ஈர மனசுகள்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 நவ
2021
00:00

மொபைல் போன் சிணுங்க, விரைந்து எடுத்தார், வேணுகோபால். வருங்கால சம்பந்தி பெயர் மின்னியது. இதயத்துள் ஒரு மகிழ்ச்சிப் பிரவாகம். அவரே முந்திக்கொண்டு, ''வணக்கம் சம்பந்தி,'' என்றார்.
எதிர் முனையில் மவுனம். ஒருவேளை தன் குரல் கேட்டிருக்காதோ என்று எண்ணி, ''என்ன சம்பந்தி, நான் வேணுகோபால் தான் பேசுறேன்... வணக்கம்,'' என்றார்.
மிகவும் தளர்வான குரலில், ''வணக்கம்,'' என்றார், சபாபதி.
''என்ன சம்பந்தி, குரல் தடுமாறுது... உடம்புக்கு முடியலையா?'' என்றார் பரிவோடு.
''அப்படி ஒண்ணும் இல்ல... நான் நல்லாத்தான் இருக்கேன்,'' என்றார்.
''அப்ப சரி, குரல் சரியில்லேன்னதும் ஒரு சின்ன பதற்றம். என்னவோ ஏதோன்னு எண்ணிட்டேன். ஆமாம் சம்பந்தி, என்ன திடீர்னு... நிச்சயதார்த்தம் பண்ண இன்னும் ஒரு வாரம்தானே இருக்கு. இதையே சிறப்பா பண்ண எண்ணியிருக்கேன். கல்யாணத்தை துாள் கிளப்பிடணும்.''
'உம்... ம்...' என்றார் உற்சாகமற்ற குரலில், சபாபதி.
''என்னாச்சு சம்பந்தி உங்களுக்கு... ஏன், என்னவோ போல இருக்கீங்க... திடீர்ன்னு போன் போட்டீங்க, அப்புறம் பேசத் திணர்றாப்ல தெரியுதே, ஏன்... என்ன செய்தி?'' என்று கேட்டார், வேணுகோபால்.
''மிஸ்டர் வேணுகோபால்...'' என்றவர், மேலே பேச்சைத் தொடராமல் நின்றார்.
நேற்று வரை, சம்பந்தி சம்பந்தி என்று இழைந்தவர், இன்று அந்நியரைக் கூப்பிடுவது போல், மிஸ்டர் வேணுகோபால் என்று கூப்பிட்டதால் குழம்பினார். அவரே பேசட்டும் என்று மவுனமானார்.
''தப்பா நெனைக்காதீங்க மிஸ்டர் வேணுகோபால், நாம சம்பந்தியாய் ஆகிற வாய்ப்பு கை நழுவிப் போயிட்டுது. அதான் பெயர் சொல்லி அழைத்தேன்,'' என்றார் வறண்ட குரலில்.
''எனக்குப் புரியலே. கொஞ்சம் தெளிவாச் சொல்லுங்களேன்,'' என்றார்.
''மிஸ்டர் வேணுகோபால், கல்யாணப் பேச்சு, பேச்சோட நின்னுறட்டும். இனிமேல் அதுக்கு வாய்ப்பே இல்லை; உங்க பெண்ணுக்கு, நல்லதா வேற இடம் பாருங்க. போனை வச்சிடறேன்,'' என்றார், சபாபதி.
''ப்ளீஸ் ஒரு நிமிஷம்... ஒரு காரணமும் சொல்லாம, கல்யாணத்தை நிறுத்தச் சொன்னா எப்படிங்க. ஆற அமர எல்லாத்தையும் பேசித்தானே முடிவு பண்ணினோம். இப்ப திடுதிப்புன்னு வந்து நிறுத்த சொன்னா என்ன நினைக்கிறது...
''நான் வேற இடம் பார்க்கிறது இருக்கட்டும்; அதுக்கு என்ன காரணம்ன்னு சொல்லுங்க. இப்படி மொட்டையாய் சொன்னா, நான் என்னன்னு எண்ணுறது,'' என்றார், வேணுகோபால்.
''மிஸ்டர் வேணுகோபால், யார் பக்கமும் தப்பு இல்லே. ஆனால், இந்த கல்யாணம் நடக்க வாய்ப்பே இல்லை; இப்ப இவ்வளவுதான் சொல்வேன். இதை ஏன் சொல்றேன்னா, நீங்க நம்பிக்கையோட இருப்பீங்க. அதனாலே தான் முன்னெச்சரிக்கை பண்றேன்.
''தவறாய் எதுவும் நினைக்காதீங்க. தயவுசெஞ்சு மனசை மாத்திக்குங்க. உங்க மகள், மிகவும் அருமையான பெண். சுலபமாய் அயனான மாப்பிள்ளை அமைவார். இதை மறந்துட்டு வேற வழில போகப் பாருங்க,'' என்றார்.
''சரிங்க, காரணமே சொல்லாம இப்படி நிறுத்தச் சொல்றீங்களே... நியாயமாங்க?''
''நியாயம் தான். ரொம்பவும் ஆராய்ச்சி பண்ணாம, தயவுசெஞ்சு நான் சொன்னபடி பண்ணுங்க. அதான், உங்களுக்கும், உங்க மகளுக்கும் நல்லது. என் மகனோட உங்க மகள் வாழ முடியாது; சூழ்நிலை அப்படி; புரிஞ்சு நடந்துக்கங்க. நான் போனை வச்சிடறேன்,'' என்றார், சபாபதி.
எவர் மீதும் தவறு இல்லை என்றால், திருமணத்தை ஏன் தடை செய்ய வேண்டும்... நினைக்க நினைக்க கோபம் கூடியது.
''வைங்க... ஆனால், காரணத்தை சொல்லிட்டு வைங்க. நாம சம்பந்தம் பண்ணிக்கப் போறோம்ன்னு ஊர் முழுக்கத் தெரியும். இப்ப திடீர்ன்னு நிறுத்திட்டா, பழி எங்க பேர்ல தான் வரும்.
''கல்யாணம் நின்று போன பெண்ணுக்கு, வேற இடம் தேடுறப்ப, அவங்க ஆயிரம் கேள்வி கேட்பாங்களே... நான் என்ன பதில் சொல்வேன்... என்ன காரணம்ன்னு சொல்ல முடியும்?'' என்று வேதனையோடு கேட்டார்.
மவுனமாக இருந்தார், சபாபதி.
''மவுனமாய் இருந்தால் ஆச்சா... மகளோட கல்யாணத்தை நிறுத்தச் சொல்றீங்க, நிறுத்திடலாம். அப்புறம் என் மகளை வீட்லயேவா வச்சிருக்க முடியும்... ஒருவன் கையிலே ஒப்படைக்க வேண்டாமா...
''அவங்ககிட்டே காரணம் என்னன்னு சொல்லியாகணுமே... ப்ளீஸ், காரணம் என்னங்கிறதைச் சொல்லுங்க,'' என்று வற்புறுத்தினார், வேணுகோபால்.
சிறிது நேரம் மவுனமாக இருந்தவர், ''மிஸ்டர் வேணுகோபால்... காரணம், ஒரு விபத்து,'' என்றார்.
''என்னது விபத்தா, எப்படி, என்னாச்சு?'' என்று பதறினார், வேணுகோபால்.
''களியங்காடு, சிசுரூஷாவுல, 'அட்மிட்' ஆகியிருக்கான்; அவ்வளவுதான். இனிமேல், என்னாலே பேச முடியாது. போனை வைக்கிறேன்,'' என்று, வைத்தே விட்டார்.
''கடவுளே... அது எலும்பு முறிவு ஆஸ்பத்திரியாச்சே,'' என்று அலறிய வேணுகோபால், சபாபதியுடன் பேச முயற்சித்தார். ஆனால், அவர் போனை எடுக்கவில்லை.
'விபத்துன்னு மொட்டையா சொல்லி, போனை வச்சிட்டாரே. 'அட்மிட்' ஆகியிருக்கான்னா அது, கவுதமே தான். அதனாலதான் இப்படி ஒரு முடிவை எடுத்தாரா... கடவுளே, அந்தப் பையனுக்கு என்ன ஆச்சோ?' என்று புலம்பியபடி, சோகமாக சோபாவில் அமர்ந்தார்.
''என்னங்க இது, ஏன் இப்படி உட்கார்ந்திட்டீங்க?'' என்று பதற்றமானாள், மனைவி சாவித்ரி.
திக்கித் திணறி விபத்து குறித்த விபரத்தை கூறினார்.
''ஐயையோ, இப்ப அந்தப் பையன் கவுதம் எப்படி இருக்கானாம்?'' என்று கேட்டாள்.
''முழு விபரம் சொல்லலே... களியங்காடு சிசுரூஷா-ன்னார். அங்கியே போய்ப் பார்த்து, விபரம் தெரிஞ்சுக்கறேன்,'' என்று சொல்லி, உடனே கிளம்பினார்.
கவுதமை போய் பார்த்து வந்தவர், விபரம் எதுவும் கூறாமல் சோகமாய் அமர்ந்திருப்பதைப் பார்த்த சாவித்ரி, பொறுமை இழந்து, ''என்னாச்சுங்க... கவுதம் நல்லாருக்காப்ல தானே,'' என்றாள்.
'இல்லை' என்பது போல், மறுப்பாக தலையை ஆட்டினார்.
''என்னன்னு விபரம் சொல்லுங்க. என் மனசு படபடன்னு அடிச்சிக்கிறது,'' என்றாள், சாவித்ரி.
''விபத்துல கவுதமோட வலது கால் முட்டிக்குக் கீழே, சிதைஞ்சு கூழாய்ப் போயிட்டதாலே அப்பகுதியை நீக்கிட்டாங்க,'' என்றார், வேதனை குரலில்.
''ஐயையோ...'' என்று அலறினாள், சாவித்ரி.
''இனிமேல் செயற்கைக் கால்தான் பொருத்த முடியும். இயல்பாய் நடக்க முடியாதாம். விந்தி விந்திதான் நடக்கறாப்ல இருக்குமாம்,'' என்றார், வேணுகோபால்.
''ஐயோ... இதென்ன கொடுமை,'' என்றவளின் விழிகளில் கண்ணீர்.
''அதனாலதான் கல்யாணத்தைச் நிறுத்தச் சொல்லியிருக்கார், சபாபதி. கால் ஊனமான கணவனோட நம்ப பெண் எப்படி வாழ முடியும்ன்னு எண்ணித்தான், அப்படிச் சொல்லியிருக்கார்,'' என்றார்.
''என்னங்க, அவர் சொல்வதும் சரின்னுதான் படுது. கால் ஊனமுள்ள பையனோட, நம்ப கவிதா எப்படிங்க வாழ்க்கை நடத்த முடியும்? அவருக்கே தாங்கல் தேவைப்படுறப்ப, அவராலே மனைவியை எப்படிங்க தாங்க முடியும்?'' என்றாள், சாவித்ரி.
'மனைவி சொல்வதும் சரிதானே. கவுதம் நல்ல பையன் தான். ஆனால், இப்போது ஊனமுடன் இருக்கிறானே...' நெஞ்சில் அலையடிக்கும் எண்ணங்களுடன், மவுனமானார்.
அலுவலகத்திலிருந்து வந்தாள், கவிதா.
வழக்கம்போல் வாஷ்பேசினில் முகம் அலம்பி, அம்மா தரும் காபிக்காக ஹாலில் அமர்ந்தாள்.
மகளின் முன் சூடான காபியை வைத்தாள். காபி உள்ளே போனதும், சுற்றிலும் பார்வையை ஓட்டினாள்.
அவள் வந்ததுமே வளவளவென்று பேசுவார், அப்பா; காபியை வைத்து விட்டு ஆபீசைப் பற்றிக் கேட்பாள் அம்மா. இருவருமே இதுவரை தன்னிடம் எதுவுமே பேசவில்லையே என்ற வியப்பில், அவர்களை ஏறிட்டாள்.
இருவரின் முகங்களிலும் சோகம்.
ஏன், என்னாச்சு? என்று பார்வையாலேயே கேட்டாள்.
''கவிதா, நடக்கக் கூடாதது நடந்துடுச்சும்மா. மனசைத் தேத்திக்கிறதை தவிர வேற வழி இல்லே,'' என்றாள், சாவித்ரி.
''என்னம்மா சொல்றே?'' என்றாள், கவிதா.
விஷயத்தை கூறினர்.
''வாங்கப்பா... போய் கவுதமை பார்த்துட்டு வரலாம்,'' என்றாள், கவிதா.
''அதான் அப்பா போயிட்டு வந்தாச்சுல்ல, அப்புறம் நீ வேற எதுக்கும்மா?'' என்றாள், சாவித்ரி.
''எல்லாம் ஒரு மரியாதை தான்.''
''அதான் கவுதமோட அப்பா போன் பண்ணி, 'இனிமே நமக்குள்ளே உறவு வச்சிக்க வேணாம்'ன்னு சொல்லிட்டாரே... அப்புறம் ஏன் கவிதா நீ போய் பார்க்கணும்கறே?'' என்றாள், சாவித்ரி.
''உறவு ஆகலேன்னாலும், நமக்கு நல்லா தெரிஞ்ச ஒருத்தர் விபத்துல மாட்டிட்டார். போய்ப் பார்த்துட்டு வரதுதானேம்மா முறை,'' என்றாள்.
''அவங்கப்பாவே வெட்டி விட்டுப் பேசுறப்ப, நாம ஏம்மா போய் ஒட்டிக்கிறாப்ல நடக்கணும்?'' என்றாள், சாவித்ரி.
''சாவித்ரி, வெட்றது ஒட்றதுன்னு ஏன் சொல்றே... அனுதாபத்தோட போய் பார்க்கணும்ன்னு சொல்றா, போயிட்டு வரட்டுமே... கவிதா, நான் வரேம்மா வா,'' என்றார், வேணுகோபால்.
தனக்கிது பிடிக்கவில்லை என்பது போல் முகம்மாறி நின்றாள், சாவித்ரி.
பழங்கள் வாங்கி, அப்பாவும், மகளும் போய் பார்த்து வந்தனர்.
''சரி, போய் பார்த்துட்டு வந்தாச்சுன்னு அதோட விடாம, இன்னமும் என்ன அதைப் பற்றியே பேச்சு?'' என்று சிடு சிடுத்தாள், சாவித்ரி.
''அப்படி விடுறாப்ல இல்லம்மா,'' என்றாள், கவிதா
''என்னடி சொல்றே கவிதா... அப்படி விடுறாப்ல இல்லேன்னா, வேற என்ன செய்யணும்கறே,'' என்று கோபமானாள்.
''இந்த பிரச்னையை மனிதாபிமானத்தோட பார்க்கணும்னு சொல்றேன்,'' என்றாள், கவிதா.
''வேற என்னடி செய்யணும்கறே?'' என்றாள், எரிச்சலுடன் சாவித்ரி.
''அம்மா, இந்த விபத்துல ஒரு சின்ன உயிர் காப்பாற்றப்பட்டிருக்கு. ஆறு வயது சிறுமி ஒருத்தி ரோட்ல போறப்ப, வீல் கழண்டு தாறுமாறாய் ஓடின டெம்போ ஒண்ணு, அவ மேலே ஏத்துறமாதிரி வந்துருக்கு. ஓரமாய்ப் போயிட்டிருந்த கவுதம், ஓடிப் போய் அந்தக் குழந்தையைக் காப்பாத்திட்டார்.
''அப்ப அவரோட வலது கால் டெம்போல மாட்டி சிதைஞ்சுருக்கு; ஒரு சிறுமியோட உயிரைக் காப்பாற்றினதுக்கு, அவர் கொடுத்த விலைதான் அவரோட வலது கால். இப்பவும் கூட ஒரு குழந்தையை காப்பாற்றின சந்தோஷத்தோட இருக்கிறாரே தவிர, கால் போன கவலையே இல்லை.''
''அதுக்காக?''
''அவரோட பெரிய மனசைக் கவுரவிக்க விரும்புறேன்மா... யாரோ ஒரு குழந்தையை அவர் காப்பாற்றி இருக்கார். எனக்காக பேசப்பட்டவருக்கு, வலது காலாய் இருக்க ஆசைப்படுறேன்.''
''கவிதா!''
''நான் செய்யறது சரிதானே அப்பா?'' என்றாள்.
''உன் விருப்பம் கவிதா,'' என்றார், வேணுகோபால்.
''கவுதம் மட்டும் இல்லே, அவரோட அப்பாவும் எவ்வளவு பெரிய மனசோட இருந்திருக்கார். மகனோட வாழ்வை விடவும், பேசி முடிக்கப்பட்ட பெண்ணின் வாழ்வை பெரிசா நினைச்சவரோட ஈர மனசையும் நாம பார்க்கணும்ப்பா.
''இவ்வளவு பெருந்தன்மையானவங்க வாழுற வீட்டுல, நானும் போய் வாழ ஆசைப்படுகிறேன். இதை, நீ முழு மனசோட வரவேற்கணும்மா,'' என்றாள், கவிதா.
சபாபதியை போல உடனே ஒப்புதல் தராவிட்டாலும், சாவித்ரியும் பிறகு ஒப்புதல் தந்து விடுவாள் என்ற நினைப்பிலிருந்தாள், ஈர மனதோடு இருக்கும், கவிதா.


உமா கல்யாணி
வயது: 81. இதுவரை, ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறுகதைகள், 250க்கும் மேற்பட்ட கட்டுரைகள், 25 மாத நாவல்கள் எழுதியுள்ளார். மேலும், வானொலி நாடகங்களும் எழுதியுள்ளார். இவர் எழுதிய, 30 நுால்களை வெளியிட்டுள்ளார். இவரது படைப்புகள், தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. இவரது படைப்புகளுக்காக, பல்வேறு பரிசுகளையும், விருதுகளையும் பெற்றுள்ளார்.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
28-நவ-202104:51:11 IST Report Abuse
NicoleThomson அருமை என்றொரு வார்த்தையை தவிர வேறென்ன
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X