காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத், வா.தி.மாசிலாமணி முதலியார் மேல்நிலை பள்ளியில், 1982ல், ௮ம் வகுப்பு படித்த போது, தலைமை ஆசிரியர் எம்.ஏ.அஜிஸ் அலி. தினமும் காலை கடவுள் வாழ்த்து நிகழ்ச்சியில், செய்தி வாசிக்கும் பணி தந்தார்.
தினமலர் நாளிதழில் முக்கிய செய்திகளை, நோட்டு புத்தகத்தில் குறித்து கொள்வேன். அப்போதை முதல்வர் எம்.ஜி.ஆர்., குறித்து வரும் செய்தியை தவறாமல் வாசிப்பேன். ஒரு திங்கள் கிழமை, 'தமிழக முதல்வர் எம்.ஜி.ராமச்சந்திரன், முதல்வர்கள் மாநாட்டில் பங்கேற்க டில்லி சென்றுள்ளார்...' என வாசித்தேன்.
என்னை அழைத்து, 'இன்றைய தினமலர் நாளிதழில் நீ வாசித்த செய்தி இல்லையே...' என்றார் தலைமை ஆசிரியர். நிதானமாக, 'ஞாயிற்றுக்கிழமை இதழில் வந்திருக்கிறது ஐயா; முதல்வர் நிகழ்ச்சியை அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில் நேற்றைய செய்தியை வாசித்தேன்...' என்றேன்.
அன்று முதல் என்மீது, தனி கவனம் செலுத்தினார். ஒருநாள், வகுப்புக்கு வெளியே மண் தரையில், கைகளை துாக்கியபடி, முட்டி போட வைத்திருந்தார் வகுப்பு ஆசிரியர். இதை கண்டதும், 'ஏன் இந்த தண்டனை...' என்றார்.
நடுக்கத்துடன், 'இன்னும் புத்தகம், நோட்டு வாங்கவில்லை; அதற்காக தண்டனை...' என்றேன். என் குடும்ப வறுமையை அறிந்து, சொந்த பணத்தில், புத்தகம், நோட்டு, சீருடை, பேனா என வாங்கி தந்தார் தலைமை ஆசிரியர்.
பள்ளி படிப்பை முடித்தபோது, ஒரு புகைப்படத்தை காட்டினார். மாணவராயிருந்த போது, நடிகர் எம்.ஜி.ஆரிடம் நற்சான்றிதழ் வாங்கும் காட்சி; அது கண்டு வியந்தேன். என் வயது, 52; தமிழக அரசு பணியாளராக உள்ளேன். ஊழியர் கூட்டுறவு சங்க தலைவராக பல ஆண்டுகள் பொறுப்பு வகிக்கிறேன். என் வாழ்க்கை சிறப்பாக அமைய பிள்ளையார் சுழி போட்ட அந்த தலைமை ஆசிரியரை தினமும் தொழுகிறேன்.
- டீ.ஈஸ்வரன், சென்னை.
தொடர்புக்கு: 94444 34491