுத்திட்டு, வேண்டாத வேலை... வேறு விஷயம் ஏதாவது இருந்தால் பேசுங்கப்பா...' என்றார், கடுப்பாக லென்ஸ் மாமா.
எங்களுடன் இருந்த நண்பர் ஒருவர், மலைவாழ் மக்கள் பற்றி ஆய்வு செய்து, பல புத்தகங்களை எழுதி இருப்பவர். அவர், 'நீலகிரி மலைவாழ் மக்களான படுகர் பற்றி, நான் நேரில் பார்த்ததை சொல்லவா?' என்று லென்ஸ் மாமாவை பயத்துடன் பார்த்தபடி கேட்டார்.
'சொல்லுங்க, சொல்லுங்க...' என்று கோரசாக பதில் வரவே, கூற ஆரம்பித்தார்:
படுகர்கள் வாழும் இடங்களை, 'ஹட்டி' என்று அழைக்கின்றனர். ஒவ்வொரு, 'ஹட்டி'யிலும், நான்கு, ஐந்து தெருக்களைக் காணலாம். தெருக்களை எல்லாம் காலை, 6:00 மணிக்கே முறைவைத்து, சுத்தம் செய்து விடுகின்றனர்.
ஒவ்வொரு வீட்டின் உள்ளேயும் பெரிய பெரிய அறைகளை காணலாம். ஒவ்வொரு குடும்பத்தினரிடமும் ஒரு பசுவும், எருமையும் கண்டிப்பாக இருக்கும். அவற்றின் பாலை வைக்க, தனி அறையோ அல்லது தனி இடமோ ஒவ்வொரு வீட்டிலும் இருக்கிறது. அந்தப் பகுதிக்கு பருவமடைந்த பெண்கள் போகக் கூடாது. ஆண்களும் குளிக்காமல் அந்த பால் அறைக்குள் போகக் கூடாது.
படுக இன பெண்கள், பெரிய காப்பு, தோடு, மோதிரம், மூக்குத்தி என, இன்னும் பல நகைகளை அணிகின்றனர். பெரிய துண்டை மார்பில் போர்த்தியபடி, மார்பில் ஒரு கயிற்றாலும், இடுப்பில் ஒரு கயிற்றாலும் கட்டிக் கொள்கின்றனர். இதை, 'ஓடமுண்டு' என்கின்றனர். தலையிலும் ஒரு சிறிய வெள்ளைத் துண்டை கட்டிக் கொள்கின்றனர்.
வளர்ந்த பெண்கள், நெற்றியில் தங்களுக்கு பிடித்த மாதிரி பச்சை குத்திக் கொள்கின்றனர். சிலர் உடம்பிலும் பச்சை குத்திக் கொள்கின்றனர். இந்த சடங்கு, படுக பெண்களுக்கு, 8 அல்லது 9 வயதில் செய்யப்படுகிறது. இப்படி செய்வது, அவள், திருமணம் செய்ய தகுதியானவள் என்பதை காட்டுகிறதாம்.
இவர்கள், வெண்கலப் பாத்திரத்தில் சாப்பிடுகின்றனர்.
வீட்டுவிலக்கான நாட்களில் படுக பெண்கள், காலையில் குளித்த பிறகே சாப்பிடுவர். அந்த நாட்களில் பகலில் தனி குடிசையில் இருந்தாலும், இரவில் வீட்டு திண்ணையில் தான் படுத்துக் கொள்வர். ஏழாம் நாள், ஓடும் தண்ணீரில் குளித்து வீட்டுற்குள் போகும் வரை, குழந்தைகள் கூட தொட மாட்டார்கள்.
திருமணத்தின் போது, பரிசு பொருட்கள் அதிகமாக எதிர்பார்க்காவிட்டாலும், மணப்பெண், மாதத்திற்கு 200 ரூபாய் மதிப்புள்ள வேலைகளை வயலில் செய்வாளா என்பதை முக்கியமாக பார்ப்பர். அதை தான் அவர்கள் வரதட்சணை போல் கருதுகின்றனர்.
மாப்பிள்ளை வீட்டார் மணப்பெண்ணை முதலில் தங்களது வீட்டிற்கு இரவில் தான் அழைத்து வருவர். அப்போது, மணமக்கள் பெயர்கள் சேர்த்து இட்டு கட்டி, பாட்டு பாடி அழைத்து வரும் வழக்கம் இன்றும் உள்ளது. படுகர்களில் விதவைகள் என்று யாரும் இல்லை. விதவைகளை மறுமணம் செய்து கொள்வதை தர்மமாக கருதுகின்றனர்.
ஊர் மணியக்காரருக்கு தான் அதிகாரம் அதிகம். மணியக்காரர் தீர்ப்பு சொல்வதில் கருத்து வேறுபாடு ஏற்பட்டால், ஊர் பஞ்சாயத்தை கூட்டுவார். பஞ்சாயத்தின் போது, தலைவர்கள் தீர்ப்புச் சொல்ல தடுமாறினால், 'சீகூர் மாரியம்மன் கோவிலில் சத்தியம் செய்கிறாயா?' என்று கேட்பர்.
குற்றவாளி ஒப்புக் கொண்டால், கோவிலுக்கு அழைத்து செல்வர். சத்தியம் செய்ய வேண்டியவர், அங்கு எரியும் விளக்கின் முன், தன் பக்க நியாயத்தை சொல்லி அணைத்து விடுவார். சத்தியம் உண்மையாக இருந்தால் தீங்கு ஏற்படாது. ஆனால், குற்றவாளி பொய் சத்தியம் செய்திருந்தால், அவனுக்கு கண்கள் குருடாகிவிடும் என்ற நம்பிக்கை உள்ளது.
கோர்ட்டில் வழக்கு போடப்பட்டாலும், சீகூர் அம்மன் கோவிலில் சத்தியம் செய்ய, நீதிபதியிடம் அனுமதி வாங்குவது உண்டாம்.
அவர்கள் இனத்தில் யாராவது இறந்து விட்டால், ஏகப்பட்ட சடங்குகள் பின்பற்றப்படுகின்றன...
- இவ்வாறு நண்பர் கூறிக் கொண்டிருந்த போது, 'போதும்பா... ஓவர் டோஸ் உடம்புக்கு ஆகாது...' என்று, 'பிரேக்' போட்டார், லென்ஸ் மாமா.
'இப்பவும் அப்படிப்பட்ட வழக்கங்கள் அவர்களிடம் உள்ளனவா...' என்றேன்.
'பல ஒழிந்து விட்டாலும், பாரம்பரியத்தை காக்கும் வகையில் உள்ள சடங்குகளை இன்னும் பின்பற்றத்தான் செய்கின்றனர்...' என்று முடித்தார், நண்பர்.ஒரு பெரிய பிசினஸ்மேன், ரயில் பயணம் போகும்போது, செய்தித்தாளை வைத்து மிகவும் சுவாரசியமாக படித்துக் கொண்டே போவாராம். செய்தித்தாளில் அப்படி என்ன சுவாரசியம்ன்னு எட்டிப் பார்த்தால், அதன் உள்ளே ஒரு காமிக்ஸ் புத்தகத்தை வச்சி படிச்சுட்டு இருப்பாராம்.
'ஏன் இப்படி?' என்று கேட்டால், 'என் மனசு லேசா இருப்பதற்கு, இது ரொம்ப உதவியாக இருக்கும்...' என்பார்.
சரி போகட்டும். சிரிப்புன்னா, எல்லா விதமான தமாசும் உடம்புக்கு நல்லதுன்னு நினைக்கக் கூடாது. அமெரிக்காவைச் சேர்ந்த, ஜேம்ஸ் கரோல் என்ற உளவியல் நிபுணர் என்ன சொல்றார் தெரியுமா? அடுத்தவங்களை தொந்தரவு பண்ணாத ஜோக்குகள் தான் எப்பவும் நல்லது. யாராவது ஜோக் சொன்னா தாராளமா சிரிக்கணும்.
ஒரு முறை, தன் நண்பரை அழைச்சிக்கிட்டு என்னிடம் வந்தார், ஒருவர். தன் முகத்தை ரொம்ப, 'சீரியசா' வச்சிக்கிட்டிருந்தார், அவருடன் வந்தவர்.
'என்னங்க விஷயம்?'ன்னு விசாரிச்சேன்.
'சார்... இவரு கூட ஒரு பெரிய ப்ராப்ளம்...' என்றார், அழைத்து வந்தவர்.
'என்ன?' என்றேன்.
'ஏதாவது ஒரு ஜோக் சொன்னா, உடனே சத்தம் போட்டு சிரிக்க ஆரம்பிச்சிடுவாரு சார்...' என்றார்.
'ஜோக்கை கேட்டு சிரிக்க ஆரம்பிச்சா, அது ப்ராப்ளம் இல்லையே...' என்றேன்.
'சிரிக்கறது ப்ராப்ளம் இல்லை. ஆனா, அப்படி ஆரம்பிக்கிற சிரிப்பை அதற்கப்புறம் நிறுத்தவே மாட்டேங்குறார் சார்... அதுதான் பிரச்னையே...' என்றார், அழைத்து வந்தவர்.
எங்கோ, எதிலோ, எப்போதோ படித்தது.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
28-நவ-202104:55:09 IST Report Abuse
NicoleThomson இப்பவும் பேலூர் க்ராஸ் என்ற இடத்தில் ஒரு படுகர் குடும்பம் வயல் வாங்கி செட்டில் ஆகியிருக்காங்க , நமது தமிழர்கள் என்று எங்களுக்குள் ஒரு இணக்கம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X