ஸ்ரீராமசந்திர மூர்த்தி அரசாட்சி செய்த காலம். அனைவரும் அனைத்து நலன்களும் பெற்று, வளமாகவும், நிம்மதியாகவும் மனதளவில் கூட, யாருக்கும் எந்தக் கெட்ட எண்ணமும் இல்லாமல் வாழ்ந்தனர்.
ஒருநாள், விவசாயி ஒருவரின் மனைவி, வீட்டின் பின் பக்கத்தில், தங்கக் கிண்ணத்தில் சாதம் போட்டுத் தன் குழந்தைக்கு ஊட்டிக் கொண்டிருந்தாள். குடிக்க நீர் கேட்டது, குழந்தை.
உடனே, சாதமுள்ள தங்கக் கிண்ணத்தைக் கீழே வைத்து, உள்ளே சென்று சில நிமிடங்களில் தண்ணீருடன் திரும்பினாள். குழந்தை அழுது கொண்டிருந்தது. பார்த்தால், தங்கக் கிண்ணத்தைக் காணவில்லை.
கணவரிடம் விபரத்தைச் சொல்லி புலம்பினாள்.
'அழாதே... ஸ்ரீராமர் ஆளும்போது, இப்படித் திருட்டெல்லாம் நடக்காது. எதற்கும் நாளை போய், அரசவையில் ஸ்ரீராமரிடம் முறையிடுவோம்...' என்றார், விவசாயி.
மறுநாள் விவசாயியும், அவர் மனைவியும், அரசவையில் ஸ்ரீராமரிடம், தங்கக் கிண்ணம் காணாமல் போன விபரத்தை சொல்லி, முறையிட்டனர்.
'அமைச்சரே, வீரர்களை அனுப்பி, தங்கக் கிண்ணத்தைத் தேடுங்கள். நாளைக்குள் தங்கக் கிண்ணம் கிடைக்கா விட்டால், அதற்குண்டானதை, தங்கக் காசுகளாக இந்த விவசாயியிடம் வழங்குங்கள்...' என, உத்தரவிட்டார், ஸ்ரீராமர்.
விவசாயியும், அவர் மனைவியும் மகிழ்ச்சியோடு, ஸ்ரீராமரை வணங்கி புறப்பட்டனர்.
அப்போது அரசவைக்குள் துறவி ஒருவர் நுழைந்தார்.
'நேற்று மாலை, நான் மரத்தடியில் அமர்ந்து தியானம் செய்து கொண்டிருந்தேன். மரத்தின் மேலிருந்த குரங்கு ஒன்று, உணவைத் தின்று விட்டு, தங்கக் கிண்ணத்தை என் மேல் போட்டு, போய் விட்டது.
'துறவியான நான், பொன்னாசை கொள்ளக் கூடாது. ஆகையால், அந்தத் தங்கக் கிண்ணத்தை உங்களிடம் சமர்ப்பிக்கிறேன்...' என்று சொல்லி, ஸ்ரீராமர் முன் வைத்து, வெளியேறினார், துறவி.
புறப்பட்டுக் கொண்டிருந்த விவசாயத் தம்பதியரை அழைத்த ஸ்ரீராமர், 'இந்தத் தங்கக் கிண்ணம் உங்களுடையது தானா பாருங்கள்...' என்றார்.
'பிரபுவே, இது எங்களுடையது தான்...' என்றனர்.
அவர்களிடம் தங்கக் கிண்ணத்தை ஒப்படைத்து, அனுப்பி வைத்தார், ஸ்ரீராமர்.
ஸ்ரீராமரை வணங்கி, நன்றி சொல்லி வீடு திரும்பினர், விவசாய தம்பதியர்.
'ராம ராஜ்ஜியம்' என்பது இது தான். ஆட்சியாளர்கள், துறவிகள், செழிப்பான மக்கள் ஆகியோரை பற்றிக் கூறும் இத்தகவல், வால்மீகியோ, கம்பரோ சொல்லாத, கர்ண பரம்பரைக் கதை.
பி. என். பரசுராமன்
ஆன்மிக தகவல்கள்!
அம்பிகைக்கு செம்பருத்தி, செவ்வரளி முக்கியமானவை. சிவப்பு நிற பூக்களே அம்பிகைக்கு மிகவும் ஏற்றவை.